வகைப்படுத்தப்படாத

வடமாகாண அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு ; விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்

(UDHAYAM, COLOMBO) – வடமாகாண கௌரவ அமைச்சர்களுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை அறிக்கைபற்றிய

விவசாய அமைச்சரின் தன்னிலை விளக்கம்..

வடக்கு மாகாண சபையின் 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாத அமர்வுகளில் என்மீதான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளபோது நான் அவை ஆதாரம் இல்லாத,அபாண்டமான திட்டமிட்ட குற்றச்சாட்டுகள் என்றும், நான்கு கோடி அல்ல,நானூறுரூபா தன்னும் நான் நிதிஊழல் மோசடியில் ஈடுபட்டிருந்தால் அதை நிரூபியுங்கள் என்றும் தெரிவித்திருந்தேன்.

குற்றச்சாட்டுகள் தொடர்பாக என்னுடைய நிலைப்பாடு இப்போதும் அதுவாகவே இருக்கிறது.

மக்கள் என்மீது கொண்டிருந்த நல்லபிப்பிராயம் காரணமாகவே, வடக்கு மாகாணசபைக்கான தேர்தலில் கணிசமான வாக்குகளைப் பெற்று என்னால் வெற்றி பெற முடிந்தது. வாக்குகளைப் பணம் மூலம் வாங்குவதற்கு நான் பணம் படைத்தவன் அல்ல.தேர்தல் காலத்தில் எனக்கு நானே ஒளிவட்டம் போட்டு, கிரீடம் சூட்டி மக்களை வசீகரிக்கும் விளம்பரங்களைச் செய்வதற்கு நான் ஊடகப் பலம் கொண்டவனும் அல்ல. என் வாழ்வுமுறையினூடாக, ஒரு ஆசிரியனாக நான் சிறுகச் சிறுகச் சம்பாதித்து வைத்த நற்பெயர்தான் எனது மூலதனம். ஆனால், எனது பெயருக்குக் களங்கம் கற்பித்து, எனது ஆளுமையைப் படுகொலை செய்து, அரசியல் அரங்கில் இருந்தும் பொதுவாழ்க்கையில் இருந்தும் என்னை அகற்றும் நோக்குடன் பொய்யான குற்றச்சாட்டுகள் என் மீது சுமத்தப்பட்டு வந்துள்ளன.

இப்போது,என் மீது மட்டுமல்ல, சகல கௌரவ அமைச்சர்கள்மீதும் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை விசாரிக்கவென கௌரவ முதலமைச்சர் அவர்களினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது. இந்த அறிக்கையில் நான் கையூட்டுப் பெற்றதாகவோ ஊழல் புரிந்ததாகவோ, நிதி மோசடிகளில் ஈடுபட்டதாகவோ விசாரணைக்குழுவினர் எங்கும் குறிப்பிடவில்லை. அவர்கள் மட்டுமல்ல, எவர்களாலுமே இவ்வாறு குறிப்பிட முடியாது. இந்த இழிசெயலில், அமைச்சராகப் பணிபுரியும் இக்காலப்பகுதியிலோ அல்லது அரசியலுக்கு வர முன்னரோகூட நான் ஈடுபட்டதில்லை. வருங்காலத்தில் சோற்றுக்கு வழியின்றித் தவிக்கும் ஒரு நிலை வந்தாலும்கூட இவ்வீனச்செயலில்நான் ஈடுபடப்போவதில்லை. ஆனால், நான் இத்தகையவன் என்ற ஒரு மாயத்தோற்றத்தை, என்பற்றிய தவறான ஒரு விம்பத்தைப் பொதுமக்களிடையே ஏற்படுத்தி எனது அரசியல் வாழ்க்கையை முடிவுறுத்தும் விதமாக இந்த அறிக்கை அமைந்துள்ளதென்பதை வருத்தத்தோடு பதிவு செய்கிறேன்.

இந்த அறிக்கையில் விசாரணையின்போது நானும் திணைக்கள அதிகாரிகள் பலரும் தெரிவித்த பல விடயங்கள் கருத்தில் எடுக்கப்படவில்லை. நான் தெரிவித்ததாக தெரிவிக்காத விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. பிழையான விடயங்கள் இடம்பெற்றிருக்கின்றன. மோசடி, ஊழல், கையூட்டு, நிதி விரயம் போன்ற சொற்களுக்கான அர்த்தச் செறிவுகள் வௌ;வேறானவை. ஆனால், இந்த அறிக்கையை மேலோட்டமாகப் படிப்பவர்கள் தவறான முடிவுக்கு வரும் விதமாக இச்சொற்களை மனம்போன போக்கில் பயன்படுத்திவிட்டு, என்னைப் பதவி விலக வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இவற்றின்மூலம் விசாரணைக்குழுவில் உள்ள சிலர் எப்படியாவது என்னைக் குற்றவாளியாக்கிவிட வேண்டும் என்ற முன்கூட்டிய முடிவுடன், ஏதோ ஒரு சூழ்ச்சி நிரலில் செயற்பட்டுள்ளார்கள் என்றே நான் கருதுகின்றேன்.

பணி செய்வதற்குப் பதவி அவசியம் இல்லை. கௌரவ முதலமைச்சர் அவர்கள் இடும் உத்தரவு எதுவோ அதனை நான் சிரந்தாழ்த்தி ஏற்றுக்கொள்வேன். ஆனால், பொய்யான, நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுகளுடன் செல்வதற்கு மனம் ஒப்பவில்லை. அவ்வாறு செய்தால் செய்யாத குற்றங்களை எல்லாம் நான் ஏற்றுக்கொண்டதாகிவிடும். இதனால் ஏற்படும் அவப்பெயர் தலைமுறைகளுக்கும் நீளும். அந்தவகையில் எனது தன்னிலை விளக்கத்தைக் கருத்தூன்றிக் கவனம் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

விசாரணை அறிக்கையில் குற்றச்சாட்டுகள் ஒவ்வொன்றுக்கும் விசாரணைக்குழு தெரிவித்திருக்கும் அவதானங்கள் மற்றும் முடிவுகள் தொடர்பாக நான் விளக்கம் அளிக்க விரும்புகிறேன். அதற்கு முன்பாக, ஒட்டுமொத்த விசாரணை அறிக்கையிலும் மேலோங்கி நிற்கும் மூன்று விடயங்கள் தொடர்பாக நான் விளக்கம் அளிப்பது அவசியமாகும்.

1. என்மீதான இலஞ்சம், ஊழல், நிதிமோசடிக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்பதை உய்த்;தறிவுகளாக வெளிப்படுத்திய விசாரணைக்குழு, தனது முடிவில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றங்கள் நிரூபிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

எனக்கு எதிராகப் 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பிலான விசாரணைக்குழுவின் அவதானிப்புகளும் முடிவுகளும் அறிக்கையின் 4.1 முதல் 4.10 வரையான பந்திகளில் காணப்படுகின்றன. இவற்றில் இலஞ்சம், நிதிவிரயம், மோசடி தொடர்பான குற்றச்சாட்டுகள் 4.1, 4.2, 4.4, 4.5 மற்றும் 4.7 ஆகிய பந்திகளில் பரிசீலிக்கப்பட்டுள்ளன. இக்குற்றச்சாட்டுகளில் இலஞ்சம், ஊழல், நிதிமோசடி இடம்பெற்றிருப்பதாக நிரூபிக்கப்படவில்லை என விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.இது விசாரணைக்குழுவின் உய்த்தறிவுகளாகஇருக்க, அவர்களின் முடிவுகள் மற்றும் விதந்துரைப்புகள் குழுவின் உய்த்தறிதலுக்கு முற்றிலும் முரணானவையாக உள்ளன. ஊழல் மற்றும் நிதி மோசடியை நிரூபிக்க ஆதாரம் இல்லை என உய்த்தறிந்த விசாரணைக்குழுவினர்எவ்வாறு பக்கம் 79இல் வடமாகாண விவசாயஅமைச்சர் ஊழல் செய்துள்ளதாக முடிவுறுத்துகிறார்கள்? குற்றம் எண்பிக்கப்படவில்லை எனக் கூறும் விசாரணைக்குழுவினர்எவ்வாறு குற்றம் நிரூபிக்கப்பட்டதாக முடிவுறுத்துகிறார்கள்? ஆகவே, ஏற்கனவே என்னைப்; பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று முடிவை எடுத்துவிட்டு அதற்கான சாட்சியங்களை ‘முடிவெடுத்ததன் பின் முடிவிற்கான காரணங்களைத் தேடும்’ வகையில் தேடி,அவை கிடைக்கப்பெறாதபோது,தாம் முன்கூட்டி எடுத்த முடிவுகளையே பரிந்துரைகளாக முன்வைத்துள்ளார்கள்.

