(UDHAYAM, COLOMBO) – உலக சனத்தொகை தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.
1989ம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி நிதியத்தினால் ஜூலை 11ம் திகதி சர்வதேச சனத்தொகை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.
மக்கள் தொகை குறித்த விழிப்புணர்வை உலகளாவிய ரீதியில் மக்களுக்கு எடுத்துச் செல்லும் ஒரு முயற்சியாக் கொண்டாடப்பட்டு வருகிறது.
உலக மக்கள்தொகை வளர்ச்சியானது கிபி 1650ம் ஆண்டிற்குப் பின்னர்தான் விரைவாக வளரத் தொடங்கியது.1987ம் ஆண்டிலேயே உலக மக்கள் தொகை ஐந்து பில்லியனுக்கு அதிகமாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
உலகின் 90 க்கும் அதிகமான நாடுகள் 1990ம் ஆண்டிலிருந்து இந்த தினத்தை கடைப்பிடிக்கின்றன. 2010ம் ஆண்டு உலக சனத்தொகை 680 கோடியாக இருந்தது.
வருடாந்தம் இந்த தொகை ஏழு கோடியே 80 இலட்சமாக அதிகரித்து வருகிறது. 2011ம் ஆண்டு நடைபெற்ற சனத்தொகை, குடியிருப்பு கணக்கெடுப்பின்படி இலங்கையின் சனத்தொகை இரண்டு கோடியே இரண்டு இலட்சத்து 75 ஆயிரத்து 500 ஆகும்.
சனத்தொகையில் கூடுதலானோர் அதாவது 28 தசம் 8 வீதமான மக்கள் மேல் மாகாணத்திலும், குறைந்த அளவு தொகையாக 5 தசம் 2 வீதமான மக்கள் வடமாகாணத்திலும் வாழ்கின்றனர். கூடியளவு சனத்தொகை கொழும்பு மாவட்டத்திலும், குறைந்த சனத்தொகை முல்லைத்தீவு மாவட்டத்திலும் காணப்படுவதாக புள்ளிவிபர அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
உலகளாவிய ரீதியில் மக்கள்தொகை வளர்ச்சி வீதமானது ஆண்டுதோறும் 1.31 வீதத்தால் அதிகரித்து வருகின்றது. ஒவ்வொரு செக்கனுக்கும் 2.582 வீதமாகவும், ஒரு நாளுக்கு 223,098 தொகையாகவும், ஒரு வருடத்திற்கு 81,430,910 தொகையாகவும் அதிகரித்துச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.