வகைப்படுத்தப்படாத

எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு மாற்றங்கள் தற்போது நாட்டில் இடம்பெற்றுள்ளன – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-மூன்று வருடங்களிற்கு முன்னர் இது போன்றவொரு நாளில் நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் அப்போதிருந்த ஆட்சியிலிருந்து வெளியேறியதுடன் இன்று அந்த மாற்றத்தை ஏற்படுத்துவதற்கான பல விடயங்கள் நிறைவடைந்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

தேசிய மின் கட்டமைப்பிற்கு 100 மெகாவோட் சூரிய சக்தி ஒன்றிணைக்கப்படுவதை நிறைவுகூறும் முகமாக நேற்று பிற்பகல் பத்தரமுல்ல வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

 

இன்று தன் மீது எத்தகைய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போதிலும் நல்லாட்சிக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் தீர்மானத்திற்கேற்ப, ஊழல், மோசடி, திருட்டு மற்றும் வீண்விரயம் என்பவற்றுடன்கூடிய ஊழல் அரசியலை நாட்டில் இல்லாமற்செய்து சிறந்த பண்புகளுடன் கூடிய அரசியல் கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று ஜனாதிபதி; தெரிவித்தார்.

 

நல்லாட்சிக் கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் சித்தியடைந்துள்ளதா இல்லையா என்பது குறித்து தற்போது யாராலும் உறுதிப்படுத்த முடியாது என்பதுடன் நல்லாட்சி அரசின் பதவிக்காலம் நிறைவடைகையில் தாம் சித்தியடைந்துள்ளோம் என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஆதாரங்களையும் தரவுகளையும் முன்வைக்கக்கூடிய ஆற்றல் தமக்கு காணப்படுகின்றதென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

 

மூன்று வருடங்களுக்கு முன்னர் நாடு எதிர்நோக்கியிருந்த பாரிய சவாலான விடயமாகக் காணப்பட்ட சர்வதேசத்தை வெற்றி கொள்ளும் சவாலினை வெற்றிகொண்டது மட்டுமன்றி உலகின் அனைத்து நாடுகளுடனும் சர்வதேச அமைப்புக்களுடனும் நட்புறவை ஏற்படுத்திக் கொள்ள தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளதெனக் குறிப்பிட்ட ஜனாதிபதி நாட்டின் மேலும் பல இலக்குகளும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.

 

நாட்டிற்கு விதிக்கப்படவிருந்த பல்வேறு சர்வதேச தடைகள் நீக்கப்பட்டமை, அன்றைய அரசியல் மேடைகளிலும் ஊடகங்களிலும் அடிக்கடி பேசப்பட்ட மின்சாரக் கதிரை பற்றிய விடயங்கள், சர்வதேச யுத்தக் குற்ற விசாரணைப் பொறிமுறை மற்றும் சர்வதேச நீதிபதிகளை நாட்டிற்கு வரவழைத்தல் பற்றிய விடயங்கள் முற்றாக நீக்கப்பட்டமை, 19வது அரசியலமைப்புத் திருத்தத்தின் ஊடாக மனித உரிமைகளை பலப்படுத்தி, சகல துறைகளும் சுயாதீனமாக செயற்படக்கூடியவாறு சுயாதீன ஆணைக்குழுக்கள் உருவாக்கப்பட்டமை மற்றும் அரச தலைவர்களால் நீதிமன்ற செயற்பாடுகளில் மேற்கொள்ளக்கூடிய தலையீடுகளை முற்றிலுமாக இல்லாமற்செய்து சட்டத்தின் ஆதிக்கத்தினை உறுதிசெய்தமை என்பன பெற்றுக்கொள்ளப்பட்ட சில வெற்றிகளாகும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

அத்துடன் நாடு எதிர்நோக்கிய கடன்சுமையைக் குறைத்து நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசினால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களினால் தற்போது சிறந்த பெறுபேறுகள் கிடைத்துள்ளன என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

 

நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றங்கள் ஏற்படாது மூன்று வருடங்களிற்கு முன்னர் காணப்பட்ட நிலைமையே நாட்டில் காணப்பட்டிருப்பின், நாடு இன்று எதிர்நோக்கியிருக்கக்கூடிய நிலைமையை சகலரும் கவனத்திற் கொள்ளவேண்டும் என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.

 

சூரிய சக்தியினால் ஏற்படுத்தப்பட்டுள்ள முன்னேற்றமான திருப்புமுனையாக பசுமை சக்தியினால் நாட்டைத் தன்னிறைவடையச் செய்யும் நோக்கில் ஒரு வருட காலத்திற்கு முன்னர் ஜனாதிபதியின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் சூரிய சக்தி புரட்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது. அச்செயற்திட்டத்தில் மின் பாவனையாளரே மின்னுற்பத்தியாளராக செயற்படுவதனால் பத்து இலட்சம் குடும்பங்களிற்கு மேலதிக வருமானமும் பெறக்கூடியதாக அமைந்துள்ளது. இந்த சூரிய சக்தி புரட்சியினூடாக தற்போது முதலாவது வருடத்தினுள் 100 மெகாவோட் மின் சக்தியை தேசிய மின் கட்டமைப்பிற்கு வழங்கக்கூடியதாக அமைந்துள்ளது.

 

இந்த செயற்திட்டத்தினை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்காக பங்களிப்பு நல்கிய நிறுவனங்களுக்கும் அதிகாரிகளுக்கும் பாராட்டுச் சான்றிதழ்களும் இதன்போது ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

 

முதலாவது சூரிய சக்தி உற்பத்தி கிராமத்தின் மின்னுற்பத்திக் கட்டமைப்பின் உரிமையாளருக்கு உரிய காசோலையும் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டது.

 

ஜனாதிபதிக்கு விசேட பரிசொன்றும் இதன்போது வழங்கப்பட்டது.

 

இந்த நிகழ்வில் அமைச்சர்களான ரஞ்சித் சியபலாபிட்டிய, தயா கமகே, பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்திவலு அமைச்சின் செயலாளர் சுரேன் பட்டகொட, இலங்கை புதுப்பிக்கத்தக்க சக்திவலு அதிகாரசபையின் தலைவர் கீர்த்தி விக்ரமரத்ன மற்றும் மின்சார சபையின் தலைவர் டபி.டீ. கனேகல உள்ளிட்டோர்; கலந்து கொண்டனர்.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

UTV MEDIA WORKSHOP REGISTRATION – 2024

දෙමළ ජාතික සන්ධානයේ නායකව රෝහල් ගත කරයි

பேஸ்புக்கை பயன்படுத்தி இலங்கையர்களிடம் பண மோசடி