மேல் நீதிமன்ற நீதிபதிகளாக கடமையாற்றிய இருவர் உறுப்பினர்களாக அமையப்பெற்ற இந்தக் குழு ஆதாரங்கள் இல்லை எனக் கண்டதன் பின்னரும் ‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு குற்றங்கள்’ நிரூபிக்கப்பட்டுள்ளன எனக் கூறுவது மிகவும் அடிப்படையான குற்றவியல் கோட்பாடுகளை மீறுவதாகவே அமைந்துள்ளது. மேலும், ஓரு பூர்வாங்க அறிக்கை ஒரு குற்றவியல் விசாரணையாக இருக்கமுடியாது என்று தெரிந்திருந்தும் குற்றவியல் சட்டத்திலும் எண்பியல் சட்டத்திலும் அதிஉச்ச எண்பிக்கும் பொறுப்பைக் கோரும் ‘சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட வகையில் Beyond reasonable doubt’’ நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறுவது மிகவும் அடிப்படையிலான சட்டத்தவறென்றே எண்ணுகின்றேன்.

அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளவற்றை வாசிக்க பொதுமக்களுக்கு நேரம் கிடைக்காது, அவைதொடர்பிலான உண்மை நிலையை விளங்கிக் கொள்ள அவர்களுக்கு அவகாசம் கிடைக்காது, அவர்கள் முடிவுகளிலேயே கவனம் செலுத்துவார்கள், அவையே ஊடகங்களில் பரபரப்பான தலைப்புச் செய்திகளாகவும் வரும் என்ற துணிவில் தமது உய்த்தறிவுகளும் பரிந்துரைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டவையாக இருக்க வேண்டும் என்பது தொடர்பில் விசாரணைக்குழு கவனம் செலுத்தாமல் விட்டுள்ளது. இக்காரணங்களினாலேயே விசாரணைக்குழு என்னைக் குற்றவாளியாக்கிவிட வேண்டும் என்ற முன்கூட்டிய முடிவுடன் ஏதோ ஒரு நிகழ்ச்சி நிரலில் செயற்பட்டுள்ளது என்று குறிப்பிட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை எனக்கு ஏற்பட்டுள்ளது.

2. பதின்மூன்றாவது திருத்தச் சட்டத்தின்படி மாகாண அமைச்சர் ஒருவர் சுற்றுச்சூழல் சார்ந்த விடயங்களில் தலையிடுவதை விசாரணைக்குழு சட்டபூர்வமற்றதென நிறுவ முயன்றுள்ளது.

குற்றச்சாட்டுகள் 4.1 மற்றும் 4.6 பகுதியளவில் அமைச்சரின் சட்ட அதிகார எல்லைகளுடன் சம்பந்தப்பட்டவை ஆகும். மாகாண அமைச்சர் ஒருவருக்கு ஒருங்கிய நிரலின் கீழ் உள்ள விடயம் ஒன்று தொடர்பில் (மத்திய, மாகாண அரசாங்கங்கள் இரண்டுக்கும் பொதுவான விடயங்கள் தொடர்பில்) நிறைவேற்றுஅதிகாரம் உண்டா என்பது தொடர்பிலானதாகும். குறிப்பாக ஒருங்கிய நிரலில் இடம்பெறும் விடயம் ஒன்று தொடர்பில் மாகாணசபையால் ஆக்கப்பட்ட சட்டம் ஒன்று இல்லாதபோதும் அவ்விடயம் தொடர்பில் மாகாண அமைச்சர் நிறைவேற்று அதிகாரம் உள்ளவரா என்பது தொடர்பிலான கேள்வி ஆகும். இக்கேள்விக்கு தற்போதைய அரசியல் அமைப்பின் கீழோ ஆக்கப்பட்ட சட்டங்களின் கீழோ நேரடியாகப் பதில் வழங்கப்படவில்லை. ஆனாலும், தற்போது நிலவும் சட்டங்களின் அடிப்படையில் அதிகாரப் பகிர்வை மேலும் வலுப்படுத்தும் ஓர் விடை ஒன்று பெறப்பட முடியும். அவ்வாறான ஓர் விடையை உய்த்தறிந்து அதற்கு முக்கியத்துவம் அளிப்பது அதிகாரப் பகிர்வைக் கோரி நிற்கும் தமிழ்மக்களின்அரசியலுக்கு வலுச்சேர்ப்பதாக அமையும்.

மாகாணசபைகள் (பின்விளைவுகள்) சட்டத்தின் {Provincial Councils (Consequential Provisions) ActNo 12 of 1989} பிரிவு 2 இன் பிரகாரம் மாகாணசபை ஒன்று, தனக்கு ஒதுக்கப்பட்ட மாகாணசபை நிரலில் உள்ள விடயம் ஒன்று தொடர்பில் சட்டம் ஒன்று இயற்றாத போதிலும், மத்திய பாராளுமன்றினால் ஆக்கப்பட்ட சட்டம் தொடர்பிலான நிறைவேற்று அதிகாரம் கொண்டது எனக் கூறுகின்றது. எனினும், ஒருங்கிய நிரலில் உள்ள விடயம் தொடர்பில் மத்திய பாராளுமன்றினால் ஆக்கப்பட்ட சட்டம் ஒன்று தொடர்பில் மாகாண அமைச்சருக்கு அதிகாரம் உண்டா என்பது தொடர்பில் இச்சட்டம் அமைதியாகவே உள்ளது. இவ்விடயத்தில் சட்டம் அமைதியாக இருக்க, இச்சட்ட இடைவெளி தொடர்பில் அதிகாரப் பகிர்வுக்குச் சார்பாகவே ஓர் சட்ட வாசிப்பு எமக்கு அவசியமாகின்றது. அம்முடிவானது மாகாணசபையால் ஒருங்கிய நிரலில் உள்ள விடயம் ஒன்று தொடர்பில் சட்டம் இயற்றாதபோது, மத்திய பாராளுமன்றத்தால் ஆக்கப்பட்ட சட்டம் ஒன்றின் கீழான நிறைவேற்று அதிகாரம் மாகாண அமைச்சருக்கும் மத்திய அமைச்சருக்கும் ஒருங்கிய நிலையில் இருக்க வேண்டியது என்றே இருக்க முடியும். விசாரணைக்குழு இம்முடிவுக்கு வராமல் அதிகாரங்களை மத்தியமயப்படுத்தும் வகையில் நிலைப்பாடு எடுத்துள்ளமையும் அதன் அடிப்படையில் மாகாண அமைச்சர் தனது அதிகார எல்லையை மீறி இருக்கின்றார் என்ற முடிவுக்கு வந்துள்ளமையும் சட்டத்தின் பாற்பட்டதும் அல்ல. அதிகாரப் பகிர்வைப் பலப்படுத்தும் நோக்கில் சொல்லப்பட்டதும் அல்ல என்பதுவே எனது கருத்தாக அமைந்துள்ளது.

3. அமைச்சின் செயற்திட்டங்களின் கொள்கைப் பெறுமதிகளை, விசாரணைக்குழு தனது செயற்பாட்டு எல்லைக்கு அப்பால் சென்று கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

அறிக்கையின் 4.2, 4.5, 4.7, 4.8 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மாகாண அமைச்சு கொள்கை ரீதியாக முன்னிலைப்படுத்தியுள்ள செயற்றிட்டங்களுடன் தொடர்புடையன. உழவர் விழா, விவசாயக் கண்காட்சி, பார்த்தீனியம் அழித்தல், கார்த்திகை மாத மரநடுகைத் திட்டம், ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் ஆகிய கொள்கை ரீதியாக முக்கியப்படுத்தப்பட்ட செயற்றிட்டங்களின் கொள்கைப் பெறுமதிகளை விசாரணைக்குழு கேள்விக்கு உட்படுத்தியுள்ளது. இது விசாரணைக்குழுவின் செயற்பாட்டெல்லைக்கு அப்பாற்பட்டதாகும். அமைச்சர் எந்த செயற்றிட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பது கொள்கை முடிவுகளாகும். கொள்கை முடிவுகள் சட்டம் கொண்டு துணிய முடியாதவை. அச்செயற்றிட்டங்களின் வெற்றி தோல்வி குற்றவியல் சட்டம் கொண்டு தீர்மானிக்கப்பட முடியாதவை. செயற்றிட்டங்கள் நிறைவேற்றப்பட்ட விதத்தில் நிதி மோசடி தொடர்பில் தமக்கு எந்தச் சாட்சியமும் கிடைக்கப்பெறவில்லை என விசாரணைக்குழு முடிவுறுத்தியுள்ள நிலையில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டுமா என்பது தொடர்பில் விசாரணைக்குழு தமது தனிப்பட்ட அபிப்பிராயங்களையும் கருத்து வேறுபாடுகளையும் அமைச்சரின் தவறுகளாகக் காட்டுவது என்பது ஓர் விசாரணைக்குழு பின்பற்ற வேண்டிய மிக அடிப்படையான முறைசார் சட்டத் தத்துவங்களை மீறுவதாகும் என்றே கருதுகிறேன்.
என்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரணைக்குழுவின் அறிக்கையில் மேலோங்கி உள்ள மூன்று விடயங்கள் தொடர்பாக எனது விளக்கங்களைப் பதிவு செய்த நான், ஒவ்வொரு குற்றச்சாட்டிலும் உள்ள விடயங்கள் தொடர்பாகவும் சிலவிளக்கங்களைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

குற்றச்சாட்டு இல 4.1

வவுனியா மாவட்டத்தில் மூங்கில், மல்லிகை வளர்ப்புத் திட்டங்கள், எள்ளு விநியோகித்து சுயதொழிலை முன்னெடுக்க வைக்கும் திட்டம் ஆகியவற்றை கைலஞ்சம் பெறும் நோக்கத்திற்காக நிராகரித்தமை.

