சூடான செய்திகள் 1

“மக்கள் ஆணையை உரிய முறையில் நாட்டுத் தலைவர்கள் நிறைவேற்றத் தவறினால், தேர்தலில் தக்கபாடம் கிடைக்கும்”-(VIDEO)

(UTV|COLOMBO)-நல்லாட்சிக்குக் கிடைத்த மக்கள் ஆணையை ஜனாதிபதியும், பிரதமரும் உரிய முறையில், நிறைவேற்றத் தவறினால் அடுத்த தேர்தலில் நாட்டு மக்கள் தகுந்த பாடத்தைக் கற்பிப்பர் எனவும், ஆட்சியில் எஞ்சியிருக்கும் காலத்தையாவது மக்கள் நலனைக் கருத்திற்கொண்டு செயற்படுமாறும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாசவின் வேண்டுகோளின் பேரில், கைத்தொழில், வர்த்தக அமைச்சினூடாக வாழ்வாதார உதவித் திட்டம் வழங்கும் நிகழ்வு வரக்காப்பொலயில் நேற்று (30) இடம்பெற்ற போது, பிரதம அதிதியாக அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இந்நிகழ்வில் அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் ரிப்கான் பதியுதீன் மற்றும் அமைச்சரின் பொதுசன தொடர்பாடல் அதிகாரி மொஹிடீன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த அரசாங்கம் செய்த தவறுகளைப் போன்று, நல்லாட்சி எனக் கூறும் இந்த அரசாங்கத்தின் இரண்டு தலைவர்களும் அதே தவறைச்செய்து வருவதையே நாம் காணக்கூடியதாக இருக்கின்றது. இவ்விருவரும் தத்தமது கட்சி நலன்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, மக்கள் நலன்சார்ந்த செயற்பாடுகளை முன்னிறுத்தி பணியாற்ற வேண்டும். எஞ்சியிருக்கும் காலத்திலாவது இதில் கவனஞ்செலுத்துங்கள்.

அப்பாவி மக்களின் இயல்பான வாழ்வை நாசமாக்கி பொருளாதாரத்தை அழிவுக்கு உள்ளாக்கும் செயற்பாடுகளை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

“ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அப்போதைய பொதுச்செயலாளர் ஜனாதிபதி வேட்பாளராகவும், ஐ.தே.க வின் தலைவர் பிரதமர் பதவிக்காகவும், இவ்விரண்டு கட்சிகளின் தலைவர்களும் இணைந்து நல்லாட்சியை கொண்டுவருவர் என்ற நம்பிக்கையினாலும், அவ்விருவர் மீதுகொண்ட விசுவாசத்தினாலுமே நாம் இந்த ஆட்சிக்கு ஆதரவளிக்கத் துணிந்தோம்.

எனினும், இந்த அரசாங்கம் உருவாகிய பின்னர், நடைபெற்று வரும் செயற்பாடுகளும், தலைவர்களின் நிலைப்பாடுகளும் எமக்கு கவலை தருகின்றது. தமது கட்சி தொடர்பான சிந்தனைகளே இவ்விரண்டு தலைவர்களிடமும் மேலோங்கி நிற்கின்றது. நாட்டு மக்களின் நலன்கள் தொடர்பான எண்ணங்கள் மிகவும் குறைந்தளவிலேயே தென்படுகின்றன. எனவே, எஞ்சியுள்ள காலத்திலாவது கட்சி நலன்சார் செயற்பாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு, நாட்டு நலனுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து செயற்படுங்கள்.

கடந்த ஆட்சியில் அப்பாவி சிங்கள, முஸ்லிம் மக்களை அநியாயமாக மோதவிட்டு வேடிக்கை பார்க்கப்பட்டது. கொந்தராத்துக்காரர்களும், டயஸ்போராக்களும் கொந்தராத்தின் அடிப்படையில் நாசகார நடவடிக்கைகளை ஏவிவிட்டனர். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் காலிக்குச் செல்கிறார் என அறிந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவிடம் சென்று “அவரை அங்கு போக அனுமதிக்க வேண்டாம்” என்று நான் வேண்டினேன். எனக்கு முன்னாலேயே தொலைபசி அழைப்பை ஏற்படுத்தி “ரிஷாட் பதியுதீன் காலிக்குச் செல்ல வேண்டாம்” என தன்னிடம் கூறுகிறார் என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, முன்னாள் பாதுகாப்புச் செயலாளரிடம் தெரிவித்தபோது, அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் காலிக்குச் சென்ற அந்த தினம்தான் நாட்டின் அழிவுக்கான ஆரம்பம் என நான் கருதுகின்றேன். நாங்கள் மஹிந்தவின் அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கு இந்த சம்பவங்களே காரணமாக அமைந்திருந்தது.

நானும் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட ஓர் அகதியே. 30 வருடங்களுக்குப் பின்னர், எமது பூர்வீக நிலங்களில் குடியேறச் சென்ற போதுதான் வில்பத்து பிரச்சினை எழுந்தது. அந்தப் பிரச்சினை தொடர்பில் என்மீதும், எனது சமூகத்தின் மீதும் சுமத்தப்பட்டு வந்த குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்து, அதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் பலமுறை வேண்டுகோள் விடுத்தோம். மஹாநாயாக்க தேரர்களிடமும் இந்த வேண்டுகோளை விடுத்தோம்.

வில்பத்து பிரச்சினை பூதாகரமாகி விஸ்வரூபம் எடுத்தபோது, முஸ்லிம் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசாரணைக் குழுவொன்றை நியமித்தார். அந்தக்குழு தனது அறிக்கையையும் ஜனாதிபதியிடம் கையளித்துவிட்டது. எனினும், இந்த அறிக்கை இன்னும் வெளியிடப்படாது கிடப்பில் கிடக்கின்றது.

 

வில்பத்துவில் நாங்கள் ஓரங்குல நிலத்தையேனும் அபகரிக்கவில்லை. மீள்குடியேறவும் இல்லை. அரபுக்கொலணி அமைக்கவுமில்லை. வேற்றுமாவட்ட முஸ்லிம் மக்களைக் கொண்டுவந்து குடியமர்த்தவுமில்லை.

எனவே, அந்த அறிக்கையை வெளியிட்டு இதன் உண்மைத்தன்மையை வெளிக்கொணருங்கள். நாங்கள் பிழை செய்திருந்தால் எந்தத் தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம். இதனை நான் ஒரு சவாலாக விடுக்கின்றேன்” என்றும் அமைச்சர் கூறினார்.

 

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசாங்கத்தின் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் மஹிந்தவுக்கு வழங்கப்பட வேண்டும்

கண்டி-கொழும்பு வரும் ரயில் போக்குவரத்தில் தாமதம்

உயர்தரப் பரீட்சையால் பிற்போடப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி