சூடான செய்திகள் 1

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்வதற்கான சதித் திட்டம் – உண்மை நிலையைக் கண்டறியுமாறு ஜனாதிபதி, பிரதமரிடம் மக்கள் காங்கிரஸ் கோரிக்கை..

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியுதீனை மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் வைத்து கொலை செய்ய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டிருந்ததாக, ஊழல் எதிர்ப்பு இயக்கத்தின் பணிப்பாளர் நாமல் குமார வெளியிட்ட தகவல் தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறும், அமைச்சரின் பாதுகாப்பை பலப்படுத்துமாறும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான அப்துல்லாஹ் மஹ்ரூப் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அவர் தனித்தனியாக எழுதியுள்ள கடிதங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

அமைச்சர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்வது தொடர்பாக வெளிவந்துள்ள தகவல்கள் எமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. நாமல் குமார ஊடகங்களுக்கு தெரிவித்த கருத்துக்கள் மிகவும் பாரதூரமானவை. அமைச்சர் ரிஷாட் பதியுதீனை அம்பாறை, மட்டக்களப்பில் வைத்து எப்படியாவது கொலை செய்ய வேண்டுமென்றே இவர்கள் திட்டமிட்டிருக்கின்றனர். சாதாரண விடயமாக இதனைக் கருதாமல் குற்றப்புலனாய்வினருக்கு இது தொடர்பில் அறிவுறுத்தி முறையான விசாரணைக்கு உத்தரவிட்டு, இதன் உண்மைத்தன்மையை நாட்டுத் தலைவர்களான நீங்கள் வெளிப்படுத்த வேண்டும்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது கடந்த காலங்களிலும் வில்பத்து மற்றும் இன்னோரன்ன விடயங்களில் வீண்பழி சுமத்தப்பட்டன. இனவாதிகள் திட்டமிட்டு ஊடகங்களின் ஊடாக தொடர்ச்சியாக அதனை மேற்கொண்டு வந்தனர். தற்போதும் அவர்கள் இந்த பிழையான செயற்பாடுகளை தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் மூலம் சிங்கள சமூகத்தினரிடம் தப்பான எண்ணங்களை உருவாக்கி, அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மீது அவர்கள் மத்தியில் குரோத உணர்வுகளை ஏற்படுத்துவதே இனவாதிகளின் திட்டமாக உள்ளது.

அந்தவகையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிக்குகள் சம்மேளனத் தலைவராக இருக்கும் ஆனந்த சாகர தேரர், கடந்த மூன்று வருடங்களாக அமைச்சர் ரிஷாட் மீது வீண்பழிகளையும் அபாண்டங்களையும் சுமத்தி வருகின்றார்.

நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்குவதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அளப்பரிய பங்களிப்பும், தியாகமும் மிகவும் பெறுமதியானது என்பதை நீங்கள் அறிவீர்கள். “முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை விட்டு அமைச்சர் ரிஷாட் பதியுதீன் செல்லமாட்டார்” என்று உறுதியாகக் கூறியிருந்த நிலையில், புதிய அரசாங்கத்தை அமைத்து, இந்த நாட்டிலே இன சௌஜன்யத்தை ஏற்படுத்துவதற்காக அந்த அரசிலிருந்து அவர் துணிந்து வெளியேறினார். உயிர் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலே ஜனாதிபதித் தேர்தலில் நாடளாவிய ரீதியில் பிரசாரங்களை மேற்கொண்டு, மக்களுக்கு நியாயங்களை அமைச்சர் ரிஷாட் எடுத்துக் கூறினார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தற்போது வளர்ந்து வரும் கட்சியாக இருப்பதனாலும் தமிழ், சிங்கள, முஸ்லிம்களை அரவணைத்துப் பயணிப்பதனாலும், எமது கட்சித் தலைமையை இல்லாதொழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இடம்பெற்று வரும் சதிககளின் மற்றொரு வடிவமாகவே இந்தக் கொலைக்கான சூழ்ச்சியை நாங்கள் பார்க்கின்றோம். நாமல் குமாரவின் கருத்துக்கள் மூலம் இவை தெளிவுபடுத்தப்படுகின்றன.

எனவே, நாமல் குமாரவின் குரல் பதிவு மற்றும் கொலை தொடர்பான பின்னணிகள் குறித்து, பூரண விசாரணைகள் நடாத்தப்பட்டு, அதன் உண்மை நிலையைக் கண்டறிவது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்று அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

-ஊடகப்பிரிவு-

Related posts

மருத்துவர்களின் பணிப்புறக்கணிப்பு எட்டு மணியுடன் நிறைவு

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி சபை ரஷ்யாவில் விசேட வேலைத்திட்டம்

சிம்பாப்வே கிரிக்கெட் அணி இடைநீக்கம்