• விவசாய அமைச்சர் வவுனியாவில் மூங்கில் வளர்ப்புத் திட்டத்தை அமுல்படுத்துவதை மறுத்ததோடு, குறிப்பிட்ட முதலீட்டாளரை வேண்டிய ஆவணங்களுடன் வந்து தன்னைச் சந்திக்கும்படி கோரியமை விவசாய அமைச்சரின் நடத்தைமீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது எனவும்

• மூங்கில் நடுகைத் திட்டத்தை நிராகரித்தமை சட்டபூர்வமற்றது எனவும் விசாரணைக்குழு கருதுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணக்குழுவின் இக்கூற்றை முற்றாக நான் மறுக்கிறேன். வவுனியா மாவட்டச் செயலகத்தில் 11.09.2015 அன்று அரசாங்க அதிபர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட விவசாயக் குழுக்கூட்டத்திலேயே மூங்கில் செய்கைக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை என்ற முடிவு எடுக்கப்பட்டு, அதற்கான அறிவித்தல் கடிதம் அரசாங்க அதிபரின் கையொப்பத்துடன் (இணைப்பு இல-1) வவுனியாவின் நான்கு பிரதேச செயலர்களுக்கும், வவுனியா மாவட்ட கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளருக்கும் வவுனியா மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இதன் பின்பே முன்பின் அறிமுகம் இல்லாத ஒருவர் தொலைபேசியினூடாக என்னைத் தொடர்பு கொண்டு அனல் மின்சாரம் பெறும் பொருட்டு மூங்கில் செய்வதற்கான அனுமதியை கௌரவ முதலமைச்சர் அவர்கள் தனக்கு வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார். இதன்போதே ஆவணங்களைக் கொண்டுவந்து அலுவலகத்தில் என்னைச் சந்திக்குமாறு சொல்லியிருந்தேன்.

விஞ்ஞானரீதியாக எமது பிரதேசத்தில் மூங்கில் செய்கை பொருத்தமற்றது என்ற கருத்தை நான் கொண்டிருந்தபோதும் அனுமதி மறுத்தது வவுனியா மாவட்டச் செயலகமே ஆகும். இந்நிலையில் நான் அனுமதி மறுத்தது சட்டபூர்வமற்றதெனக் குறிப்பிட்டிருப்பது பிழையானது என்பதோடு, நேரில் வந்து ஆவணங்களுடன் அலுவலகத்தில் என்னைச்சந்திக்குமாறு கோரியது எனது நடத்தைமீது தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்துவது என்று குறிப்பிட்டிருப்பது அவர்களது ஊகத்தின் அடிப்படையில் அமைந்தது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

• திணைக்களங்கள் தொடர்பான விடயங்கள் விவசாய அமைச்சருக்குத் தெரிய வேண்டுமென திணைக்கள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு அதனை நடைமுறைப்படுத்த நினைப்பது முதலீட்டாளர்களை விவசாயத்துறையில் முதலீடு செய்வதற்கு, போரினால் பாதிக்கப்பட்ட விவசாயிகளது வாழ்வதாரத்தை உயர்த்த முனைபவர்களுக்கு ஒரு முட்டுக்கட்டையாக உள்ளதெனவும், இது அமைச்சரின் அதிகார துஸ்பிரயோகம் என விசாரணைக்குழு அபிப்பிராயப்படுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் பசுமை உலகம்  (Future green world)  என்ற தனியார் நிறுவனம் விவசாயத் திணைக்களத்தின் ஆலோசனைகளோ அனுமதியோ இன்றி வடக்கில் விவசாயிகளைப் பெரிய அளவில் இஞ்சிச் செய்கையில் முதலிடச் செய்து அவர்களை நட்டமடைய வைத்தது. நட்டஈட்டை பெற்றுத்தருமாறு கோரி பாதிக்கப்பட்ட விவசாயிகள் கௌரவ முதலமைச்சரை அணுகியதையும், தாங்கள் இதுதொடர்பாக என்னிடம் விளக்கம் கேட்டிருந்தமையும், நான் இதற்கான பதிலைத் தங்களுக்கு அனுப்பியிருந்தமையும், அப்பதிலில், வடக்கு மாகாணசபையின் கவனத்துக்கு வராமல் தற்போது ஏராளமான திட்டங்கள் மத்திய அரசின் நேரடி அனுமதி அல்லது ஆசீர்வாதத்துடன் முன்னெடுக்கப்பட்டு வருவதால் இத்தகைய பதிவு ஒன்றை முதலமைச்சர் அலுவலகத்தில் மேற்கொள்ளுவதற்கான நடவடிக்கைகளைக் காலதாமதமின்றி மேற்கொள்ளுமாறு நான் கேட்டுக்கொண்டிருந்தமையையும் தங்கள் நினைவுக்கு கொண்டுவர விரும்புகிறேன்.(இணைப்பு இல-2)
இவற்றின் அடிப்படையில், எனது அமைச்சுக்கு உட்பட்ட திணைக்களங்களினூடாக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் எனக்கு அறியத்தருமாறு திணைக்களத் தலைவர்களை நான் கோருவதிலும், புதிய திட்டங்களை அறிமுகப்படுத்த முயல்பவர்கள் அதனைத் திணைக்களங்களுக்குத் தெரியப்படுத்தி அவர்களது ஆலோசனைகளின் அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்ப்பதிலும் எவ்வித அதிகார துஸ்பிரயோகமும் இருப்பதாக நான் கருதவில்லை.

குற்றச்சாட்டு இல 4.2

கண்காட்சிகள், பொங்கல் விழா, உழவர் விழா எனப் பல விழாக்களைப் பெருந்தொகைப் பணத்தைச் செலவழித்து நடாத்தியன் மூலம் மாகாணசபையின் பெரும் அளவிலான நிதியை வீண்விரயம் செய்தமை.

• முல்லைத்தீவில் 2016ஆம் ஆண்டு தைப்பொங்கல் நாளையொட்டி நடந்த, கவிஞர் வைரமுத்து அவர்கள் விருந்தினராகக் கலந்துகொண்ட உழவர் பெருவிழாவுக்கு செலவிடப்பட்ட முழுநிதியும் வீண் விரயம் செய்யப்பட்டதென்ற குற்றச்சாட்டை எண்பிப்பதற்கு முறைப்பாட்டளர்கள் தவறிவிட்டனர் என்று விசாரணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் இந்நிகழ்ச்சியை ஒரு களியாட்டம் என்று குறிப்பிட்டுள்ள விசாரணைக்குழு, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தில் இதற்கான தேவை ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

கவிஞர் வைரமுத்து அவர்களின் பன்முகத் தன்மையைத் தெரிந்து கொள்ளாமல், அவரை ஒரு திரைப்படக் கலைஞனாக மாத்திரமே விசாரணைக்குழுவினர் அறிந்து வைத்துள்ளார்கள் போலும். அதனால்தான் முற்றுமுழுதாக விவசாயிகளைக் கௌரவிக்கும் முகமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியை அவர்கள் களியாட்ட விழாவாகக் குறிப்பிட்டுள்ளனர். போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்ட மக்களின் உளவியல் ஒத்தடமாகவே கவிஞர் வைரமுத்து அவர்களது உரை அமைந்திருந்தமையையும் அவர் தனது சொந்த செலவிலேயே இங்கு வந்து சென்றார் என்றும், அவருக்காக அமைச்சு செலவிட்ட தொகை ஆக 12,850 ரூபா மாத்திரமே என்றும் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஆண்டுதோறும் உழவர்களின் சாதனைகளைக் கௌரவிக்கும் முகமாக நடைபெறும் உழவர் பெருவிழா மாத்திரம் அல்ல, எமது அமைச்சால் ஏற்பாடு செய்யப்படும் எந்த ஒரு நிகழ்ச்சியும் களியாட்டமாக அமைவதில்லை என்று உறுதிபடத் தெரிவித்துக் கொள்வதோடு, அமைச்சின் பிரதான நிகழ்சிகளில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட கௌரவ முதலமைச்சர் அவர்களும், கௌரவ மாகாணசபை உறுப்பினர்களும் இதை நன்கறிவார்கள் எனவும் நம்புகிறேன்.

