(UTV|KANDY)-வடக்கு, கிழக்கை மையாமகக் கொண்டு அரசியல் செய்து வந்த மக்கள் காங்கிரஸ், இம்முறை உள்ளூராட்சித் தேர்தலில் அதற்கு வெளியே போட்டியிடுவது தமது கட்சியை வலுப்படுத்துவதற்காகவோ அல்லது அதிகாரங்களை பலப்படுத்துவதற்காகவோ அல்ல என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கண்டியில் நேற்று (28) பல்வேறு பிரதேசங்களில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தக் கூட்டங்களில் முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட அமைப்பாளருமான ஹம்ஜாட், கண்டி மாவட்ட இணைப்பாளர் ரியாஸ் இஸ்ஸதீன், மக்கள் காங்கிரஸின் கண்டி மாவட்ட முக்கியஸ்தர் றிஸ்மி மற்றும் உலமாக்கள், வேட்பாளர்கள், பிரதேசவாசிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.
அமைச்சர் ரிஷாட் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மக்கள் பணிகளுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட கட்சி. காலாகாலமாக தேசியக் கட்சிகளுக்கும், ஏனைய சமூகக் கட்சிகளுக்கும் வாக்களித்து, எந்தவிதமான விமோசனமும் மக்களுக்கு கிடைக்காத நிலையிலேயே, நாம் இந்தப் பிரதேசத்தில் மக்கள் பணிபுரிய வந்திருக்கின்றோம். இங்குள்ள பிரதேசங்களைப் பார்க்கும்போது, உங்கள் வாக்குகளின் மூலம் அதிகாரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு தூரம் மக்களை ஏமாற்றியிருக்கின்றார்கள் என்பது நன்கு விளங்குகின்றது. நாங்கள் எந்தவொரு கட்சியையும் அழிப்பதற்காகவோ, எவரின் மீதும் குரோதம் கொண்டோ தேர்தலில் இறங்கவில்லை.
எனினும், எமது கட்சியான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இந்தப் பிரதேசத்துக்கு வந்த பின்னர், ஏனைய கட்சிக்காரர்களும் ஓடோடி வந்து உங்களுக்கு உதவப் போவதாகக் கூறுகின்றனர். எமது அரசியல் பிரவேசத்தினால் அச்சமடைந்த அரசியல்வாதிகள் சிலர், எம்மை வேற்றுக்கண்ணோடு பார்த்து போலியான பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றனர். முன்னர், இவர்கள் தேர்தல் காலங்களில் வந்து உங்கள் வாக்குகளை சூறையாடிவிட்டு, அடுத்த தேர்தலுக்கு மீண்டும் வருவதைப் போலவே, தற்போதும் அதே பழக்கத்தை கொண்டுள்ளனர்.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பல உள்ளூராட்சி சபைகளில், நீங்கள் அதிகாரமுள்ள சக்திகளாகவும், தீர்மானிக்கும் சக்திகளாகவும் விளங்க முடியும். ஆனால், பச்சை என்றும் நீலம் என்றும் பிரிந்து வாக்களித்து, பிரித்தாளும் தந்திரோபாயங்களுக்குள் அகப்பட்டு நீங்கள் நின்றதனாலேயே, கடந்த காலங்களில் சமூகப் பிரங்ஞையுள்ள பிரதிநிதிகளை பெறமுடியாத நிலை இருந்தது.
கெலிஓய, கலிகமுவ பிரதேசங்களுக்கு நாம் பிரசாரக் கூட்டங்களுக்குச் சென்றிருந்த போது, மக்கள் தமது அவலங்களை விவரித்தனர். 1948 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் பின்னர் உருவாக்கப்பட்ட கல்கமுவ கிராமத்தில் வாழும் மக்களுக்கு, இன்னுமே காணி உறுதிகள் வழங்கப்படவில்லை என்று அங்குள்ள முதியோர்கள் என்னிடம் தெரிவித்தனர், இதனைக் கேட்டபோது, நான் உண்மையிலேயே கவலையடைந்தேன். உங்களின் பொன்னான வாக்குகளைப் பெற்று, அதிகாரங்களைச் சுவைத்தவர்கள் தமது சொகுசு வாழ்க்கையைப் பற்றியே சிந்தித்துள்ளார்களேயொழிய, மக்களின் துன்ப துயரங்களைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. இந்த நிலை கண்டி மாவட்டத்தில் மட்டுமல்ல, குருநாகல் உட்பட முஸ்லிம்கள் செறிந்து வாழும் பல மாவட்டங்களில் காணப்படுகின்றது.
கண்டியில் இன்னுமொரு கிராமத்துக்குச் சென்றபோது, அந்த ஊரில் ஜனாசாக்களை அடக்குவதற்குக் கூட காணி இல்லையெனத் தெரிவித்தனர். இதுதான் நமது சமூகத்தின் அவல நிலை. காலாகாலாமாக ஆசை வார்த்தைகளைக் காட்டி ஏமாற்றப்பட்டு வரும் ஒட்டுமொத்த சமூகத்துக்கும் விடிவைப் பெற்றுக்கொடுப்பதற்காகவே, எமது கட்சி இந்தப் பிரதேசத்தில் காலூன்றியுள்ளது. அவர்கள் வெற்றி பெற்றால் உள்ளூராட்சி சபைகளின் உதவியுடனும், எங்களின் முழுமையான பங்களிப்புடனும் உங்களுக்கு மக்கள் பணியாற்றுவார்கள் என நான் உறுதியளிக்கின்றேன் இவ்வாறு அமைச்சர் கூறினார்.
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/KANDY-1.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/KANDY-2.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/KANDY-3.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/KANDY-4.jpg”]
[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/KANDY-5.jpg”]
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]