(UDHAYAM, COLOMBO) – இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் அடுத்த வாரம் முடிகிறது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று காலை ஆரம்பமானது.
பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.
இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு தொடங்கியது. டெல்லியில் நாடாளுமன்ற வளாகம், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகம், இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்கள் என மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஓட்டுப்பதிவை தேர்தல் ஆணைக்குழு அதிகாரிகள் 33 பேர் மேற்பார்வையிடுகிறார்கள். மாலை 5 மணியுடன் ஓட்டுப்பதிவு முடிவடைகிறது.
பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் வாக்குரிமை பெற்றுள்ள அனைத்துக் கட்சி தலைவர்களும் நாடாளுமன்றத்து இன்று வருவதாலும், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதாலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வரும் 20 ஆம் திகதி வெளியாகும். வெற்றி பெறும் வேட்பாளர் புதிய ஜனாதிபதியாக 25-ஆம் திகதி பதவி ஏற்பார்.