உழவர் பெருவிழாவுக்கு பிரபலமான ஒருவர் விருந்தினராக அழைக்கப்படும்போது இவ்விழா தொடர்பான விடயம் ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்தப்படும். இச்செய்தியினூடாக சிறந்த விவசாயிகளைக் கௌரவிக்கும் நிகழ்ச்சி தொடர்பாகவும், விவசாயம் சார் தொழில்நுட்பத் தகவல்களும் வெளிக்கொணரப்படுவதனால் இவ்விடயம் தொடர்பான செய்திகளை அறிந்து கொள்வோரின் எண்ணிக்கையும் ஆர்வமும் அதிகரிக்கின்றது. இதனால் விவசாயிகளும் மற்றும் விவசாயிகள் அல்லாத மற்றவர்களும் கவரப்பட்டு இந்நிகழ்ச்சிக்கு வரும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இதன் மூலம் விவசாயம்சார் தொழில்நுட்பத் தகவல்கள் சென்றடையும் தன்மையும் அதிகரிக்கப்படுகின்றது. மேலும் சிறப்பான முறையில் விவசாயச் செய்கையில் ஈடுபட்டு இவ்வாறான போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் என்ற ஆர்வமும் விவசாயிகளுக்கு ஏற்படும். அந்தவகையில் இத்தகைய விழாக்களுக்கு செலவிடும் பணம் விரயம் அல்ல. மாறாக, அபிவிருத்திக்கான ஒரு முதலீடாகவே கருதப்பட வேண்டும்.

குற்றச்சாட்டு இல 4.4

Beta Power (Pvt) Ltd & Joule Power (Pvt) Ltd நிறுவனங்களிடமிருந்து 2015ம் ஆண்டு முதல் வருடம் ஒன்றிற்கு ரூபா 20 மில்லியன் வீதம் 2016 வரை பெறப்பட்ட ரூபா 40 மில்லியன் பணத்தை மோசடி செய்தமை.

• பீற்றாபவர், யூல்பவர் காற்று மின் ஆலைகளின் வணிக நிறுவனங்களுக்கான சமூகக் கடப்பாட்டு நன்கொடையாக 2015ஆம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் 20மில்லியன் ரூபா பிரதம செயலாளரின் ஊடாக விவசாய அமைச்சின் செயற்பாடுகளுக்கு வழங்கப்படுகிறது. இந்நிதியில் பெருமளவு மோசடி என்று குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், விவசாய அமைச்சர் மோசடி செய்தார் என்பதை எண்பிப்பதற்கான சாட்சிகள், சான்றாவணங்கள் விசாரணக்குழுவுக்கு முன்வைக்கப்படாத காரணத்தால் இக்குற்றச்சாட்டில் இருந்து விவசாய அமைச்சர் விடுவிக்கப்படுவதாக விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

• அத்தோடு நீர்விநியோகம் என்ற அமைச்சின் பெயரைத் தவிர நிதிக்குழுவாலோ அல்லது மாகாணசபை பாதீட்டிலோ நீர் விநியோகத்துக்கு எவ்வித நிதி ஒதுக்கமும் பெறாத விவசாய அமைச்சர் காற்று மின் ஆலைகளால் அன்பளிப்பாக வழங்கப்பட் 6 தண்ணீர்த் தாங்கி வாகனங்களை விவசாய அமைச்சில் வைத்திருப்பது வீண்விரயம் என்று குறிப்பிட்டுள்ள விசாரணைக்குழு, இந்த வாகனங்களை உள்ளூராட்சி அமைப்புகளிடம் கையளிக்கவேண்டும் எனப் பரிந்துரை செய்துள்ளது.

விசாரணைக்குழுவினர் குறிப்பிட்டதைப்போல அல்லாது மாகாணசபை பாதீட்டில் நீர் விநியோகத்துக்கும் சுற்றாடலுக்கும் நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது என்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன். (இணைப்பு இல-3)
இந் நீர்த்தாங்கி வாகனங்கள் தொடர்பாக பிரதம செயலாளரும் காற்றாலை மின் உற்பத்தி நிறுவனங்களிடம் ஒப்பந்தம் ஒன்றை செய்து கொண்டுள்ளனர்.

அதில் விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தேவைக்களுக்கான நீரை வழங்குவதற்கும், அவசிய வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளுக்கு உடனடி நிவாரணமாக நீர் வழங்கவும் இந்த நீர்த்தாங்கி வாகனங்கள் விவசாய அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.(இணைப்பு இல-4)

அவ்வாறு இருந்தும் வலிவடக்கு பிரதேச சபையிடமும், வலிதெற்கு பிரதேச சபையிடமும் 2015ஆம் ஆண்டே இரண்டு நீர்த்தாங்கி வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன என்பதையும்,(இணைப்பு இல-5) ஏனைய நான்கு நீர்த்தாங்கி வாகனங்களும் விவசாய அமைச்சின் பராமரிப்பில் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டதற்கமைவாக சேவையில் ஈடுபட்டுள்ளன என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோன்.

• காற்றுமின் ஆலை வழங்கிய நிதி விவசாயத் திணைக்களத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த 2016ஆம் ஆண்டு 252 விவசாயக் கிணறுகள் புனரமைப்புச் செய்யப்பட்டுள்ளன. இவற்றில் சில கிணறுகளின் உரிமையாளர்களைச் சந்தித்து உரையாடிய விசாரணைக்குழு, அவர்கள் தங்களுக்கு முழுமையான செலவு தொகை வழங்கப்படவில்லை எனத் தெரிவித்திருப்பதையடுத்து, இதில் நிதிமோசடி இடம் பெற்றிருக்கலாம் என்ற சந்தேகத்தை விசாரணைக்குழு வெளிப்படுத்தியுள்ளது.

• விவசாய அமைச்சரை இம்மோசடிக் குற்றச்சாட்டில் இருந்து விடுவித்துள்ள விசாரணைக்குழு, திருத்தப்பட்ட கிணறுகளின் செலவு விபரங்கள் தொடர்பில் பூரண விசாரண தேவை எனத் தெரிவித்துள்ளது.

விவசாயத் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கீழ் உள்ள விவசாய சம்மேளனங்கள் ஆகிய மூன்று தரப்புகள் இணைந்து வினைத்திறன் மிக்கதாகவும் விளைபயன் மிக்கதாகவும் மேற்கொண்ட இத்திட்டத்தில் எவ்வித மோசடிகளும் இடம்பெறவில்லை, இறுதிக் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படும்போது பொறியியலாளரின் வேலைச்சான்றிதழ், வேலை நடைபெற்றதை உறுதிப்படுத்தும் புகைப்படம், செலவுச் சிட்டைகள், விவசாயப் போதனாசிரியரின் உறுதிப்படுத்தல் கடிதம் போன்றவை சமர்ப்பிக்கப்பட்டு சரிபார்க்கப்பட வேண்டியிருந்ததால் ஒரே தடவையில் எல்லோருக்கும் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்படவில்லை. டிசம்பர் மாத இறுதிப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட ஆவணங்கள் உறுதிப்படுத்தப்பட்ட பின்பே இறுதிக் கொடுப்பனவுக்கான காசோலைகள் விவசாயத் திணைக்களத்தால் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் ஒவ்வொரு வேலையிலும் 5 விழுக்காடு பணம் கழிக்கப்பட்டு திணைக்கள வைப்புக் கணக்கில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இவ்வைப்புப் பணம் ஆறு மாதத்துக்கும் ஒரு வருடத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வேலை திருப்திச் சான்றுதழ் வழங்கப்பட்டபின்பே கொடுப்பனவு செய்யப்படும். இந்நடைமுறைகளைச் சரிவரப் புரிந்து கொள்ளத் தவறியமையே குற்றச்சாட்டுகளுக்கு வழிகோலியுள்ளது.

புனரமைக்கப்பட்ட கிணறுகளின் உரிமையாளர்களின் விபரங்கள், புனரமைக்கப்பட முன்பும் பின்பும் எடுக்கப்பட்ட கிணறுகளின் புகைப்படங்கள், செலவு தொகை உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பூரண அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாகாணக் கணக்காய்வுத் திணைக்களத்தின் அறிக்கையிடலும் பூர்த்தி அடைந்துள்ளது. இவற்றைப் பார்வையிட்டு கிணறுகள் புனரமைப்பில் மோசடிகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ள முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குற்றச்சாட்டு இல 4.5

பார்த்தீனியம் ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் மாகாணநிதியை மோசடி செய்தமை.

• நடைமுறைப்படுத்த முடியாத பார்த்தீனியம் ஒழிப்புத் திட்டத்தை ஆரம்பித்து இடைநடுவில் கைவிட்டதன் மூலம் செலவு செய்யப்பட்ட பணம் வீண் விரயம் எனக் கருதுவதாகவும், இப்பணம் மோசடி செய்யப்பட்டதாக சாட்சிகள் இல்லாத நிலையில் திட்டமிடப்படாத செலவு எனவும் கருதியுள்ள விசாரணைக்குழு இதற்கு விவசாய அமைச்சரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

பார்த்தீனியம் உடனடியாக முற்றாக அழித்துவிடக்கூடிய களை அல்ல என்று தெரிந்தும், அழித்தே தீரவேண்டிய அந்நியக் களை என்பதால் இது தொடர்பாக விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தி அவர்களை பார்த்தீனியம் ஒழிப்பில் ஈடுபட வைக்கும் நோக்கிலேயே விவசாய அமைச்சால் பார்த்தீனியம் ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. எனினும், திட்டம் ஆரம்பித்த பின்னர், பார்த்தீனியத்தை அழிப்பதற்கு விசிறப்பட்டு வந்த கிளைபோசேற் என்ற களை கொல்லியின் இறக்குமதிக்கு இலங்கை அரசாங்கம் பூரண தடை விதித்ததால், இத்திட்டம் பின்னடைவைச் சந்தித்தது.

