வகைப்படுத்தப்படாத

கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவுக்கு இ.தொ.கா ஆட்சேபனை

(UDHAYAM, COLOMBO) – பெருந்தோட்டத் தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தத்தை இரத்துச் செய்யக்கோரி மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள மனு மீதான தமது ஆட்சேபனை மனுவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் முன்வைத்துள்ளது.

இதில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதன் உறுப்பினர்களின் தொழில் தொடர்பான நியதிகள் மற்றும் நிபந்தனைகளை முன்னேற்றுவதனை அடிப்படையாக கொண்டு மாத்திரமே 2016ஆம் ஆண்டு 35 ஆம் இலக்க சம்பள கூட்டு ஒப்பந்தத்தை இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துடன் செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டு ஒப்பந்தம் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படல் வேண்டும் என்றோ மற்றும் நிலுவை சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றோ, ஏற்பாடுகளோ அல்லது தேவைப்பாடுகளோ இல்லை.

அத்துடன் மேலதிக கொடுப்பனவுகள், இதுவரை செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தங்களில் சட்டத்திற்கு உட்பட்ட சம்பாத்தியத்தில் இணைக்கப்படவில்லை என்பதால், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலும் அது சட்டத்துக்கு உட்பட்ட சம்பாத்தியத்தில் இணைக்கப்படாது.

எனவே மக்கள் தொழிலாளர் சங்கம் தாக்கல் செய்துள்ள கூட்டு ஒப்பந்தத்துக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்யும்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரியுள்ளது.

இதற்கு பதில் மனுவைத் தாக்கல் செய்துள்ள மக்கள் தொழிலாளர் சங்கம், நிலுவை சம்பளம் என்பது தொழிலாளர்கள் தொடர்ந்து பெற்று வந்துள்ளமையால், அது தொழிலாளர்கள் ஏற்பனவே அனுபவித்த உரிமை என்றும், அத்தோடு சம்பள கூட்டு ஒப்பந்தங்கள் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இடம்பெற்று வந்த நிலையில் அதுவும் ஏற்கனவே அனுபவித்து வந்த உரிமை என்றும் அவைகள் மீறப்பட முடியாதவையெனவும் சுட்டிக்காட்டியிருந்தது.

அத்தோடு கொடுப்பனவுகள் உட்பட மொத்த சம்பாத்தியத்திற்கு பங்களிப்பு வழங்கப்படாமை அந்த நியதிச்சட்டங்களை மீறும் நடவடிக்கை என்றும் சுட்டிக்காட்டிருந்தது.

மேலும் 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தத்தில் 2003ஆம் செய்து கொள்ளப்பட்ட பிரதான முதன்மை கூட்டு ஒப்பந்தத்தை மீறி வெளியாள் உற்பத்தி முறை என்ற பெருந்தோட்டத் தொழிற்துறையை முழுமையாக மாற்றும் முறைமையை அறிமுகம் செய்வது பிரதான முதன்மை கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர்களுக்கு உறுதி செய்யப்பட்டிருந்த 300 நாட்கள் வேலை உரிமையை இல்லாமல் செய்வதாக இருக்கின்றது.

அத்துடன் சம்பள சூத்திரம் மிகவும் தெளிவீனமாக இருக்கின்றமை என்ற விடயத்தையும் மக்கள் தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.

அதனடிப்படையில், 2016ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட கூட்டு ஒப்பந்தம் சட்ட அந்தஸ்த்து அற்றது என பிரகடனம் செய்து அதனை இரத்துச் செய்யுமாறு மக்கள் தொழிலாளர் சங்கம் தனது மனுவில் கோரியுள்ளது.

கூட்டு ஒப்பந்தம் தொடர்பான குறித்த எழுத்தாணை மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான எல்.டி.பி. தெஹிதெனிய மற்றும் சி. துரைராஜா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

முன்னதாக மே மாதம் 8ம் திகதி இடம்பெற்ற குறித்த மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றம் சட்டமா அதிபரை மனு தொடர்பாக இணக்கப்பாட்டினை எட்டமுடியுமா? என்று பிரதிவாதிகளுடன் கலந்துரையாடி நீதிமன்றத்துக்கு அறிவிக்கும்படியும், இணக்கப்பாட்டிற்கு வரமுடியாத விடத்து எதிராளிகளை ஆட்சேபனைகள் இருப்பின் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கட்டளையிட்டிருந்தது.

அதனடிப்படையில் சட்டமா அதிபர் சார்பாக முன்னிலையான அரச சட்டத்தரணி இணக்கப்பட்டிற்கு வருவதற்கு எதிராளிகள் தயார் இல்லை என்பதையும் எதிராளிகள் ஆட்சேபனைகளை முன்வைக்க இருப்பதாகவும் அறிவித்தார்.

அந்தவகையில் வழக்கின் எதிராளிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிற்சங்க கூட்டுக்கமிட்டி என்ற கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் கம்பனிகள் சார்பாக கைச்சாத்திடும் இலங்கை முதலாளிமார் சம்மேளனம், மற்றும் பெருந்தோட்டக் கம்பனிகள் அனைத்தும் தமது ஆட்சேபனைகளை நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்திருந்தன.

சட்டமா அதிபர், தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர், பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ஆகியோர் சார்பாக முன்னிலையாகிய அரச சட்டத்தரணி எதிராளிகளிடத்தில் இணக்கப்பாட்டினை எட்டுவதற்கு கடைசி நேரம்வரை முயற்சித்தாகவும், அதனை கருத்திற்கொண்டு ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு கால அவகாசத்தை வழங்குமாறு கோரி இருந்தார்.

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும் தனது ஆட்சேபனைகளை முன்வைக்க கால அவகாசம் கோரியது.

அதனை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஆகஸ்ட் மாதம் 08ம் திகதி ஆட்சேபனையை சமர்ப்பிக்காத தரப்புகளை அதனை சமர்ப்பிக்குமாறு கட்டளையிட்டது.

கால அவகாசம் கோரப்பட்ட போது இந்த வழக்கு அவசரமாக விசாரித்து முடிக்கப்பட வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் மீண்டும் நினைவூட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா தாக்கல் செய்துள்ள இந்த மனுவில் அவரே முன்னிலையாகி சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தார்.

குறித்த மனு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Related posts

ரிஷாட்- சஜித் இடையிலான சிநேகபூர்வ இராப்போசன விருந்துபசார வைபவம்

editor

பிலியந்தலை துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த காவற்துறை அலுவலருக்கு பதவி உயர்வு

முன்னாள் பெண் அதிபருக்கு 30 ஆண்டு சிறையா?