சூடான செய்திகள் 1

“தடைகளைத் தாண்டி இதயசுத்தியுடன் கட்சிப் பணிகளை முன்னெடுத்து செல்வோம்”-அமைச்சர் ரிஷாட்!

(UTV|KANDY)-எத்தனை தடைகள் ஏற்பட்டாலும் அத்தனை தடைகளையும் மீறி பல சவால்களுக்கு முகங்கொடுத்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை நேர்மையாகவும், தூய்மையாகவும் முன்னெடுத்துச் செல்வோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

கண்டி, கட்டுகஸ்தோட்ட வீதியில் அமைக்கப்பட்டுள்ள கட்சிக் காரியாலய அங்குரார்ப்பண வைபவம் மற்றும் புதிய கிளை அமைப்பாளர்களுக்கான நியமனக்கடிதம் வழங்கும் நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் நேற்று  (20) கலந்துகொண்டார்.

அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

சமுதாயப் பணிக்காகவும், சமூகத்துக்கு ஏற்படும் ஆபத்துக்களிலிருந்து பாதுகாப்பதற்காகவும், உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்காகவுமே கட்சி ஒன்றை அமைத்தோம். புலிகளினால் வெளியேற்றப்பட்டு, அனைத்தையும் இழந்து நிர்கதியான மக்களுக்கு விமோசனம் வழங்கும் வகையில், ஆரம்பத்தில் சில பிரதேசங்களில் மாத்திரம் செயலாற்றிய இந்தக் கட்சி, நாளடைவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு பிரதேசத்திலும் வியாபித்து தனது பணிகளை முன்னெடுத்தது.

அந்தவகையில், மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்திலும் எமக்கு வந்த அழைப்பை ஏற்றுக்கொண்டு நாங்கள் கால் பதித்தோம். இம்முறை உள்ளூராட்சி சபைத் தேர்தலில் கண்டி மாவட்டத்தில், மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்களின் அதிதீவிர உழைப்பினால் பல பிரதேச சபைகளில் எட்டு உறுப்பினர்களைப் பெற்றுக்கொண்டோம்.

“அரசியல்” என்பதை சாக்கடையாகப் பார்த்த காலம் ஒன்று இருந்தது. கல்விமான்களும், நேர்மையானவர்களும் இந்த அரசியலில் நாட்டம் காட்டாத காலம் இன்று மலையேறி, அதனை ஒரு புனித பணியாகச் செய்து வருகின்றனர். நாங்கள் மேற்கொள்கின்ற ஒவ்வொரு நல்ல காரியமும் இபாதத்தாக கருதப்படுகின்றது. அந்தவகையில், அரசியல் மூலம் நல்ல பணிகளை இதய சுத்தியுடன், தூய்மையாக மேற்கொண்டால் இறைவன் நம்மை விரும்புவான். அந்த இலட்சியத்துடன் நமது பணிகளை முன்னெடுத்துச் சென்றால் இறைவன் அதற்கு உதவி செய்வான்.

நாட்டின் பல பாகங்களிலிருந்தும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸுக்கு, கட்சிப் பணிகளை ஆரம்பிக்குமாறு அழைப்பு விடுக்கப்படுகின்றது. பெரும்பான்மைக் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் அந்தப் பிரதேசத்தில் செயலாற்றிக் கொண்டிருக்கும் போது, எமக்கு அழைப்பு வருகின்றதென்றால் அதன் அர்த்தம், மக்கள் எமது கட்சியை அங்கீகரித்து, கட்சியின் சேவைகளை விரும்புகிறார்கள் என்றே கருத வேண்டும். அதற்காக அவசர அவசரமாகக் கட்சிக் கிளைகளை அமைத்து, மக்களை இடையில் கைவிடுவது எமது நோக்கமல்ல.

நாடளாவிய ரீதியில் எமது சமூகம் துன்பங்களிலும், துயரங்களிலும் பரிதவிக்கின்றது. கண்டியில் நமது சமூகத்தின் மீது அண்மையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் வடுக்கள் இன்னும் ஆறவில்லை. எங்களை காடையர்கள் கருவறுத்த போது, நாங்கள் மிகவும் பொறுமையாக இருந்தோம். நாங்கள் உயிரிலும் மேலாகக் கருதும் பள்ளிவாசல்களை சேதப்படுத்திய போது அதிஉச்ச பொறுமை காத்தோம். நிதானத்துடன் பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். ஒற்றுமையுடன் இருந்தோம். சமயத் தலைவர்களினதும், அரசியல் தலைமைகளினதும் வழிகாட்டலின் கீழ் செயற்பட்டோம்.

கண்டிக் கலவரம் இலங்கை வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக மாறி இருக்கின்றது. வெளிநாடுகளுக்கு நாம் சென்றால் இதைப் பற்றியே கேட்கின்றனர். இலங்கையின் சுற்றுலாத் துறை வீழ்ச்சியடைந்துள்ளது. பொருளாதாரத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்தச் சம்பவங்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக இருக்குமென நம்புகின்றோம்.

கண்டி மாவட்டத்தில் பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. இந்தப் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்ள மக்கள் காங்கிரஸின் இந்தப் பிரதேச முக்கியஸ்தர்கள் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். கட்சித் தலைமையும், உயர்பீடமும் உங்களுக்கு எந்த நேரத்திலும் உதவக் காத்திருக்கின்றது இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளர் ஹம்ஜாத் ஹாஜியார், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன் ஆகியோரும் உரையாற்றினர். கட்சியின் செயலாளர் சுபைர்தீன் மற்றும் உதுமான் ஹாஜியார் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், ஊர்ப்பிரமுகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தத்தில்….

முதலைகளால் பொதுமக்கள் அசௌகரியத்தில்

ஆர்ப்பாட்டம் காரணமாக ஹைலெவல் வீதியில் கடுமையான வாகன நெரிசல்