சூடான செய்திகள் 1

எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க சகல தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்

(UTV|COLOMBO)-தற்போது சமூகத்தில் பரவியுள்ள சகலவிதமான சீரழிவுகளிலிருந்தும் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் என்ற வகையில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வருவதுடன், அதற்காக சகல தரப்பினரும் நிபந்தனையற்ற பங்களிப்பினை வழங்க வேண்டுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

“சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டம் அதற்கான முதற்படியாக அமைவதுடன், சிறுவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வி உள்ளிட்ட பல துறைகளையும் அபிவிருத்தி செய்து அதனூடாக பிள்ளைகளுக்கு சிறந்த எதிர்காலத்தைப் பெற்றுக்கொடுப்பதே இச்செயற்திட்டத்தின் நோக்கமாகும்.

“சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாடு நேற்று  (18) முற்பகல் கிளிநொச்சி மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றபோதே ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்

தேசத்தின் உயிர் நாடிகளான சிறுவர்களைப் பாதுகாத்து, அவர்களது உள, உடல் விருத்திக்கு சிறந்த சூழலைக் கட்டியெழுப்பும் நோக்குடன் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் எண்ணக்கருவிற்கமைய ஜனாதிபதி செயலகத்தினால் “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

சமூகத்தில் தற்போது பரவியுள்ள பல்வேறு சீரழிவுகளிலிருந்து சிறுவர்களைப் பாதுகாக்கும் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளித்து துஷ்பிரயோகங்களைத் தடுத்தல், பாதுகாப்பை உறுதி செய்தல், சுகாதார போசணை, ஆளுமை விருத்தி, கல்வி மற்றும் வாழ்க்கைத் திறனை மேம்படுத்தல் ஆகிய துறைகளினூடாக நாடளாவிய ரீதியில் இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

வரலாற்றில் முதற் தடவையாக 14 அமைச்சுக்கள், 05 திணைக்களங்கள், 06 நிறுவனங்கள், 09 மாகாண சபைகள் மற்றும் பல தன்னார்வ நிறுவனங்கள் ஆகியன ஒன்றிணைந்து விசேட நிகழ்ச்சித்திட்டமாக இந்த செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், 2017 முதல் 2019 வரையான மூன்று வருடகால திட்டத்திற்காக 5232.6 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தன்னார்வ சிறுவர் இல்லங்களின் தரக் கட்டுப்பாடு, மேற்பார்வை, நிர்வாகம் தொடர்பான பிரகடனங்களை உருவாக்குதல், சிறுவர் தடுப்பு நிலையங்களை பாதுகாப்பு இல்லங்களாக பெயர்மாற்றுதல், சிறுவர் இல்லங்களில் வாழும் பிள்ளைகளை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தத்தெடுத்து வளர்ப்பதற்கான சட்ட ஏற்பாடுகளை அமுல்படுத்துதல், விடுதிகள், மருந்துச்சாலைகள் பதிவு மற்றும் அவற்றினை மேற்பார்வையை வினைத்திறனாக்குதல் போன்ற செயற்பாடுகளை “சிறுவர்களை பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. சட்ட நடவடிக்கைகள் காரணமாக தடுப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பிள்ளைகளை மீண்டும் பாடசாலைகளுக்கு உள்ளீர்த்தல் தொடர்பில் இதுவரை வெளியிடப்பட்டுள்ள சுற்றுநிருபங்களை வலுப்படுத்துதல் இச்செயற்திட்டத்தின் விசேட குறிக்கோளாகும்.

“பிள்ளைகளைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின கீழ் கிளிநொச்சி மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள பல்வேறு வேலைத்திட்டங்கள் இன்று ஜனாதிபதி அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

கிளிநொச்சி மாவட்டத்தில் தாயை இழந்த 387 பிள்ளைகளும் தந்தையை இழந்த 378 பிள்ளைகளும் வாழ்ந்து வருவதாக அறிக்கையிடப்பட்டுள்ளன. மேலும் நீதிமன்ற செயற்பாடுகளுடன் தொடர்புடைய சிறுவயது தாய்மாரும் இடம்பெயர்ந்த சிறுவர்களும் பல்வேறு குறைபாடுகளுடனேயே சிறுவர் இல்லங்களில் வாழ்ந்து வருகின்றனர்.

