சூடான செய்திகள் 1

பாதாள உலகத்தினரை ஒழித்துக் கட்டுவதற்காக கடுமையான தீர்மானங்கள் அவசியம்- பொலிஸாருக்கு பணிப்பு

(UTV|COLOMBO)-பொலிஸ் திணைக்களத்தின் நடவடிக்கைகளை இன்றிருக்கும் நிலையை பார்க்கிலும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டு வந்து உயர் நியமங்களுடன் கூடிய வினைத்திறனான மக்கள் நட்புடைய சேவையாக அதனை பலப்படுத்த வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

நேற்று (26) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இலங்கை பொலிஸ் சேவையில் உள்ள சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்கள், பிரதிப் பொலிஸ்மா அதிபர்களுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

பொலிஸ் திணைக்களத்தின் மேல் மட்டத்திலிருந்து அனைத்து அதிகாரிகளும் நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் மேற்கொண்டுவரும் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, அது தொடர்பில் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

மிகவும் பலமாகவும் தரமான சேவையாகவும் பொலிஸ் சேவையை மேற்கொள்வதற்காக அத்துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பில் பல்வேறு முன்மொழிவுகள் இதன்போது ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்டன.

பொலிஸ் திணைக்களத்தில் உள்ள அனைவரும் திருப்தியான மனநிலையுடன் தமது கடமைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான பின்புலத்தை அமைத்துக்கொடுக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இத்துறையில் உள்ள அனைத்து பிரச்சினைகளையும் கலந்துரையாடல் மற்றும் உரையாடல்களின் மூலம் தீர்த்துக்கொள்வதற்குள்ள வாய்ப்புகள் குறித்து விளக்கினார்.

மேலும் கீழ் மட்டங்களில் உள்ள பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகள் பற்றி கண்டறிந்து அவற்றுக்கு தீர்வை வழங்குவதற்காக புதிய குழுவொன்றை அமைப்பதற்கு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, சட்டம், ஒழுங்கு தொடர்பான அமைச்சு, பொலிஸ் திணைக்களம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தின் உறுப்பினர்களைக் கொண்ட வகையில் அக்குழுவை அமைக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இன்று போன்று எதிர்காலத்திலும் நாட்டின் முன்னாள் உள்ள சவால்களை விளங்கி திட்டமிட்ட வகையில் பொலிஸ் திணைக்களம் தனது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, பொதுமக்கள் எதிர்பார்க்கின்ற நீதியான, பக்கசார்பற்ற பொலிஸ் சேவையின் அவசியத்தையும் பொலிஸார் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

சட்டவிரோத போதைப்பொருட்களை ஒழிப்பதற்காக இதுவரை முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்து இதன்போது மீளாய்வு செய்யப்பட்டதுடன், கடந்த மூன்று மாத காலப்பகுதியில் சட்ட விரோத போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கை ஒன்றை தனக்கு பெற்றுத்தருமாறும் இன்று முதல் ஒவ்வொரு மாதமும் அந்த அறிக்கையை தமக்கு கிடைக்கச் செய்யுமாறும் ஜனாதிபதி பொலிஸ்மா அதிபருக்கு பணிப்புரை விடுத்தார்.

குற்றங்கள், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் அத்தகைய குற்றங்களை புரியும் குழுக்களை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளின் முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதுடன், பாதாள உலகத்தினரை ஒழித்துக் கட்டுவதற்காக கடுமையான தீர்மானங்களுடன் கூடிய பலமானதொரு நிகழ்ச்சித் திட்டத்தின் அவசியத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, ஜனாதிபதியின் செயலாளர் உதய ஆர்.செனவிரத்ன, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ, பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(அரசாங்க தகவல் திணைக்களம்)

 

 

 

 

 

Related posts

எதிர்க்கட்சி தலைவர் விவகாரம் தொடர்பாக முன்னால் ஜனாதிபதியுடன் நாளை பேச்சுவார்த்தை

27 வகையான மருந்துகளின் விலை குறைக்கப்படும்

டெப் உபகரணத்தினை வழங்குதவற்கு நடவடிக்கை