சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய சதி – பொலிஸ்மா அதிபரிடம் மக்கள் காங்கிரஸ் நேரில் முறைப்பாடு!!

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வர்த்தக அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித்திட்டம், ஊழல் ஒழிப்பு முன்னணியின் பணிப்பாளர் எனக் கூறும் நாமல் குமாரவினால் அம்பலத்துக்கு வந்த பின்னணியில், பொலிஸ் திணைக்களம் அது தொடர்பில், தீவிர விசாரணைகளை நடாத்தி உண்மைகளைக் கண்டறிந்து, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இன்று (22) முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டுள்ளது.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் பிரதிஅமைச்சருமான அமீர் அலி, கட்சியின் செயலாளர் எஸ்.சுபைர்தீன், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.இஸ்மாயில், சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்டி ஹபீப் மற்றும் மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ் ஆகியோர் இன்று காலை, பொலிஸ் தலைமையகத்துக்குச் சென்று, இந்த முறைப்பாட்டை பதிவு செய்தனர்.

இந்த சதியை வெளிப்படுத்திய நாமல் குமார, மற்றும் இந்த சதியுடன் தொடர்பு பட்டார்கள் என கூறப்படும் முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா, பிரான்சில் வசிக்கும் துஷார பீரிஸ் ஆகியோரிடமும் உரிய விசாரணைகளை நடாத்தி, இந்தச் சதியின் பின்னணி பற்றியும், உண்மைத் தன்மையை பற்றியும் வெளிக்கொணருமாறு முறைபாட்டாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.

அது மாத்திரமின்றி அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை பலப்படுத்துமாறு, பொலிஸ்மா அதிபரிடம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் அமீர் அலி கூறியதாவது,

இந்த சதி முயற்சியை நங்கள் மிகவும் பாரதூரமாகக் கருதுகின்றோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடவும். சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடமும் இது தொடர்பில் நாங்கள் ஏற்கனவே எடுத்துரைத்துள்ள போதும், அரசாங்கம் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பாதுகாப்பை இன்னுமே
பலப்படுத்தாது இருக்கின்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டார் என்ற விடயமும், இன்னுமே துலங்கப்படாத நிலையில், எமது கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீனையும் கொலை செய்து, சமூகங்களுக்கு மத்தியிலே குழப்பத்தை உருவாக்குவதே சதிகாரர்களின் நோக்கம் என்றே புலப்படுகின்றது என்றார்.

மேல்மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் கருத்து தெரிவிக்கையில்,

நாமல் குமாரவின் குரல் பதிவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பெயர் மிகவும் தெளிவாக உச்சரிக்கப்பட்டுள்ளது. அரசியல் படுகொலைகள் குறித்து, நாமல் குமார திடுக்கிடும் தகவல்களை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தி வரும் நிலையில், முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அடிக்கடி வரவழைக்கப்பட்டு, பல மணி நேரம் வாக்கு மூலம் வழங்கி வருகின்றார். இவ்வாறான சதி முயற்சிகளில் சம்பந்தப்பட்டதாகக் கருதப்படும் ஒருவரை, அரசாங்கம் இன்னும் கைது செய்ய ஏன் மறுக்கின்றது? என கேள்வி எழுப்பியதுடன், நாலாக சில்வாவை உடனடியாக கைது செய்ய வேண்டுமெனவும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

-ஊடகப்பிரிவு-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மழையுடன் கூடிய காலநிலை…

பாராளுமன்றம் 7 ஆம் திகதி கூட்டப்படும்-சபாநாயகர்

இன்று முதல் பொசொன் நோன்மதி தினத்தை முன்னிட்டு வட மத்திய பாடசாலைகளுக்கு விடுமுறை