அதற்கமைய தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுவர் இல்லங்களையும் தடுப்பு இல்லங்களையும் நவீனமயப்படுத்தி புனரமைப்பு செய்வதற்கு நிதி வழங்குதல், விசேட தேவையுடைய பிள்ளைகள் கல்விகற்கும் வடமாகாணத்தில் உள்ள 25 பாடசாலைகளுக்கு பாதை வசதிகள் உள்ளிட்ட ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு நிதி வழங்குதல். சிறுநீரக நோயிலிருந்து சிறுவர்களை பாதுகாப்பதற்காக சுத்தமான குடிநீர் வசதியற்ற 1000 குடும்பங்களுக்கு நீர் சுத்திகரிப்பு உபகரணங்கள் வழங்குதல், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்திக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட முன்பள்ளிகளுக்கு புத்தக பொதிகள், மரத் தளபாடங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல், பாதுகாப்பற்ற சூழலில் வாழும் குடும்பங்களின் பிள்ளைகளுக்கு நிதியுதவி வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு செயற்திட்டங்கள் இன்று ஜனாதிபதி அவர்களின் தலைமையில் இடம்பெற்றன.

நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அவர்கள், சிறுவர்களுக்காக இதுவரையில் நடைமுறைப்படுத்தப்பட்ட சகல செயற்திட்டங்களில் இருந்தும் “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டம் முக்கியத்துவமுடையதாக காணப்படுவதற்கு அது நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியாகவும் நடைமுறைக்கேற்ற வகையிலும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து நடைமுறைப்படுத்தப்படுவதே காரணமாகுமெனத் தெரிவித்தார்.

உள வள ஆலோசனை, சட்ட ஆலோசனை மற்றும் முறைப்பாடுகளை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை என்பனவும் இன்றைய தினம் வைபவ வளாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, முதலமைச்சர் சீ.வி. விக்கேனஸ்வரன், அமைச்சர் சந்ராணி பண்டார, பிரதி அமைச்சர்கள் அங்கஜன் ராமநாதன், காதர் மஸ்தான் உள்ளிட்ட மாகாண அரசியல் பிரதிநிதிகள் பலரும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்குபற்றினர்.

இதனிடையே “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்துடன் இணைந்ததாக கிளிநொச்சி கனகபுரம் மகா வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய விளையாட்டு மைதானத்தையும் ஜனாதிபதி அவர்கள் இன்று மாணவர்களிடம் கையளித்தார்.

 

2017 ஒக்டோபர் 14 ஆம் திகதி கிளிநொச்சி விசேட பொருளாதார மத்திய நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் அப்பாடசாலை மாணவர்களால் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு மைதானத்திற்கான மொத்த செலவு 05 மில்லியன் ரூபாய்களாகும்.

இன்று முற்பகல் வித்தியாலயத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்களை மாணவர்கள் மிகுந்த ஆரவாரத்துடன் வரவேற்றதுடன், விசேட நினைவுப் பரிசொன்றும் ஜனாதிபதி அவர்களுக்கு இதன்போது வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் இராணுவத்தினரின் உபயோகத்தில் இருந்துவந்த 120.89 ஏக்கர் காணியை மீண்டும் மக்களிடம் கையளித்தலும் “சிறுவர்களைப் பாதுகாப்போம்” தேசிய செயற்திட்டத்தின் கிளிநொச்சி மாவட்ட மாநாட்டில் இடம்பெற்றது.

அதற்கான ஆவணங்களை ஜனாதிபதி அவர்கள் குறித்த மாவட்ட செயலாளர்களிடம் கையளித்ததுடன், அதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்தில் 62.95 ஏக்கர்களும் கிளிநொச்சி மாவட்டத்தில் 05.94 ஏக்கர்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 52 ஏக்கர்களும் விடுவிக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கமைய தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பு ஏற்படாதவாறு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ முகாம்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்கும் செயற்திட்டத்தின் கீழ் இந்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடாத்த தீர்மானம்!