(UTV|COLOMBO)-உலக மக்களுக்கு பசுமை, தூய்மை மற்றும் ஆரோக்கியமான சூழலை உருவாக்குவதற்கான தீர்வுகளை கொண்டுவருவதற்கு இக்கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் பலத்தை சர்வதேச சூரியசக்தி மாநாடு எடுத்துக்காட்டும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
இன்று (11) புதுடில்லியில் ஆரம்பமான சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி அவர்கள் இதனை தெரிவித்தார்.
இம்மாநாட்டின் தீர்மானங்கள் நடைமுறை சாத்தியமான கூட்டுறவை நோக்கிய இந்த கூட்டமைப்பிலுள்ள நாடுகளின் இணைந்த முயற்சிகளை எடுத்துக்காட்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, ஏனைய உலக நாடுகளும் இந்த கூட்டமைப்பில் இணைந்துகொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டார்.
உலக சனத்தொகை வளர்ச்சியுடன் சக்தி வளத்தேவை அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், சூரியசக்தியின் மூலம் இப்பிரச்சினையை தீர்க்கமுடியும் என்றும் தெரிவித்தார்.
சக்தி வள பிரச்சினை இலங்கை மக்களும் உலகிலுள்ள பல்வேறு அபிவிருத்தியடைந்த மற்றும் அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளிலுள்ள மக்களும் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாகும் என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
சூரியசக்தி வளத் துறையில் இலங்கையின் முன்னெடுப்புகள் தொடர்பாக விளக்கிய ஜனாதிபதி அவர்கள், இலங்கையில் நாம் ‘சூரிய பல சங்ராமய’ ‘சூரிய சக்தி வள போராட்டம்’ என்ற நிகழ்ச்சித் திட்டமொன்றை ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாக தெரிவித்தார். இத்திட்டத்தினூடாக 2025ஆம் ஆண்டாகின்றபோது 1000 மெகா வோட் மின்சாரத்தை உற்பத்திசெய்ய நாம் எதிர்பார்த்துள்ளோம் என்றும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார்.
சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில் துறைகளுக்கு உதவும் வகையில் ஒரு மெகா வோட் முதல் 10 மொகா வோட் இயல்திறன்கொண்ட சூரியசக்தி முறைமைகளை அபிவிருத்திசெய்யும் செயன்முறையையும் இலங்கை முன்னெடுத்துவருகிறது என்றும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
இத்திட்டத்தின் கீழ் இலங்கையில் பாரிய சூரியசக்தி திட்டங்களுக்கு உதவியளித்து வருகின்றமைக்காக சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பிற்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் ஜனாதிபதி அவர்கள் நன்றி தெரிவித்ததுடன், இது எமது நாட்டில் பல்வேறு பாடசாலைகள், வீடுகள், வைத்தியசாலைகள், அரசாங்க நிறுவனங்களுக்கு பயன்மிக்கதாகும் என்றும் தெரிவித்தார்.
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முன்னெடுப்புகளை வெற்றிபெறச் செய்வதற்கு தலைமைத்துவத்தை வழங்கிவரும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், இம்மாநாட்டில் பெரும் எண்ணிக்கையான அரச தலைவர்களும், அரசாங்க பிரதிநிதிகளும் பங்குபற்றுவதானது இம்மாநாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றும் குறிப்பிட்டார்.
இக்கூட்டமைப்புக்கான ஒத்துழைப்பை வழங்குவதற்கு இலங்கையின் முழுமையான அர்ப்பணிப்பையும் ஜனாதிபதி அவர்கள் உலகத் தலைவர்களிடம் உறுதிப்படுத்தினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]