(UDHAYAM, COLOMBO) – அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் இன ஐக்கியத்தைக் கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சரின் அனுசரணையில் ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரியில் நேற்று இப்தார் நிகழ்வு நடைபெற்றது. பிரதம அத்தியாகக் கலந்து கொண்ட முதலமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில் ,
இப்தார் நிகழ்வுகள் இன ஐக்கியத்துக்கு விதை தூவுகின்ற ஒன்றாகவே நான் காண்கின்றேன்.
இந்த இனவாத நிகழ்வுகள் இடம்பெறாது, எதிர் காலத்தில் இவ்வாறான அசௌகரியங்கள், அச்சுறுத்தல்கள், அத்துமீறல்கள், அடாவடித்தனங்கள் இந்த நாட்டில் வாழ்கின்ற எந்தவொரு இனத்துக்கும் எவராலும் இடம்பெறக் கூடாது
என்று நாம் திடசங்கற்பம் கொண்டு உழைக்க வேண்டும் என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதியும் பிரதமரும் அதற்காகப் பாடுபட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என்கின்ற மகிழ்ச்சியான விடயத்தையும் இந்த இனவாத முன்னெடுப்புகள் தகர்த்துவிடப் பார்க்கின்றன.
இனவாதிகளின் உருவாக்கத்தை இந்த நாடு இனி ஒருபோதும் அங்ககீகரிக்கவே கூடாது. அப்படி அங்கீகரித்துக் கொண்டிருந்தால் நாடு அழிவை நோக்கி நகரும் என்பதே யதார்த்தமாகும் என்று குறிப்பிட்டார்.
சிங்களவர்; தமிழர் முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவரும் இந்த நாட்டின் விலை மதிக்க முடியாத மனித வளங்கள் என்ற யதார்த்தத்தைப் புரிந்து கொண்டு இந்த நாட்டை ஓரணியில் நின்று கட்டியெழுப்ப வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.