வகைப்படுத்தப்படாத

தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்த நடவடிக்கை

(UDHAYAM, COLOMBO) – தேசிய அனர்த்த நிவாரண சேவைக்கான நிலையத்தை வலுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ,

தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித கதியில் செயற்பட்டு நிவாரண சேவைகள் மற்றும் மீள்கட்டுமாண பணிகளை செயற்றிறனாக மேற்கொள்வதற்காக தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தினை மேலும் வலுப்படுத்துவது காலத்தின் தேவையாக மாறியுள்ளதாக குறிப்பிட்டார்.

இதனடிப்படையில் தேசிய அனர்த்த நிவாரண சேவை நிலையத்தில் காணப்படுகின்ற வெற்றிடங்களை உடனடியாக நிரப்புவதற்கும், அனைத்து பிரதேச செயலகத்துக்கும் ஒரு அனர்த்த நிவாரண உத்தியோகத்தல் வீதம் நியமிப்பதற்கும், அவசர பணிகளுக்காக புதிதாக பதவிகளை உருவாக்குவதற்கும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் சமீபத்தில் இடம்பெற்ற வெள்ளம் மற்றும் அனர்த்தம் காரணமாக அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மேலும் விபரிக்கையில்,

2017ம் ஆண்டு மே மாதம் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகியவற்றால் 3,037 வீடுகள் முழுதுமாக சேதமடைந்துள்ளதுடன், 25,647 வீடுகள் பகுதியளவில் பாதிக்கப்பட்டுள்ளன. தமது வீடுகளை இழந்த மற்றும் சொந்த வீடுகளில் இருந்து இடம்பெயர்ந்த குடும்பங்கள் தற்போது நலன்புரி நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில், அக்குடும்பங்களுக்கு தற்காலிக வீடுகளில் வசிக்கும் வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் வகையில், ஒரு குடும்பத்துக்கு 7,500 ரூபா வீதம் கொடுப்பனவொன்றை 2017ம் ஆண்டு ஜுன் மாதம், ஜுலை மற்றும் ஆகஸ்ட் ஆகிய மாதங்களுக்காக பெற்றுக் கொடுப்பது தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பா சமர்ப்பித்த ஆவணங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் காணி அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான கயந்த கருணாதிலக மேலும் குறிப்பிட்டார்.

Related posts

மண்ணெண்ணெய்யை மொத்த விற்பனை செய்யத்தடை

OCKHI சூறாவளி கொழும்பில் இருந்து 600 கிலோ மீற்றர் தொலைவிற்கு நகர்வு

மன்னார் மாவட்ட அபிவிருத்தியில் அமைச்சர் ரிஷாட் திறம்படச் செயற்படுகின்றார்’ மன்னாரில் பிரதமர் புகழாரம்!