வகைப்படுத்தப்படாத

நீட் தேர்வில் தோல்வி – மாணவி தற்கொலை

(UTV|INDIA)-மருத்துவக் கல்லூரியின் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால், விழுப்புரம் மாவட்டத்தில் மாணவி ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சிக்கு அருகில் உள்ள பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்ற கட்டடத் தொழிலாளியின் மகள் பிரதீபா. இவர் கடந்த ஆண்டில் பன்னிரண்டாம் வகுப்பை முடித்து நீட் தேர்வை எழுதினார். ஆனால், 155 மதிப்பெண்களே கிடைத்ததால் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே இடம் கிடைத்தது.

இதனால் இந்த ஆண்டும் அவர் நீட் தேர்வை எழுதினார். இதற்கென பயிற்சி வகுப்புக்கும் தனியார் சென்றுவந்தார் பிரதீபா. இந்த ஆண்டு நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அவருக்கு 39 மதிப்பெண்களே கிடைத்தன.

“இன்றைக்கு நீட் தேர்வு முடிவு வெளிவருகிறது என்றுகூட எங்களுக்குத் தெரியாது. நான் வேலைக்குப் போய்விட்டு திரும்பிவந்து பார்க்கும்போது படுத்துக் கிடந்தாள். அப்போது மாலை ஆறு மணி இருக்கும். பிறகு அவளிடமிருந்து விஷத்தின் வாடை எடுத்ததால் மருத்துவமனைக்கு கூட்டிப்போனோம்” என்று அவரது தந்தை சண்முகம் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

முதலில் சேத்துப்பட்டு மருத்துவமனையிலும் பிறகு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரதீபா உயிரிழந்தார்.

“கடந்த ஆண்டு அவளுக்கு தனியார் மருத்துவக் கல்லூரியில்தான் இடம் கிடைத்தது. அதனால் இந்த ஆண்டும் இந்தத் தேர்வை எழுத முடிவுசெய்தாள் பிரதீபா” என்கிறார் சண்முகம். பிரதீபா பன்னிரெண்டாம் வகுப்பில் 1115 மதிப்பெண்களை பெற்றிருந்தார். இவரது சகோதரி எம்.பி.ஏவும் சகோதரர் பொறியியலும் பயின்று வருகின்றனர்.

தேசிய தகுதி தேர்வான நீட் கடந்த மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றது. மருத்துவ படிப்பிற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் முடிவுகளை சிபிஎஸ்இ நேற்று வெளியிட்டது. அதில் அகில இந்திய அளவில் முதல் 50 இடங்களில் ஒரே ஒரு தமிழக மாணவி மட்டுமே இடம் பிடித்தார்.

தமிழகத்தில் இந்த ஆண்டில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 602 பேர் நீட் தேர்வு எழுதினர். அதில் 39.55 சதவீதம் பேர், அதாவது 45,336 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, இதே விவகாரம் தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 1 ஆம் திகதி தற்கொலை செய்துகொண்டார்.

கடந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து சுமார் 83 ஆயிரம் பேர் தேர்வு எழுதியதில் 32,368 பேர் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி விகிதம் 38.83 ஆக இருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கவுதமாலா எரிமலை வெடித்து சிதறியதில் பலி எண்ணிக்கை 109 ஆக அதிகரிப்பு

சிரியா: ரஷ்ய படையினரின் வான்வெளி தாக்குதலில் பொதுமக்கள் 34 பேர் பலி

எப்போது வேண்டுமானாலும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார்