(UTV|COLOMBO)-நாளை முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. 150 ஆண்டுகளுக்கு பிறகு, 3 நிகழ்வுகள் ஒரே நாளில் நடக்கும் அரிய நிகழ்வு நாளை நடக்கிறது.
சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது.
இந்த முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது, நிலா நீல நிறத்தில் காட்சி அளிக்கும். அதனால், அது ‘புளு மூன்’ என்று அழைக்கப்படும் அரிய நிகழ்வாகும்.
நிலா தோன்றும் நேரத்திலேயே முழு சந்திர கிரகணம் தோன்றுவது இதன் சிறப்பு. அதாவது, கீழ்வானத்தில் நிலா தோன்றும்போதே, மாலை 6.25 மணியளவில் முழு சந்திர கிரகணம் தொடங்குகிறது. இரவு 7.25 மணிவரை முழு சந்திர கிரகணம் நீடிக்கும். அதன்பிறகு, பூமியின் நிழல் படிப்படியாக மறைந்து, நிலா இயல்புநிலையை அடையும்.
இந்த சந்திர கிரகணத்தின்போது, சூரிய ஒளி நிலாவின் மீது நேரடியாக படாது. ஆனால், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலாவின் மேல் படும். குறைந்த அலை நீளமுள்ள ஒளிக்கதிர்கள், வளி மண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு, அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைகிறது. இதனால், சிவந்த நிலாவாக தோன்றும்.
இது, ‘பிளட் மூன்’ என்று அழைக்கப்படும் 2-வது அரிய நிகழ்வாகும். 150 ஆண்டுகளுக்கு பிறகு, இந்த அரிய நிகழ்வு ஏற்படுகிறது.
மூன்றாவது அரிய நிகழ்வு, ‘சூப்பர் மூன்’ என்று அழைக்கப்படுகிறது. நிலா, பூமியை சுற்றி வரும்போது, மாதத்துக்கு ஒருதடவை பூமியை மிகவும் நெருங்கி வரும். அப்போது, நிலா வழக்கத்தைவிட பெரியதாக சூப்பர் மூனாக தோன்றும். அந்த அரிய நிகழ்வும், முழு சந்திர கிரகணத்தின்போதே நடக்கிறது. வழக்கத்தை விட 10 சதவீதம் பெரியதாக நிலா காட்சி அளிக்கும், சற்று பிரகாசமாகவும் இருக்கும் என்று வானியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
அந்த நேரத்தில், கடலிலும், ஆறுகளிலும் அலைகள் சற்று அதிக உயரத்துக்கு எழும்பும் என்றும், இருப்பினும், பயப்படும் அளவுக்கு ஒன்றும் இருக்காது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த முழு சந்திர கிரகணம், இந்தியா முழுவதும் தெரியும். வெறும் கண்ணாலேயே இதை பார்க்கலாம். தொலைநோக்கி மூலமும் காணலாம்.
முழு சந்திர கிரகணம் நிகழும் நேரத்தில் சாப்பிடக்கூடாது என்று கூறப்படும் நம்பிக்கைக்கு அறிவியல் அடிப்படை எதுவும் கிடையாது என்று வானியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]