உள்நாடு

5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க புதிய திட்டங்கள்!

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டில் 5 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை வரவழைப்பதற்குத் திட்டங்கள் தயாரிக்கப்படும்போது அதற்கு சமாந்தரமாக உட்கட்டுமான வசதிகளை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது.
தேசிய பொருளாதார மற்றும் பௌதீகத் திட்டங்கள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோதே இவ்விடயம் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டது.

இங்கு கருத்துத் தெரிவித்த சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் அதிகாரிகள் Home Stay திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். எதிர்வரும் ஆண்டில் செல்வந்த நாடுகளிலிருந்தான சுற்றுலாப் பயணிகளை அதிகம் வரவழைப்பதற்குத் திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன், இலங்கைக்கு அதிகளவான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் இலங்கையிலுள்ள மக்கள் சமூகம் தயாராக இருப்பதன் அவசியமும் குழுவில் சுட்டிக்காட்டப்பட்டது. சுற்றுலா பயணிகளிடம் பணம் மோசடி செய்வதை நிறுத்திவிட்டு, சுற்றுலா பயணிகளை மரியாதையுடன் வரவேற்பதற்கான கட்டமைப்பு தயார் செய்யப்பட வேண்டும் என்றும் குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். தெரிவுசெய்யப்பட்ட பிரதேசங்களில் ஏற்கனவே இதற்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

உள்ளூர் மட்டத்தில் சுற்றுலாத் தளங்களைக் கொண்ட இடங்களைக் கண்டறிந்து அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகளைத் தயாரிப்பது முக்கியம் என்றும் குழு சுட்டிக்காட்டியது. மேலும், கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் “கைத்தொழில் கிராமங்கள்” திட்டத்தின் செயற்பாடுகள் குறித்தும், அவற்றை எவ்வாறு சிறந்த முறையில் பயன்படுத்துவது என்பது குறித்தும் இங்கும் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகத்தின் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, கைத்தொழில் அமைச்சின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, கம்பனிப் பதிவாளர் திணைக்களத்தின் 2022ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, கஹட்டகஹ க்ரஃபைட் லங்கா லிமிடட் நிறுவனத்தின் 2019/2020 ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை, இலங்கை பொஸ்பேட் லிமிடட் நிறுவனத்தின் வருடாந்த 2021/202 அறிக்கை, இலங்கை புடவைகள் மற்றும் ஆடைகளுக்கான நிறுவகத்தின் 2020ஆம் ஆண்டுக்கான வருடாந்த அறிக்கை என்பன குழுவில் ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்பட்டன. இந்தக் குழு அமர்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான இரான் விக்ரமரத்ன, அசோக் அபேசிங்ஹ, சுதத் மஞ்சுள, மதுர விதானகே, குணதிலக ராஜபக்ஷ ஆகியோர் கலந்துகொண்டனர்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

திரையரங்குகளுக்கு பூட்டு

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக ஷவேந்திர சில்வா