சூடான செய்திகள் 1

இலங்கை – ஈரானுடன் 05 உடன்படிக்கைகளில் கைச்சாத்து

(UTV|COLOMBO)-இரண்டு நாள் அரச முறைப் பயணமொன்றை மேற்கொண்டு ஈரான் சென்றிருக்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் ஈரானிய ஜனாதிபதி ஹசன் ரூஹானிக்கும் இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று (13) ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையில் இடம்பெற்றது.

ஈரானிய ஜனாதிபதியின் மாளிகையான ஷதாபாத் மாளிகைக்கு சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை அந்நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

இருநாடுகளின் தலைவர்களுக்கிடையிலான சுமுகமான கலந்துரையாடலை தொடர்ந்து இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. இரண்டு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக இருந்துவரும் பொருளாதார, வர்த்தக உறவுகளை புதிய வழியில் தொடர்ந்தும் முன்னெடுப்பது குறித்து இரு தலைவர்களும் விரிவாக கலந்துரையாடினர்.

இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மசகு எண்ணெய், தேயிலை மற்றும் சுற்றுலாத் துறையில் தற்போது இருந்துவரும் ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் கலந்துரையாடினர்.

இலங்கையில் எண்ணெய் சுத்திகரிப்பு நடவடிக்கைகளுக்கு சுமார் 50 வருடங்களுக்கு முன்பிருந்து ஈரான் உதவி வழங்கி வருகிறது. எண்ணெய் சுத்திகரிப்பு துறையை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவிகளை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டார்.

மேலும் ஈரான் இலங்கையிடமிருந்து அதிகளவு தேயிலையை இறக்குமதி செய்துவருவதுடன், இதனை எதிர்காலத்தில் மேலும் அதிகரிப்பது குறித்தும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஈரானிய ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.

இலங்கையின் புகையுரத பாதை முறைமையை மேம்படுத்துவதற்கு ஈரான் அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொள்வது தொடர்பாகவும் சுற்றுலாத் துறையில் இருந்துவரும் ஒத்துழைப்பை மேம்படுத்தி இரு நாடுகளுக்குமிடையில் நேரடி விமான சேவையை ஆரம்பிப்பது குறித்தும் தலைவர்கள் கவனம் செலுத்தினர்.

மேலும் சுகாதார துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்தி இருநாடுகளுக்குமிடையில் மருந்துப்பொருட்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் ஆடைத் தொழிற்துறையை மேம்படுத்துவதற்கான பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை பரிமாறிக்கொள்வது தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டது.

ஈரானுக்கும் இலங்கைக்குமிடையில் கொடுக்கல் வாங்கல் வசதிகளை இலகுபடுத்துவதற்கு நிதிப் பரிமாற்றத்திற்கான முறையான வங்கிச் சேவையை பேண வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன வலியுறுத்தினார். இது தொடர்பில் விரைவில் உடன்படிக்கை ஒன்று செய்துகொள்வதற்காக நடவடிக்கை எடுப்பதாக ஈரானிய ஜனாதிபதி தெரிவித்தார்.

இருதரப்பு பேச்சுவார்த்தை தொழில்நுட்ப ஒத்துழைப்பிற்காக இணைந்த ஆணைக்குழுவின் கீழ் இந்த அனைத்து நடவடிக்கைகளையும் பலமாக நடைமுறைப்படுத்துவதாக ஈரான் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2004ஆம் ஆண்டு இரண்டு நாடுகளுக்குமிடையில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட இரண்டு நாடுகளின் வர்த்தகப் பொருட்களுக்கு முன்னுரிமை வழங்கும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு தலைவர்கள் உடன்பட்டனர்.

ஆசிய ஒத்துழைப்புச் சங்கம் மற்றும் அணிசேரா அமைப்பு ஆகியவற்றின் உறுப்பு நாடுகள் என்ற வகையில் சர்வதேச மன்றங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுதல், சர்வதேச பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டுதல், போதைப்பொருள் பிரச்சினையை ஒழித்தல் போன்ற நடவடிக்கைகளில் ஒத்துழைப்புடன் செயற்படவும் தலைவர்கள் உறுதியளித்தனர்.

அணிசேரா அமைப்பின் உறுப்பு நாடு என்ற வகையில் அனைத்து நட்பு நாடுகளையும் ஒன்றுபோல் ஏற்றுக்கொண்டு மத்திமமான வெளிநாட்டு கொள்கையின் கீழ் அனைத்து நாடுகளுடனும் ஒத்துழைப்புடன் செயற்படுவது இலங்கையின் வெளிநாட்டு கொள்கையாகும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார்.

இலங்கைக்கும் ஈரானுக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் 61 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டபோதும், இரண்டு நாடுகளுக்குமிடையிலான நட்புறவு பலநூறு வருடங்கள் பழைமையானது என்று ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.

உமா ஓயா திட்டம், கிராமிய பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்குதல் மற்றும் புகையிரத துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ச்சியாக வழங்கிவரும் உதவிகளுக்காகவும் ஜனாதிபதி ஈரான் அரசாங்கத்திற்கு தனது நன்றியை தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்குமிடையில்,

சுகாதாரம், மருத்துவ விஞ்ஞானம், மருந்துப் பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள்.
தரப்படுத்தல், அளவையியல் பயிற்சிகள்.
சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை ஒழித்தல்.
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி.
கலாசாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்.
ஆகிய துறைகளுடன் தொடர்பான 05 புரிந்துணர்வு உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

வெலிக்கடை சிறைச்சாலை – 150 கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்

சீனாவின் உதவியுடன் 13 வைத்தியசாலைகள் அபிவிருத்தி

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]