யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் “உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது” எனத் தெரிவித்து வந்த கைதொலைபேசி அழைப்பால் வர்த்தக நிலைய உரிமையாளர் ஒருவர் 2 இலட்சம் ரூபா பணத்தை பறிகொடுத்துள்ள சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
குறித்த நபரின் தொலைபேசி இலக்கத்துக்கு உங்களுக்கு ஐந்து இலட்சம் ரூபா மெகா அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது.
மெகா அதிர்ஷ்டத்துக்கான காலக்கெடு முடிவடையவுள்ளது எனத் தெரிவித்து உங்கள் வங்கி இலக்கத்தைக் கூறுமாறு கோரவே குறித்த வர்த்தகரும் தனது வங்கி இலக்கத்தைக் கூறியுள்ளார்.
அதன் பின்னர் உங்களுக்கு ஆறு இலக்கங்களைக் கொண்ட எண்கள் குறுஞ்செய்தியாக வரும். அதனைத் தம்மிடம் கூறுமாறும் வினவவே குறித்த வர்த்தகர் அதனையும் கூறியுள்ளார்.
அதனையடுத்து அவரின் வங்கிக் கணக்கிலிருந்து சடுதியாகப் பணத்தொகை குறைவடைந்து சென்றதையடுத்து வர்த்தகர் வங்கிக்குச் சென்று தனது சேமிப்புக் கணக்கின் செயற்பாடுகளைத் தற்காலிகமாக முடக்கியுள்ளார்.
இதனால், அவரது எஞ்சிய பெரும்தொகைப் பணம் மோசடியிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட வர்த்தகர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதுடன் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.