(UDHAYAM, COLOMBO) – வென்னப்புவ – சால்ஸ் வில்லியம்ஸ் மாவத்தையை சேர்ந்த 25 வயதான யுவதியொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.
கடந்த 15 ஆம் திகதி மேலதிக வகுப்பு தொடர்பில் தகவல்களை பெற்று கொள்வதற்காக கொழும்பிற்கு வந்துள்ளார்.
பின்னர் அன்றைய தினம் மாலை வரை அவர் வீடு திரும்பாமை காரணமாக பெற்றோரால், வென்னப்புவ காவற்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
பின்னர் 17 ஆம் திகதி கொள்ளுபிட்டி கடற்கரையில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
எனினும் தனது மகள் தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு காரணம் எதுவும் இல்லை என பெற்றோர் கூறியுள்ளனர்.
இந்த மரணம் எப்படி ஏற்பட்டது என கற்பனை செய்து பார்க்க கூட முடியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
இதேபோன்று சந்தேகத்துக்கிடமான முறையில் கடந்த 14 ஆம் திகதி உயர் தர பாடசாலை மாணவியொருவர் கொட்டாவை புகையிரத நிலையத்திற்கு அருகில் உயிரிழந்திருந்தார்.
அந்த மாணவி கொட்டாவை புகையிரத நிலையத்திற்கு அருகில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
எனினும் இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதக அவரது தந்தை ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை களுபோவில மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளது.
சடலத்தை பரிசோதித்த போது உடலில் விஷம் இருப்பதாகவோ, அல்லது கழுத்து நெரிக்கப்பட்டு கழுதெழும்பு உடைப்பட்டதாகவோ எவ்வித அடையாளங்களும் தென்படவில்லை என அந்த மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி, மருத்துவர் சாலிக்கா கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
இதனால் சடலத்தின் பாகங்கள் இரசாயண பரிசோதனைக்கு அனுப்பப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாணவியை முன்பே கொலை செய்துவிட்டு தண்டவாளத்தில் உடல் போடப்பட்டு, காவற்துறையினரை திசை திருப்பு குற்றவாளியொருவர் முற்பட்டிருந்தால் இந்த இரசாயண பரிசோதனையின் பின்னர் உண்மை தெரியவரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த மாணவியின் காதணியொன்றும் காணாமல் போயுள்ளதாக அவரின் தந்தை, சட்ட மருத்துவ அதிகாரியிடம் கூறியுள்ளார்.
உயிரிழந்துள்ள மாணவியின் கையடக்க தொலைபேசி செயற்பாட்டில் உள்ள நிலையில், அதன் மூலமும் விசாரணைகளை முன்னெடுக்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.