கேளிக்கை

பிறந்தநாள் அன்றே பிரபல நகைச்சுவை நடிகருக்கு நேர்ந்த சோகம்

(UDHAYAM, COLOMBO) – பிறந்தநாள் அன்று சேலத்தில் காமெடி நடிகர் கொட்டாச்சியை அடித்து உதைத்து நகை-பணம் பறித்த ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் தேடிவருகிறார்கள்.

சென்னை அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் கொட்டாச்சி(வயது40). காமெடி நடிகர். இவர் பத்ரி, பெண்ணின் மனதை தொட்டு, பாளையத்து அம்மன், யூத், தூள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் காமெடி நடிகராகவும், நடிகர் விவேக்கிற்கு உதவியாளராகவும் திரைப்படத்தில் நடித்து வந்தவர்.

தற்போது திருப்பூர் அருகே ‘வயக்காட்டு மாப்பிள்ளை‘ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படத்தில் காமெடி நடிகர் கொட்டாச்சியும் நடித்து வருகிறார்.

நேற்று முன்தினம் படப்பிடிப்பை முடித்து கொண்டு சென்னை செல்ல திட்டமிட்டார். அதற்காக திருப்பூரில் இருந்து பஸ் மூலம் சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு நள்ளிரவு 1 மணிக்கு வந்தடைந்தார். அங்கிருந்து தனியார் டிராவல்ஸ் மூலம் சென்னை செல்ல நினைத்தார்.

அந்த வேளையில் ஆட்டோ டிரைவர் ஒருவர் கொட்டாச்சியை வழிமறித்து, “சார்… எங்கே போகவேண்டும். ஆட்டோ தயாராக உள்ளது” என்றார். அதற்கு அவர், தனியார் டிராவல்ஸ் மூலம் சென்னை செல்ல வேண்டும் என்றும், அந்த பஸ் நிற்கும் இடத்திற்கு போக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

சேலம் புதிய பஸ் நிலையத்திற்கு எதிரேயே சம்பந்தப்பட்ட தனியார் பஸ் டிராவல்ஸ் அலுவலகம் இருந்தும், ஆட்டோ டிரைவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் ஆட்டோவில் கொட்டாச்சியை ஏற்றிக்கொண்டு 5 ரோடு தாண்டி நரசோதிப்பட்டிக்கு அழைத்து சென்றனர்.

தவறான இடத்திற்கு செல்வதை அறிந்த கொட்டாச்சி, ஆட்டோவை நிறுத்த சொல்லி தகராறு செய்தார். மேலும் தனது செல்போனில் சேலத்தை சேர்ந்த நடிகர் பெஞ்சமினை அழைத்தார். இரவு நேரம் என்பதால் அவரும் நன்றாக அயர்ந்து தூங்கி விட்டதாக தெரிகிறது.

அப்போது ஆட்டோவில் வந்த மூவரில் ஒருவர், கொட்டாச்சியின் செல்போனை பறித்தார். பின்னர் 3 பேரும் சேர்ந்து அவரை அடித்து உதைத்தனர். வலி தாங்காமல், “என்னை அடிக்காதீங்க…நான் நடிகர் கொட்டாச்சி.. என்னை விட்டு விடுங்கள்” என அவர் கதறினார்.

‘உன்னைப் பார்த்தால் நடிகர்போல தெரியவில்லையே’ எனக்கூறிய மூவரும், கொட்டாச்சி கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி, ரூ.2,500 ரொக்கம், செல்போன், ஆதார் கார்டு, ஏ.டி.எம். கார்டு ஆகியவற்றை பறித்தனர். பின்னர் மூவரும் அங்கிருந்து தப்பினர். நேற்று அதிகாலை அளவில் நரசோதிப்பட்டியில் தனியாக கொட்டாச்சி தவித்தபடி கண்கலங்கியவாறு நின்றிருந்தார்.

அப்போது அந்த வழியாக சென்ற 2 வாலிபர்களிடம், நடந்த விவரத்தை கொட்டாச்சி தெரிவித்தார். பின்னர் நடிகர் பெஞ்சமினை மீண்டும் அவர் தொடர்பு கொண்டார். அதைத்தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்று தங்கினார்.

நேற்று மதியம் 12 மணிக்கு கொட்டாச்சியை, பெஞ்சமின் சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தார். அங்கு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆட்டோ டிரைவர் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார்.

சேலம் புதிய பஸ் நிலையத்தில் இரவு வேளையில் சவாரிக்கு நின்ற ஆட்டோ டிரைவர்கள் யார், யார்? என்ற விவரம் சேகரித்து கொட்டாச்சியை தாக்கி பணம், நகை பறித்தவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

இது குறித்து காமெடி நடிகர் கொட்டாச்சி கூறுகையில், “திருப்பூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டு சென்னை செல்வதற்காக சேலம் புதிய பஸ் நிலையம் வந்தேன். அங்கு 3 பேர், என்னை ஆட்டோ சவாரி என அழைத்து சென்று பணம், நகையை பறித்ததோடு மட்டுமல்லாது என்னை தாக்கவும் செய்தனர். இன்று(அதாவது நேற்று) எனது பிறந்தநாள் ஆகும்.

பிறந்தநாள் அன்று இந்த சம்பவம் நடந்தது வேதனையாக உள்ளது. இன்றைய தினம் எனது மனைவி எனக்கு கார் பரிசளிக்க நினைத்திருந்தார். அதற்குள் இப்படி நடந்து விட்டது” என்றார்.

Related posts

கள்ளக்காதலால் நடுத்தெருவில் பிரபல சின்னத்திரை நடிகை அடிதடியில் …காணொளி

முதன்முறையாக சூர்யா நடிக்கும் படத்தில் தனுஷ்

மெகா ஸ்டாருக்கு தங்கச்சி ஆகப்போகும் ரவுடி பேபி?