77வது தேசிய சுதந்திர தின விழாவை கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் குறைந்த செலவில் நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நாட்டின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில் இது பெருமையுடனும் கம்பீரத்துடனும் நடைபெற வேண்டும் என அரச நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் கலாநிதி சந்தன அபயரத்ன தெரிவித்தார்.
ஆனால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி நிலையில் உள்ளதால் குறைந்த செலவில் விழாவை நடத்துவது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என அவர் தெரிவித்தார்.
உள்நாட்டலுவல்கள் கேட்போர் கூடத்தில் இன்று (30) நடைபெற்ற 77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வின் முதலாவது ஏற்பாட்டுக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
கடந்த வருடம் சுதந்திர தின விழாவுக்காக அமைச்சு 107 மில்லியன் ரூபாவை செலவிட்டிருந்த நிலையில் இந்த வருட சுதந்திர தின விழா தொடர்பில் இயன்றளவு செலவுகளை குறைப்பதற்கு கவனம் செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், சுதந்திர தின விழாவைக் காண பொதுமக்களுக்கு வாய்ப்பு அளிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.