(UTV|COLOMBO)-இந்துக்களால் கடைப்பிடிக்கப்படும் சிவனுக்குரிய மகா சிவராத்திரி விரதம் இன்று அனுஷ்டிக்கப்படுகின்றது.
ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதி இரவில் இந்த விரதம் கடைப்பிடிக்கப்படும்.
மாசிமாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
இதேவேளை , ஐம்பொறிகளின் வழியே மனதை அலையவிடாது அதனை ஐக்கியப்படுத்தி, இறைசிந்தனையுடன் இந்துக்களால் அனுஸ்டிக்கப்படும் விரதங்களுள் மகா சிவராத்திரி விரதம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த தினத்தில் உலகெங்கும் சமாதானம் ஏற்பட வேண்டும் என பிரார்திப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்
மானிட சமூகத்தினை நல்வழிப்படுத்தும் சமய நம்பிக்கையையும் சமூக விழுமியப் பண்புகளையும் மென்மேலும் மக்களிடையே வேரூன்றச் செய்யும் வகையில் மகா சிவராத்திரி அமைய வேண்டும் என ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்ஹ வெளியிட்டுள்ள சிவராத்திரி விரத வாழ்த்து செய்தியில், இன, மத பேதமின்றி ஒவ்வொருவரினதும் கலாசார, மத விழுமியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என பிரார்த்திப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய நாளில் அனைத்து சிவனடியாளர்களது வாழ்விலும் சுபீட்சம் ஏற்பட வேண்டும் என பிரதமர் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.