தாவரப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பார்த்தீனியம் விளைநிலத்தில் அல்லது வீட்டு வளவுகளில் காணப்படின் அதனை அழிப்பது உரிமையாளர்களின் கடமை. அழிக்கத் தவறின் குற்றம் இழைத்தவராகக் கருதப்பட்டு ஆறு மாதங்கள் வரை சிறைவாசமும், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணமும் அறவிடப்படலாம். ஆனால், இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்தால் சட்ட வல்லுநர்களுக்கு இதுவரையில் உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்படவில்லை.

இலங்கையில் ஏனைய மாகாணங்களில் பார்த்தீனியம் பெரும் பிரச்சினையாக உருவெடுக்காததால் மத்திய விவசாயத் திணைக்களமும் சட்டமா அதிபர் திணைக்களமும் இதுபற்றிப் போதிய அக்கறை காட்டவில்லை. ஆனால் மாகாண விவசாயத் திணைக்களத்தின் இடையறாத முயற்சிகளின் காரணமாக தற்போது மத்திய விவசாயத் திணைக்களம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குரிய செயன்முறைகளின் வரைவு ஒன்றை சட்டமா அதிபர் திணைக்களத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது.சட்டம் நடைமுறைக்கு வரும்போது பார்த்தீனியம் ஒழிப்பு சாத்தியம் ஆகும்.

விவசாய அமைச்சால் பார்த் தீனியம் ஒழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பின்பே பார்த்தீனியம் ஒரு பேசு பொருளாகி அது குறித்த விழிப்புணர்வு பரவலாக ஏற்பட்டுள்ளது.(இணைப்பு இல-6) அந்தவகையில் விவசாய அமைச்சால் செலவிடப்பட்ட பணத்தை நான் வீண் விரயமென்று கருதவில்லை.

குற்றச்சாட்டு இல 4.6 (அ)

Northern powervd என்ற மின் உற்பத்தி நிலையம் சுன்னாகத்தில் தொழிற்பட்ட வேளையில் அதனது கழிவு எண்ணெய் குடிநீரில் கலந்த விடயத்துக்கு ஆய்வுக்குழு ஒன்றை நியமித்து அக்குழுவின் அறிக்கை மூலம் நிறுவனத்துக்கு சாதகமாக அறிக்கையை வெளிப்படுத்தி உண்மைகளை மறைத்தமை
4.6 (ஆ)
நிலத்தடி நீர் விடயம் தொடர்பில் எவ்வித அதிகாரமும் அற்ற நிலையில் நிலத்தடி நீரில் எண்ணெய் கசிவு தொடர்பில் விசாரணைக்காக நிபுணர் குழுவை நியமித்து மாகாண சபையின் நிதியை வீண் விரயம் செய்தமை.

• விசாணைக்குழு, தனது அறிக்கையில் மத்திய அரசின் நிர்வாகம் இங்கு தனது பொறுப்பை உணர்ந்து மிகச்சரியான முறையில் செயற்பட்டு வரும்நிலையில், அமைச்சர் தனக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் அதிகாரம் தரப்படாத சுற்றுச்சூழல் விடயத்தில் தலையிட்டு, தன்னிச்சையாக ஓர் நிபுணர் குழுவை உருவாக்கி,நொதேர்ண் பவர் நிறுவனத்துக்குச் சாதகமான ஒரு அறிக்கையைத் தயாரித்து, உண்மைகளை மூடி மறைக்க முயன்றதாகவும்,இந்த அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படாமை சந்தேகத்தை வலுப்படுத்துவதாகவும்,நிபுணர் குழவை நியமித்ததன் மூலம் மாகாணசபையின் நிதியை விரயம் செய்ததாகவும், மாகாணசபையின் அனுமதியுடன்தான் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் பதிவு செய்துள்ளது.

எமது பிரதேசத்தில் சுற்றுச்சூழலுடன் தொடர்புபட்ட விடயமொன்று பெரும் பிரச்சினையாக விசுவரூபம் பெற்றுவந்த நிலையில், மத்திய அரசால் அதிகாரம் அளிக்கப்படாத விடயம் என்பதைக் காரணம் காட்டி நாம் வாழாதிருக்கமுடியாது. அந்தவகையில், எமது நீர்வளத்தை மாசுறுத்தும் எண்ணெய் தொடர்பான உண்மை நிலையைக் கண்டறிந்து அதன் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொருட்டு மத்திய அரசின் நிர்வாகத்துக்கு உட்பட்ட விடயமொன்றில் மாகாண அமைச்சராகத் தலையிட்டமை சட்டரீதியாகப்பிழையானதாக இருப்பினும் அரசியல் ரீதியாகச் சரியானதும் தேவையானதும் என்பதே எனது கருத்தாகும்.

சுன்னாகம் பிரதேசத்தில் கிணறுகளில் கழிவு எண்ணெய் பரவிய விவகாரம் ஒரு எரியும் பிரச்சினையாக உருவெடுத்தபோது மாகாணசபை நிர்வாகம் அதனைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாகக் குற்றச்சாட்டுகள் பலமாக எழுந்தன.மாகாணசபையினுள்ளேயும் பலத்தவாதப் பிரதிவாதங்கள் நிகழ்ந்தன. இதையடுத்து சுன்னாகம் பிரதேச குடிநீரில் கழிவு எண்ணைய் கலந்துள்ளமை தொடர்பான களநிலவரங்களை அறிவதற்கான குழு ஒன்று அமைக்கப்பட்டதோடு (இணைப்பு இல-7) கௌரவ முதலமைச்சர் அவர்களின் பணிப்பின்பேரில், அவரது பங்கேற்புடன், விவசாய அமைச்சரையும் சுகாதார அமைச்சரையும் இணைத்தலைவர்களாகவும்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபரைத் துணைத்தலைவராகவும் கொண்டு தூய குடிநீருக்கான விசேட செயலணியொன்றும்(இணைப்பு இல-8) உருவாக்கப்பட்டது.

இந்நடவடிக்கைகளின் ஒரு நகர்வாகவே நிபுணர் குழு உருவாக்கப்பட்டது.நிபுணர் குழுவொன்றின் அவசரமும் அவசியமும் உணரப்பட்ட நிலையில் கள நிலவரங்களை அறிவதற்கான குழுவில் இடம்பெற்றிருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்த பெயர்களையும் உள்வாங்கி நிபுணர் குழு அமைக்கப்பட்டதோடு, வடக்கு மாகாணசபையின் அமைச்சர் வாரியத்துக்கு குழுவின் விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு, நிதி விடயங்களுக்கு கௌரவ ஆளுநர் அவர்களின் ஒப்புதலும் பெறப்பட்டு, மாகாண சபையிலும் சமர்ப்பிக்கப்பட்டது.(இணைப்பு இல-9)இந் நிலையில் அமைச்சர் தன்னிச்சையாக செயற்பட்டார் என்றும், மாகாணசபையின் அனுமதியுடன்தான் இந் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் உள்நோக்கத்தோடு சில அரசியல் வாதிகள் கூறிவருவதைபோன்றே விசாரணைக்குழுவும் பதிவு செய்திருப்பது அவர்களும் ஏதோ ஒரு அரசியல் உள்நோக்குடனேயே விசாரணையை நடாத்தி முடித்திருக்கிறார்கள் என்றே எனக்கு எண்ணத்தோன்றுகிறது.

விஞ்ஞானம் என்பது ஆய்வுகள் ரீதியாகப் பலமுறை நிரூபிக்கப்பட்ட உண்மைகளின் தொகுப்பு.முறையான விஞ்ஞான ஆய்வுகள் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்துவிட்டுச் செய்யப்படுவன அல்ல, நாம் நியமித்த நிபுணர் குழுவும் சுயாதீனமாக,எந்தவிதமான தலையீடுகளும் இன்றியே ஆய்வுகளைச் செய்தது. எவரையும் காப்பாற்ற வேண்டும் அல்லது எவரையும் தண்டிக்கவேண்டும் என்ற நோக்கங்கள். எதுவும் ஆய்வுக் குழுவுக்கு இருக்கவில்லை. தண்ணீரில் எண்ணெய் கலப்புப் பற்றி ஆராய்ந்து முடிவுகளை வெளியிடுவது மட்டுமே அதன் நோக்காக இருந்தது . எதன் பொருட்டும் எவர் பொருட்டும் ஆய்வின் முடிவுகளை மாற்றி எழுத இவர்கள் அறநெறிபிழைத்தவர்களுமல்ல.

