(UDHAYAM, COLOMBO) – கட்டார் மீதான தடையை திரும்பப் பெறும் விடயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.
தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிப்பதாக கூறி சவுதி அரேபியா உள்ளிட்ட அண்டை நாடுகள் கட்டார் நாட்டுடனான தங்கள் உறவுகளை முறித்து கொள்வதாக அறிவித்து.
தூதரக அதிகாரிகளையும் திரும்ப அழைத்துக்கொண்டன. இதனால் பெரும்பான்மையான உணவு பொருட்களுக்கு அண்டை நாடுகளையே சார்ந்திருந்த கட்டாருக்கு தற்போது பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே, இப்பிரச்னையை சுமூகமாக முடிக்க கட்டார் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கட்டாரை மையமாக கொண்டு செயல்படும் அல் ஜஸீரா செய்தி நிறுவனத்தை மூடுவது, ஈரானுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வது, கட்டாரில் அமைக்கப்பட்டுவரும் துருக்கி நாட்டின் ராணுவத்தளப் பணிகளை நிறுத்துவது, தீவிரவாத அமைப்புக்களுக்கு வழங்கிவரும் ஆதரவை நிறுத்துவது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை 10 நாட்களில் நிறைவேற்றினால், கட்டார் மீதான நடவடிக்கை திரும்பப் பெறப்படும் என வளைகுடா நாடுகள் கால அவகாசம் அளித்திருந்தன.
இந்த கால அவகாசம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், கட்டார் – சவுதி இடையிலான விவகாரத்தில் மத்தியஸ்தராக செயல்படும் குவைத் நாட்டு இளவரசரின் கோரிக்கையை ஏற்று கட்டார் மீதான தடையை திரும்பப் பெறும் விடயத்தில் முடிவெடுக்க அந்நாட்டுக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மேலும் 48 மணி நேரம் நீட்டிப்பதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.