(UTV|SOUTH AFRICA)-தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னாள் தலைவர் மற்றும் துடுப்பாட்ட வீரரான ஏபி டி வில்லியர்ஸ், எதிர்காலத்தில் தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் ஆலோசகராக செயற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி தெபாங் மொரே குறிப்பிட்டுள்ளார்.
உலகளாவிய ரீதியில் தனக்கென ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்திக்கொண்ட வில்லியர்ஸ், தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரராகவும், தலைவராகவும் வலம் வந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணி சார்பில், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இவர், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்று நாடு திரும்பியதும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திடீரென அறிவித்தார்.
“மிஸ்டர் 360” என ரசிகர்களால் வர்ணிக்கப்படும் வில்லியர்ஸின் திடீர் ஓய்வு அறிவிப்பு, சக வீரர்கள் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எனினும், குடும்பத்துடன் நேரத்தை செலவளிக்க விரும்பிய வில்லியர்ஸ், ஓய்வில் உறுதியாக இருந்தார். இந்த நிலையில் மீண்டும் அவர் விளையாடுவார் என்ற ரசிகர்களின் நம்பிக்கையை வீணடிக்க விரும்பாத வில்லியர்ஸ் தென்னாபிரிக்காவில் நடைபெறும் உள்ளூர் போட்டிகளிலும், ஐ.பி.எல். தொடரிலும் விளையாடுவதாக அறிவித்தார்.
எனினும், இவர் தென்னாபிரிக்க அணியுடன் மீண்டும் இணைவாரா? என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது ஓரளவு விடை கிடைத்துள்ளது என்பதை அவதானிக்க முடிகின்றது. வீரராக இல்லாமல் தென்னாபிரிக்க அணியின் ஆலோசகராக வில்லியர்ஸ் செயற்பட வாய்ப்புள்ளது என்ற தென்னாபிரிக்க அணியின் புதிய தலைமை நிறைவேற்று அதிகாரி தெபாங் மொரேவின் கருத்து, ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தென்னாபிரிக்க கிரிக்கெட் சபையின் தலைமை நிறைவேற்று அதிகாரி ஹரோன் லொகார்ட் கடந்த வரும் பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து, தெபாங் மொரே இடைக்கால தலைமை நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 17ம் திகதி தெபாங் மொரே தலைமை நிறைவேற்று அதிகாரியாக தொடர்ந்தும் நீடிப்பார் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவி்ப்பு வெளியிடப்பட்ட பின்னர் ஊடகவியலாளர்களுக்கு தனது எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுப்படுத்திய போதே, அவர் வில்லியர்ஸ் தொடர்பில் கருத்து வெளியி்ட்டுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், “ஓய்வு குறித்து அறிவித்த இரண்டு நாட்களுக்கு பின்னர் வில்லியர்ஸை சந்தித்து பேசினேன். தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் இணைந்து தொடர்ந்தும் செயற்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டேன். இந்த விடயத்துக்கு வில்லியர்ஸ் தலைசாய்த்திருந்த போதும், இதுவரையில் உறுதியாக கூற முடியாமல் உள்ளது. எனினும், வில்லியர்ஸ் தென்னாபிரிக்க கிரிக்கெட்டுடன் இணைவதற்கான அதிக வாய்ப்புகள் காணப்படுகின்றன. இதுதொடர்பில் நாமும் மேலதிக பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளோம். அவர் தற்போது குடும்பத்துடன் நாட்களை செலவளிக்க விரும்புகிறார். அதனைத் தொடர்ந்து வில்லியர்ஸை கிரிக்கெட் சபையுடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்காள்ளப்படும்” எனக் குறிப்பிட்டார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றுள்ள ஏபி டி வில்லியர்ஸ் 114 டெஸ்ட், 228 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 78 T-20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 8,765 ஓட்டங்களையும், ஒரு நாள் போட்டிகளில் 9,577 ஓட்டங்களையும், T-20 போட்டிகளில் 1,672 ஓட்டங்களையும் அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)
-ThePapare.com-
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]