இவர்களது ஆய்வு முறைமையும் நீர் வழங்கல் வடிகால் சபையின் ஆய்வு முறைமையும் வௌ;வெறாக இருந்தன.இவற்றைப் புரிந்து கொள்ளாமல், நிபுணர்குழு உண்மைகளை மூடி மறைத்தது என்று விசாரணைக்குழு தெரிவித்திருப்பது அபாண்டமானது. நிபுணர்குழுவின் அறிக்கையையும் நீர்வழங்கல் வடிகால் சபை சுன்னாகம் நீர் மாசு தொடர்பாக மார்ச் 2017இல் வெளியிடப்பட்டுள்ள அதன் ஆகப்பிந்திய அறிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டுக்கும்; இடையில் குறிப்பிடதக்க அளவு வித்தியாசங்கள் இல்லை என்பது தெரியும்.

நிபுணர்குழுவின் அறிக்கை அக்குழுவினால் கௌரவ முதலமைச்சர் அவர்களிடமும் என்னிடமும் நேரடியாகத் தரப்பட்டது. யாழ் பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்ற அறிக்கை கையளிக்கும் நிகழ்சியில் ஆய்வுகள் தொடர்பாக நிபுணர்குழுவால் விளக்கமும் அளிக்கப்பட்டது. இதில் கௌரவ மாகாணசபை உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள், ஊடாகவியலாளர்கள் எனப்பலர் கலந்துகொண்டிருந்தார்கள். அறிக்கையின் பிரதி வடக்கு மாகாணசபையின் பேரவைச் செயலகத்திலும் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அறிக்கை பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை என்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

இவற்றின் பின்னணியில் எமது மக்களின் வாழ்வாதாரமான நீர் தொடர்பான ஆய்வுகளுக்கு மாகாணசபை நிதியை பயன்படுத்தித்தியதை வீண்விரயம் என்று சொல்வதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.

குற்றச்சாட்டு இல 4.7
2015 நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட 5இலட்சம் மரநடுகைத் திட்டம் தொடர்பில் பண மோசடி செய்தமை.
• 2015 நவம்பர் மாதம் முன்னெடுக்கப்பட்ட 5 இலட்சம் மரநடுகைத் திட்டம் தொடர்பில் மோசடி இடம்பெற்றுள்ளது என்பதை எண்பிப்பதற்கு பூரணமான ஆதாரங்கள் விசாரணையின்போது வெளிக்கொண்டு வரப்படவில்லையாயினும், வழங்கப்பட்ட மரக்கன்றுகளை பராமரித்துப் பாதுகாப்பதற்கான பொறிமுறை இல்லாத இத்திட்டம் வெற்றியளிக்காத திட்டம் என்பதுடன் நிதி வீண்விரயத்துக்கு கொண்டு செல்வதற்கான காரணமாக அமைந்துள்ளது எனவும் விசாரணைக்குழு அபிப்பிராயப்படுகிறது.
கார்த்திகை மாதத்தை மரநடுகை மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளதன் பின்னணியில் இருக்கக்கூடிய தமிழ்மக்களின் சமூக, அரசியல், சூழலியல் காரணிகளைப் புரிந்து கொள்ளாமல் விசாரணைக்குழு,சில இடங்களில் பட்டமரங்களைப் பார்த்துவிட்டுத் திட்டத்தையே தோல்வியடைந்த திட்டம் என்று தமது அபிப்பிராயத்தை வெளியிடுவது ஏற்றுக்கொள்ள முடியாது.
மரநடுகை மாதம் பிரகடனம் செய்யப்பட்ட பின்னர் வடக்கின் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள பெரும்பாலான தாவர உற்பத்தியாளர்கள் இணைந்து வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம் ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். கார்த்திகை மாதத்தில் இவர்களிடம் இருந்து பொதுமக்களும் நிறுவனங்களும் வாங்கிச் செல்லும் மரக்கன்றுகளின் எண்ணிகை மிக அதிகமாக இருப்பதாக இவர்கள் பல தடவைகள் தெரிவித்துள்ளார்கள். மேலும், வீதியோரங்களில் பாதுகாப்புக்கூடுகளில் மரங்களை நட்டும் பராமரிக்கும் போக்கும் அதிகரித்துள்ளது. இது மரநடுகை மாதத்தின் வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.
2015ஆம் ஆண்டு ‘ஐந்து மாவட்டங்கள் – ஐந்து இலட்சம் மரக்கன்றுகள்’ என்பதைத் தொனிப்பொருளாகக் கொண்டு மரநடுகை மாதம் கொண்டாடப்பட்டது. இதன்போது 1 இலட்சம் எண்ணிக்கையான நிழல் தருமரங்கள், வெட்டு மரங்கள், பழமரங்களை நாட்டுவதெனவும் 4 இலட்சம் பனை விதைகளை நடுகை செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன் பொருள் வடக்கு மாகாணசபையே இவ்வளவையும் நாட்டிப் பராமரிக்கும் என்பதல்ல. இந்த இலக்கைப் பொதுமக்களின் பங்கேற்புடன் எட்டுவது என்பதே ஆகும்.

இம்மாதத்தில் ஒன்றரை இலட்சம் வரையான மரக்கன்றுகள்; நடுகை செய்யப்பட்டன. வடமாகாண தாவர உற்பத்தியாளர்கள் சங்கம்பொதுமக்களுக்கும் பொதுஅமைப்புகளுக்கும் விற்பனை செய்த மரக்கன்றுகள், தென்னை அபிவிருத்திச் சபை எமக்கூடாக வழங்கிய தென்னை மரங்கள், அன்பே சிவம் என்ற அமைப்பு வழங்கிய மரக்கன்றுகள், விவசாய அமைச்சின் ஊடாக இலவசமாக வழங்கப்பட்ட 14,193 மரக்கன்றுகள் ஆகியனவற்றின் மொத்தத் தொகையே ஒன்றரை இலட்சம் ஆகும். அத்தோடு,பனை தென்னைவளக் கூட்டுறவுச் சங்கங்கள் 4,81,857 பனை விதைகளை நடுகை செய்துள்ளன.

• அறிக்கையில், வவுனியா சேமமடு வீதியில் இளமருதங்குளத்தில் பனை அபிவிருத்தி சங்கத்துக்கு உரித்தான காணியில் பெரும் விழாவாக நடப்பட்ட மரங்களுக்கு யார் உரிமையாளர்கள் என்பதை அமைச்சர் விசாரணைக்குழுவிக்கு விளக்கம் அழிக்க தவறிவிட்டார் எனவும், கௌரவ முதலமைச்சர் அவர்களும் இந்நிகழ்சிக்கு சமூகளித்திருந்ததாக பொதுமக்கள் தங்களிடம் தெரிவித்துள்ளதாகவும் விசாரனைக் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இம் மரநடுகையை மேற்கொண்டது, விவசாய அமைச்சோ, அல்லது திணைக்களமோ அல்ல எனவும் இது வவுனியா மாவட்ட பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாடே என சாட்சியத்தின்போது தெரிவித்திருந்தும், விசாரணைக்குழுவுக்கு விளக்கம் அளிக்கத் தவறிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, கௌரவ முதலமைச்சர் அவர்கள் இவ் விழாவில் கலந்து கொள்ளாத நிலையில்,அவர் கலந்துகொண்டிருந்ததாகவும் பொதுமக்கள் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதைபோன்று இங்கு பெரும் விழாவாக அல்லாமல் மரநடுகை ஒரு நிகழ்ச்சியாகவே கூட்டுறவுச் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்பதைப் பதிவு செய்ய விரும்புகிறேன்.

நாட்டப்படும் மரங்கள் பாதுகாத்துப் பராமரிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அமைச்சு மற்றும் திணைக்களம் சார்பில் நடப்படும் மரங்களைத் திணைக்களங்கள் கண்ணுங்கருத்துமாகவே பராமரித்துவருகின்றன. எனினும் பொதுமக்களும் பொது அமைப்புகளும் தாங்கள் நாட்டும் மரங்களுக்கான பராமரிப்பை அவர்களே உறுதி செய்ய வேண்டும். விழிப்புணர்வின் ஊடாக இது சாத்தியமாகி வருகிறது.

குற்றச்சாட்டு இல 4.8

ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் இதுவரையில் நன்கு வெற்றியளிக்கவில்லை எனத் தெரிந்திருந்தும்இ தவறான செல்வாக்கைச் செலுத்தி சாத்தியக்கூற்று அறிக்கையைப் பெற்று புழுதியாறு ஏற்று நீர்ப்பாசனத் திட்டத்தை முன்னெடுத்து 32 ஆடைடழைn ரூபாவை வீண்விரயம் செய்தமை.

