(UTV|COLOMBO)-முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க போலியான வாக்குமூலம் வழங்கிய சம்பவம் தொடர்பில் அவரின் மகளான ஒனேலா கருணாநயக்க இன்றைய தினம் நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.
கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன பிறப்பித்த உத்தரவுக்கு அமைய அவர் இன்றைய தினம் மன்றில் முன்னிலையாகவுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவில் உண்மைக்கூறுவதாக வாக்குறுதி வழங்கி பொய் கூறியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவிற்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டது.
நீதிமன்ற உத்தரவிற்கு அமைய தாம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் பிரசன்னமாகிய வேளை அதன் அதிகாரிகள், அது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை என ஒனேலா கருணாநயக்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி இதற்கு முன்னர் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார்.
எனினும் பெருமளவான சட்டத்தரணிகளுடன் குற்றப்புலனாய்வு திணைக்கத்திற்குள் செல்வதற்கு வந்திருந்த நிலையில், அனுமதி பத்திரத்தை வழங்கும் வேளையில் அவர்கள் அங்கிருந்து வெளியேறியதாக முறைப்பாட்டாளர்கள் தரப்பில் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டது.
இதன்படி முறைப்பாட்டாளர்கள் தரப்பில் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட விளக்கத்தை கருத்தில் கொண்டு நீதவான் மேற்குறிப்பிட்ட உத்தரவை பிறப்பித்தார்.