வகைப்படுத்தப்படாத

இரவு விருந்தில் டிரம்ப் – ஜின்பிங் சமரசம் அமெரிக்கா-சீனா வர்த்தக போர் முடிவுக்கு வந்தது

பியூனஸ் ஏர்ஸ்: அர்ஜென்டினாவின் பியூனஸ் ஏர்ஸில் நடந்த ஜி20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாடு நிறைவடைந்தது. இதில், அமெரிக்கா -சீனா இடையிலான வர்த்தக போருக்கு தீர்வு காணப்பட்டது.அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் ஜி20 நாடுகளின் 2 நாள் உச்சி மாநாடு கடந்த 30ம் தேதி தொடங்கியது. இதில், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜின்பிங்  உள்ளிட்ட உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.மாநாட்டில் முதல் முறையாக, இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் அமைதி, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மையை வலுப்படுத்த ஜப்பான்-அமெரிக்கா-இந்தியா முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், 12 ஆண்டுக்குப் பின்  ரஷ்யா-இந்தியா-சீனா பேச்சுவார்த்தையும் நடத்தப்பட்டது. மாநாட்டின் இடையே, பிரதமர் மோடி, பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மார்க்கெல் உள்ளிட்ட தலைவர்களையும் சந்தித்து பேசினார். அமெரிக்கா – சீனா  இடையே கடந்த பல மாதங்களாக வர்த்தக போர் நிலவி வந்தது. இதனால், உலக பொருளாதார சந்தையில் பல்வேறு பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளன. பல நாடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக, வளரும் நாடுகள் பல  இன்னல்களை அனுபவித்து வருகின்றன. இந்நிலையில், ஜி-20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன அதிபர் ஜின்பிங் சந்தித்து பேச திட்டமிடப்பட்டது. இந்த சந்திப்பை உலக நாடுகள் பெரிதும் எதிர்பார்த்தன.

எனவே, இரு நாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் ஜி20 மாநாட்டின் மூலம், வர்த்தக போருக்கு முடிவு கட்டப்படுமா என்ற எதிர்பார்ப்பு நிலவியது. அதேபோல், நேற்று முன்தினம் நடந்த டிரம்ப்-ஜின்பிங் இடையேயான இரவு விருந்து  சந்திப்பு நிகழ்ச்சி மிகப்பெரிய வெற்றி அடைந்துள்ளது. சீன பொருட்களுக்கு இனி புதிய வரிகள் எதுவும் விதிக்கப்படாது என டிரம்ப்பும், அமெரிக்காவில் இருந்து கணிசமான பொருட்களை இறக்குமதி செய்ய ஜின்பிங்கும் ஒப்புக்  கொண்டுள்ளனர்.வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 200 பில்லியன் டாலர் மதிப்பிலான சீன பொருட்களுக்கு 10 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக வரியை உயர்த்துவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இந்த முடிவை நிறுத்தி வைப்பதாக டிரம்ப்  தெரிவித்துள்ளார். அதேபோல், சீனாவும் வேளாண், எரிசக்தி, தொழில்துறை உள்ளிட்டவற்றில் கணிசமான இறக்குமதியை அமெரிக்காவில் இருந்து மேற்கொள்வதாக உறுதி அளித்துள்ளது. இது மிகப்பெரிய முன்னேற்றமாக  கருதப்படுகிறது.

உக்ரைன் விவகாரத்தால் புடினுக்கு கடும் நெருக்கடி
உக்ரைன் நாட்டு கப்பல்களை ரஷ்ய ராணுவம் சிறைபிடித்து வைத்திருக்கும் விவகாரம் பெரும் சர்ச்சையாகி உள்ளது. இந்த கப்பல்களை ரஷ்யா விடுவிக்காததால், ஜி20 மாநாட்டில் புடினுடனான சந்திப்பை கடைசி நேரத்தில்  அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். மேலும், புடினை அவர் கண்டுகொள்ளவில்லை. இதற்கிடையே, மாநாட்டின் இரவு விருந்தின் போது, சில நிமிடங்கள் டிரம்ப், புடினுடன் பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து புடின்  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘கருங்கடல் பகுதியில் நடக்கும் சம்பவம் தொடர்பாக டிரம்ப்பின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளேன்’’ என்றார். இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் புடினுக்கு  கடும் அழுத்தம் கொடுத்து வருகின்றன. பிரேசில் அதிபர் மெர்கல், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் ஆகியோர் உக்ரைன் விவகாரத்தில் புடினிடம் கவலை தெரிவித்துள்ளார்.

75ம் சுதந்திர தினத்தை முன்னிட்டு 2022ல் இந்தியாவில் ஜி-20 மாநாடு
ஜி-20 மாநாட்டில் நேற்று  முன்தினம் இரவு நிறைவு விழா நடந்தது. அப்போது, 2022ல் ஜி20 மாநாடு  இந்தியாவில் நடத்தப்பட இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். அடுத்த ஆண்டு  இம்மாநாடு ஜப்பானிலும், 2020ல் சவுதி  அரேபியாவிலும் நடக்க உள்ளது. 2021ல்  இந்தியாவிலும், 2022ல் இத்தாலியிலும் நடக்க இருந்தது. ஆனால், 2022ல்  இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதால், அப்போது இம்மாநாட்டை  நடத்த அனுமதிக்கும்படி  பிரதமர் மோடி, இத்தாலியிடம் கேட்டுக் கொண்டார்.  இந்தியாவின் கோரிக்கையை இத்தாலி ஏற்றுக் கொண்டது. இதற்காக நிறைவு  விழாவில் பிரதமர் மோடி இத்தாலிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அவர் தனது  டிவிட்டர்  பதிவில், ‘சுதந்திரத்தின் 75ம் ஆண்டை பூர்த்தி செய்யும் 2022ம்  ஆண்டு இந்தியாவுக்கு சிறப்புமிக்கது. அதையொட்டி, உலக தலைவர்களை வரவேற்கும்  விதமாக ஜி20 மாநாடு 2022ல் இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. உலகின்   மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ந்து வரும் இந்தியாவுக்கு வாருங்கள்.  இந்தியாவின் வளமிக்க வரலாறு, பன்முகத்தன்மை, விருந்தோம்பலை அனுபவியுங்கள்’  என உலக தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  இரண்டு நாள் உச்சி மாநாடு  நிறைவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு பிரதமர் மோடி பியூனஸ்  ஏர்ஸில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டார்.

வடகொரிய அதிபருடன் ஜனவரியில் டிரம்ப் பேச்சு
பியூனஸ் ஏர்ஸில் இருந்து புறப்படும் முன்பாக அதிபர் டிரம்ப், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ‘‘வடகொரிய அதிபருடனான சந்திப்பு அடுத்த மாதம் அல்லது பிப்ரவரியில் நடக்க வாய்ப்புள்ளது’’ என்றார்.  அமெரிக்காவும், வடகொரியாவும் எதிரும் புதிருமாக இருந்த நிலையில், டிரம்ப்-வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் சந்திப்பு சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்தது. அதன்பின் இரு நாடுகள் இடையே சுமூகமான உறவு நீடித்து  வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிறுமியொருவருக்கு நடந்துள்ள கொடூரம்!!

ஒக்டோபர் 31ல் வாக்காளர் பட்டியல் மறுசீரமைக்கும் பணிகள் பூர்த்தி

வீடுகளின்றி 5 இலட்சத்து 25 ஆயிரம் பேர்