வகைப்படுத்தப்படாத

மனைவியை கோடரியால் தாக்கி கொலை செய்த கணவன்

(UDHAYAM, COLOMBO) – கணவன் – மனைவிக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு அதிகரித்த நிலையில், கணவனால் தலையில் கோடரி தாக்குதலுக்கு இலக்காகி, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மனைவி, 8 நாட்களுக்கு பின்னர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல் மொரகொல்லாகமல, அமுனகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் வலாகுலபொல முதியன்சலாகே ரூபா திசாநாயக்க என்ற 38 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த பெண், நான்கு பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் 21ஆம் திகதி மாலை, கணவன் – மனைவிக்கு இடையில் சச்சரவு ஏற்பட்டுள்ளது.

இதன்போது கோபமடைந்த கணவன், கோடரியால் மனைவியை தாக்கியுள்ளதுடன், 6 அங்குலம் அளவுக்கு மனைவியின் தலையில் கோடரி பதிந்துள்ளது.

அதனையடுத்து, தலையில் பதிந்துள்ள கோடரியுடன் அயலவர்களால், பொல்பிட்டிகம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

எனினும், பெண்ணின் நிலை கவலைக்கிடமாக இருந்ததையடுத்து, குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கோடரி தாக்குதல் காரணமாக, தலையில் இருந்து வலது கண் வரையான பகுதி கடுமையாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

குருநாகல் வைத்தியசாலையின் கண், காது, மூக்கு தொடர்பான விசேட வைத்தியர்கள் 8 பேர் அடங்கிய குழுவினர், பல மணிநேரப் போராட்டத்துக்குப் பின்னர், கோடரியை அகற்றியுள்ளனர்.

சந்தேக நபரான கணவனால், கோடரி தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட தினத்திலிருந்து 3 நாட்களுக்கு முன்னரும் பெண் தாக்கப்பட்டுள்ளார்.

இதன்போது, பெண்ணின் வலது கை உடைந்துள்ளது. அதற்கான சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில், இந்த கோடரி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கோடரி தலையில் பதிந்த நிலையில், அதனை அகற்றாமல் வைத்தியசாலையில் சேர்ப்பித்த அயலவர்களுக்கு வைத்தியர்கள் நன்றி தெரிவித்துள்ளதுடன், கோடரியை அகற்றியிருந்தால், அந்த சந்தர்ப்பத்தின்போதே அவர் உயிரிழந்திருக்க வாய்ப்பு இருந்ததாக கூறியுள்ளனர்.

இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி 8 நாட்களுக்கு பின்னர் மனைவி, நேற்று உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்படைய கணவன், பொல்பிட்டிகம காவல் நிலைய அதிகாரிகளால் 21ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து, மஹவ நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக, காவற்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

கையடக்க தொலைபேசிக்கு ஆசைப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி

நசீர் அஹமட்டிடம் 25 கோடி கோரினார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்!

Devotees restricted from entering ‘Maha Maluwa’