• முத்தையன்கட்டு திட்டத்தில் மீள ஆரம்பிக்கப்பட்ட ஏற்று நீர்ப்பாசனத் திட்டம் éரண வெற்றியளிக்கவில்லை எனவும் நீர் இறைப்பு இயந்திரங்களை இயக்குவதற்கு கூடிய செலவுகள் ஏற்பட்டதன் காரணமாகவே உச்ச பயன்பாட்டினைப் பெற முடியவில்லை எனவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முத்தையன்கட்டு திட்டமானது 1990ஆம் ஆண்டு யுத்தச் சூழ்நிலை காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு நிலவியதால் கைவிடப்பட்டு மீள்குடியேற்றத்தின் பின்னர் 2011ஆம் ஆண்டு 17இறைக்கும் பம்பிகள் பொருத்தப்பட்டு 944 ஏக்கர் விவசாய நடவடிக்கைகள் மீள ஆரம்பிக்கப்பட்டது. இதன்பிரகாரம் 2013ஆம் ஆண்டுவரை முழுமையாக மேட்டுநிலப் பயிர்ச்செய்கை செய்யப்பட்டு 487 பயனாளிகள் உரிய விளைச்சலைப் பெற்று மிகவும் பயனடைந்தார்கள். 2014ஆம் ஆண்டு கடும் வரட்சி காரணமாக 200 ஏக்கர் அளவிலேயே பயிர் செய்யப்பட்டது. எனினும் 2015ஆம் ஆண்டு 900 ஏக்கர் அளவில் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட்டது. குளப்புனரமைப்பின் காரணமாக சென்ற ஆண்டு எவ்வித பயிர்ச்செய்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

ஆகவே ஏற்று நீர்ப்பாசனத்; திட்டங்களை வெற்றியளிக்காத திட்டமாக காட்ட முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
• விவசாயத் திட்டம் ஒன்றை செயற்படுத்த திட்டமிடும்போது நீர்ப்பாசனத்தை மட்டும் நம்பியிருக்காது விவசாய பொருளாதார சாத்தியக்கூற்று அறிக்கையை பெற்று முதலீடு செய்ய வேண்டும் என விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புழுதியாறு ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தினை ஆரம்பிக்கும்போது விவசாய, நீர்ப்பாசன, சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் நீடித்து நிலைத்திருக்கத்தக்க அபிவிருத்திக்கான சாத்திய ஆய்வுகள் நீர்ப்பாசனத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்பட்டு அவ்;வறிக்கை நியமங்களின் பிரகாரம் நிதி ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்பட்டே திட்டத்துக்கான முதலீடு செய்யப்பட்டுள்ளது. எனவே விசாரணைக்குழுவின் சபையின் பரிந்துரையைவிட மேலதிக ஆய்வுகளை நிறைவேற்றியிருக்கின்றோம் என்பதனை தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

• விவசாயத் திணைக்களம் முறையாக இச் செயற்றிட்டத்தில் இணைக்கப்படவில்லை எனவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் மற்றும் அப்பகுதிக்கான விவசாய விரிவாக்கல் உத்தியோகத்தர்கள் திட்டம் ஆரம்பிக்கப்பட முன்னரே பல கள விஜயங்களை மேற்கொண்டு மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் அனுபவத்தைப் பெற்றும் மண்வளத்தை ஆராய்ந்தும் எவ்வாறான பயிர்களை நாட்ட முடியுமென தீர்மானித்ததுடன் இத்திட்டத் தொடக்க விழாவின்போது 100 பயனாளிகளுக்கும் ஓர் பொதி வழங்கி இத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தனர். அப்பொதியில்; அக்காலபோகத்திற்கான விதைகள் மற்றும் உபகரணங்கள் அடங்கியிருந்தன. அவர்கள் கண்காணிப்பையும் ஆலோசனையும் தற்போதுவரை வழங்கி வருகின்றனர்.

• திட்டம் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் நீர் இறைக்கும் இயந்திரம் இயக்கப்படவில்லை எனவும், தங்களுடன் கலந்துரையாடப்படாமல் செயல்படுத்தப்பட்ட திட்டமெனவும், இத்திட்டத்துக்குப் பதிலாக ஒவ்வொரு காணிக்கும் ஒவ்வொரு கிணற்றினை அமைத்துத் தந்திருக்கலாம் எனவும் பயனாளிகள் குறிப்பிட்டதாகவும் விசாரணை அறிக்கை தெரிவிக்கின்றது

2015 ஆம் ஆண்டு விவசாய நடவடிக்கை குறித்த பகுதியில் இடம்பெற்றிருக்கின்றது என்பது சகலரும் அறிந்த விடயம், நீர் இறைக்கப்படவில்லையெனில் எவ்வாறு பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்க முடியும்; அவ்வாறு இயக்கப்படவில்லையெனில் தற்போது எவ்வாறு இயந்திரங்களை இயக்கி விவசாய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது? எனவே இது ஊகத்தின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்ட கருத்தாகும்.

வடமாகாண சபையால் இத்திட்டம் அங்கீகரிக்கப்பட்ட பின்னர் பல கலந்துரையாடல்கள் இப்பகுதி விவசாயிகளுடனும் ஏனைய பங்குதாரர்களுடனும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக நிதி ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்க வேண்டிய சாத்திய அறிக்கை தயாரித்தலின்போது பல தடவைகள் எமது நீர்ப்பாசனத் திணைக்கள அதிகாரிகளும் விவசாயத் திணைக்கள அதிகாரிகளும்இப்பகுதி மக்களுடன் கலந்துரையாடல்களை நிகழ்த்தியுள்ளனர். எனவே பயனாளிகளுடன் கலந்துரையடப்படவில்லை எனக் கூறப்படுவது உண்மைக்குப் புறம்பானதாகும்.

ஒவ்வொரு காணிக்கும் ஒவ்வொரு கிணற்றினைத் தந்திருக்கலாம் என அபிப்பிராயம் தெரிவித்திருப்பது அறியாமையினால் ஆகும். இப்பகுதியில் காணப்படுகின்ற ஒருசில கிணறுகளில்கூட ஆனி, ஆடி மாதத்தின் பின்னர் நீரினைக் காண்பது மிகவும் அரிதாகும். இவ்வாறான நிலையில் கிணற்றினை அமைத்துக் கொடுத்திருந்தால் நீரற்ற குழிகளை வெட்டிக் கொடுத்ததாக இன்று விசாரணைக்குழு குற்றம் சுமத்தியிருக்கும். உண்மையில் இவ் ஏற்றுநீர்ப்பாசனத் திட்டத்தினை முழுமையாக பயன்படுத்துவார்களேயானால் நிச்சயமாக நிலத்தடி நீர் மேம்படுவதனூடாக கிணறுகளிலும் பெறக்கூடிய வாய்ப்பு ஏற்படும் இத்திட்டம் நடைமுறையில் இல்லையாயின் தனித்தனிக் காணிகளுக்கு கிணறு வெட்டுவதிலும் எந்தப் பயனும் இருக்கப் போவதில்லை.

• விசாரணைக்குழு முன் சாட்சியமளித்த பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் விவசாய அமைச்சரின் கோரிக்கையின் பிரகாரமே இத்திட்டத்தினை செயற்படுத்தியதாகவும், அமைச்சரின் நெருக்குதல் காரணமாக நிர்மாணிக்கப்பட்ட இத்திட்டம் எதிர்பார்த்த இலக்கை அடையாத காரணத்தால் இதற்கு விவசாய நீர்ப்பாசன அமைச்சரே பொறுப்புக்கூற வேண்டும் எனத் தாங்கள் அபிப்பிராயப்படுவதாக விசாரணைக்குழுவினர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

இவ்வறிக்கை ஊடகங்களில் வெளியானதன் பின்னர் என்னைச் சந்தித்த பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்,அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதைப்போன்று எனது கோரிக்கையின் அடிப்படையிலேயே இத்திட்டம் செயற்படுத்தப்பட்டதாகத்தான் எதனையும் விசாரணைக்குழுவுக்கு தெரிவிக்கவில்லையெனவும்,தன்னால் சமர்ப்பிக்கப்பட்ட எழுத்து மூலமான அறிக்கையில் உள்ள தகவல்களையே தனது வாக்குமூலத்திலும் தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். சாத்தியம் இல்லாத திட்டங்களை அதிகாரிகளை நிர்ப்பந்தித்து செய்வதற்கு நான் ஒன்றும் சித்தசுவாதீனம் அற்றவன் அல்ல. உண்மையில் இத்திட்டம் நீண்ட காலமாக இப்பிரதேச மக்களால் விடப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் மாவட்ட மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு திட்டமாகும். எனினும் வடமாகாண சபை தோற்றம் பெற்ற பின்னர் மாகாண சபையின் அமர்விலே கிளிநொச்சி மாவட்டத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் கௌரவ சு.பசுபதிப்பிள்ளை அவர்களின் முன்மொழிவைத் தொடர்ந்தே விவசாய அமைச்சினுள் இது உள்வாங்கப்பட்டு திணைக்களத்தினூடாக, இத்திட்டத்தினை செயற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சின் செயலாளரால் பணிக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான டீசல், நீர் இறைக்கும் இயந்திரத்தின் இயக்கச் செலவு அதிகமாக இருக்கும் என்பது வெளிப்படை. ஆனால் மலையகத்தில் இருந்து இடம்பெயர்ந்து வந்து இப்பகுதியில் ஏழ்மையில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு இந்தத் திட்டத்தை எந்த விலை கொடுத்தேனும் செயற்படுத்த வேண்டிய தார்மீகப் பொறுப்பு எங்களுக்கு உண்டு. விவசாயம் அங்கு கைவிடப்படவில்லை.

