(UTV|INDIA)-கேரளாவில் தென்மேற்கு பருவமழை கடந்த 20 நாட்களுக்கு மேலாக பெய்து வருகிறது. திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, மலப்புரம் உள்பட மாநிலம் முழுவதும் இந்த மழை கனமழையாக கொட்டி வருகிறது.
மழை காரணமாக பல இடங்களில் வீடுகள் இடிந்தன. மேலும் மின்கம்பங்கள், மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும் மலை பிரதேசங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டதால் உயிர் இழப்பும் ஏற்பட்டது. இதுவரை கேரளாவில் மழைக்கு 60 பேர் பலியாகி உள்ளனர்.
இந்த நிலையில் கேரளாவில் வருகிற 24-ந்தேதி வரை கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. மாநிலத்தின் சில பகுதிகளில் 7 சென்டிமீட்டர் முதல் 11 சென்டி மீட்டர் வரையும், சில இடங்களில் மிக பலத்த மழையாக 12 சென்டிமீட்டர் முதல் 20 சென்டிமீட்டர் வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இதனால் கேரளாவின் பல பகுதிகளில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமும் உருவாகி உள்ளது. இதைத் தொடர்ந்து மலையோர பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டு உள்ளனர்.
மலையோர பகுதிகளில் உள்ள அனைத்து தாலுக்காகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் வெள்ள கட்டுப்பாட்டு அறைகள் திறக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் அரசு துறை அதிகாரிகளும் உஷார் நிலையில் இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
பாதுகாப்பு கருதி மலை பிரதேசங்கள் மற்றும் கடற்கரை பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கடல் தொடர்ந்து சீற்றமாக காணப்படுவதால் 24-ந்தேதி வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]