(UTV|JERMANY)-மனிதர்கள் உயிர் வாழ தண்ணீர் அவசியம். உடல் நலனுக்காக சிலர் வழக்கத்தை விட ஓரளவு அதிகமாக தண்ணீர் குடிக்கின்றனர். அதுவே அளவுக்கு அதிகமாகிவிட்டால் கடும் அவதி ஆகிறது.
அத்தகைய நிலை ஜெர்மனியை சேர்ந்த கட்டிட கலை நிபுணர் மார்க்வுப்பன் கார்ஸ்ட் (36) என்பவருக்கு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக மனிதர்கள் நாள் ஒன்றுக்கு 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் குடிக்கலாம் என டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர்.
ஆனால் இவரோ நாள் ஒன்றுக்கு 20 லிட்டர் தண்ணீர் குடிக்கிறார், அதன் மூலம் உயிர் வாழ்கிறார்.
அதனால் அவரால் நிம்மதியாக தூங்க முடியவில்லை. தினமும் 2 மணி நேரம் மட்டுமே இவரால் தூங்க முடிகிறது. காரணம், தண்ணீர் குடித்தவுடன் சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை உள்ளது.
இவர் அரிய வகை நோயால் அவதிப்படுகிறார். இவருக்கு விபரீத நீரிழிவு நோய் ஏற்பட்டுள்ளது. அதன்படி அதிக அளவு தாகம் எடுக்கிறது. தண்ணீர் குடித்தாலும் அவருக்கு அது சுவையற்ற நிலையில் தான் உள்ளது. இதனால் அவர் தொடர்ந்து தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்கிறார்.
அதனால் அவர் எங்கு சென்றாலும் குடி தண்ணீர் எடுத்துச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. அதிக அளவு தண்ணீர் குடிப்பதால் மூளையில் தண்ணீர் தேங்கி உயிரிழக்கும் நிலை ஏற்படும் என்றும் டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.