நடைபெற்று வருகிறது. (இணைப்பு இல-10) காலதாமதம் ஆனாலும் இத்திட்டம் அதன் எதிர்பார்த்த இலக்கை அடையும்.இத்திட்டத்தினால் ஏற்படும் நேரடியானதும், மறைமுகமானதுமான விளைவுகள் பொது நிதியில் இருந்து செலவிடப்பட்ட 32 மில்லியனுக்கு உரிய மீள்பெறுகையை அனுமானித்தே இத்திட்டம் நிதி ஆணைக்குழுவினால் அனுமதிக்கப்பட்டது என்பதை இங்கு தெரியப்படுத்த விரும்புகின்றேன்.

குற்றச்சாட்டு இலக்கம் 4.9 (அ)

யாழ்கோ பாற்பண்ணை கூட்டுறவுச்சங்கத்துக்கு 2014 ஆம் ஆண்டு மே மாதம் வரை தலைவராக இருந்த திரு. பெரியதம்பி இராசநாயகம் இரஞ்சன் என்பவரை நியாயமான காரணங்களின்றிக் கூட்டுறவு ஆணையாளர்ருக்கு ஊடாக அதிகார துஸ்பிரயோகம் மூலம் பதவி நீக்கம் செய்தமை

• அரசாங்க அதிபரின் சிபார்சின்படி பொதுச்சபைக்கு நியமிக்கப்பட்டு,பொதுச்சபையால் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டு 30.04.2014 வரை தலைவராகக் கடமையாற்றிய திரு இ.ரஞ்சனது பதவி பறிக்கப்பட்டு, அப்பதவிக்கு அரசாங்க அதிபரின் சிபார்சினால் நியமிக்கப்படாத திரு இ.சர்வேஸ்வரா நியமிக்கப்பட்டுள்ளார் என விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரு இராநாயகம் ரஞ்சன் அவர்கள் அரசாங்க அதிபரின் சிபார்சுப்படி பொதுச்சபைக்கு நியமிக்கப்பட்டு, பொதுச்சபையால் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டவர் என்பது தவறான கருத்தாகும். இவர் ஒரு நியமனத் தலைவர் ஆவார், இவர் சங்கத்தின் துணைவிதி பிரிவு 35.1இன் கீழ் அரசாங்க அதிபரினால் பெயர் குறித்து விதப்புரை செய்யப்பட்டு கூட்டுறவு உதவி ஆணையாளரால் நியமிக்கப்பட்டவர். எனினும் இவர் மீது சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ள கால்நடை வளர்ப்பாளர்கள் தொடர்ச்சியாக முறைப்பாடுகளைத் தெரிவித்துவந்ததன் அடிப்படையிலும், யாழ்கோவின் செயற்பாடுகள் குறித்து மாகாண கால்நடை அபிவிருத்தித் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையிலும்(இணைப்பு இல- 11)இவர்மீது விசாரணைகளை மேற்கொள்வதற்கு வசதியாகத் தலைவராக திரு இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா 01.05.2014இல் கூட்டுறவு உதவி ஆணையாளரால் நியமிக்கப்பட்டார். இந் நியமனத்தின் மூலம் திரு பெரியதம்பி இராசநாயகம் இரஞ்சன் தலைவர் பதவியில் இருந்து நீங்கி, இயக்குநர் சபையின் ஒரு உறுப்பினராகப் பதவி நீடித்தார்.

• திரு இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா அரசாங்க அதிபரின் சிபார்சு இன்றி நியமிக்கப்பட்டது தவறு என்று விசாரணைக்குழு தெரிவித்துள்ளது.

கூட்டுறவு உதவி ஆணையாளருக்கென 1972ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க கூட்டுறவுச் சங்கங்களின் சட்டத்தின் கீழ் வெளிநாட்டு உள்நாட்டு வியாபார அமைச்சரால் ஆக்கப்பட்டதும் 1973 நொவம்பர் 20ஆம் திகதிய தேசிய அரசப் பேரவையினால் அங்கீகரிக்கப்பட்டதுமான விதி 20க்கு அமைவாக ஒரு தலைவரைஅல்லது உபதலைவரை அல்லது இருவரையும் நியமிப்பதற்கு அதிகாரம் உண்டு.(இணைப்பு இல- 12) இந்தத் தத்துவத்தின் அடிப்படையிலேயே அரசாங்க அதிபரின் பரிந்துரை இல்லாமல் உதவி ஆணையாளர் திரு. இரத்தினசிங்கம் சர்வேஸ்வராவை சங்கத் தலைவராக நியமனம் செய்துள்ளார் இது முறைகேடானது அல்ல் சட்ட பூர்வமானது.

• விசாரணை அறிக்கையில் தம்மால் முறைகேடாக நியமிக்கப்பட்ட திரு. இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா மற்றும் திரு கந்தையா மகாதேவன் ஆகியோர்களது பெயர்களை தனது கடிதத்தில் உள்ளடக்கி அதுவும் நியமனம் வழங்கப்பட்டபின் ஏறக்குறைய ஒருவருடத்தின் பின்னரே கூட்டுறவு உதவி ஆணையாளரால் அரசாங்க அதிபருக்கு விண்ணப்பம் செய்யப்பட்டு அனுமதி பெறப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக நான் விசாரித்து அறிந்தவரையில் இத்தகவல் உண்மையேயாகும்.எனினும், அரசாங்க அதிபரிடம் இந்நியமனத்துக்கு விண்ணப்பித்து அனுமதி பெறப்பட்டது அவசியம் அற்ற ஒன்றாகும்.ஏனெனில், தொடர்ந்தும் இவர்களது நியமனம் கூட்டுறவு உதவி ஆணையாளரால் அவருக்கு உரித்தான தத்துவத்தின் கீழ் விதிப்பிரிவு 20இன் கீழேயே இடம்பெற்று வந்துள்ளது. எனவே இதனை முறைகேட்டை மறைப்பதற்கான ஒரு நடவடிக்கையாகக் கொள்ள இயலாது.

• இந் நியமனக்காலத்தில்கூட்டுறவுத் திணைக்களம் எனது அமைச்சிடம் இணைக்கப்பட்டு இருக்கவில்லை, கௌரவ முதலமைச்சர் அவர்களது அமைச்சுடனேயே இணைக்கப்பட்டு இருந்துள்ளது. என்பதைக் கவனத்தில் கொள்வதாக விசாணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கௌரவ முதலமைச்சர் அவர்கள் தனது வேலைப்பளு காரணமாக, கால்நடைத் திணைக்களம் எனது அமைச்சுக்கு உட்பட்டது என்ற வகையால் யாழ்கோ விடயங்கள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு என்னைக்கேட்டிருந்தார். அதன் அடிப்படையில் கூட்டுறவு ஆணையாளர் கடிதம் மூலம் என்னிடம் கேட்டுக் கொண்டதற்கு அமைவாக, யாழ்கோவின் இயக்குநர் சபைக்கு நியமனம் செய்வதற்குரிய நால்வரின் பெயர்களை எனது செயலாளரின் ஊடாகப் பரிந்துரை செய்திருந்தேன் கூட்டுறவு ஆணையாளர், கௌரவ முதலமைச்சர் அவர்களின் ஒப்புதல் பெற்றே இந் நியமனங்களை மேற்கொண்டுள்ளார்(இணைப்பு இல-13) அந்த வகையில் இங்கு முறைகேடுகள் இடம்பெற்றிருப்பதாக நான் கருதவில்லை.

• திரு. இராசநாயகம் இரஞ்சன் அவர்கள் பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும் இரண்டு வருட காலத்தின் பின்னர் 2016ஆம் ஆண்டிலேயே அவருக்கு எதிரான குற்றச்சாட்டுப் பத்திரம் வழங்கப்பட்டதை அதிகார துஸ்பிரயோகத்தை மூடிமறைப்பதற்காக செய்யப்பட்ட செயலாக விசாணைக்குழு கருதியுள்ளது.

இவர்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பில் கூட்டுறவுச் சட்டத்தின் 46-1 பிரிவுக்கு அமைய முறைப்படி விசாரணைகள் இடம் பெற்றுள்ளன.பொதுவாகவே 46-1 விசாரணை நீண்டகாலம் எடுக்கும் ஒரு விசாரணை முறைமையாகும்.இவர்மீது அதிக எண்ணிக்கையிலான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால் விசாரணையை முடிவுறுத்தி குற்றச்சாட்டுப் பத்திரம் கையளிக்க இரண்டுவருடகாலம் நீடித்தது என்பதே கூட்டுறவு உதவி ஆணையாளர் தெரிவித்த கருத்தாகும்.

இவர் மீதான குற்றச்சாட்டுகள் பொதுச்சபையில் சமர்ப்பிக்கப்பட்டு பொதுச்சபையில் ஏகமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டதன் அடிப்படையில் 5வருட காலங்கள் முடியும் வரையில் இக் குறிப்பிட்ட சங்கத்தில் இயக்குநராகவோ ஊழியராகவோ இவர் பதவி வகிக்க முடியாது என இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறையின் அண்மைகால வரலாற்றில் 46-1 விசாரணையை பொதுச்சபை ஏற்றுக்கொண்டு குற்றம் சாட்டப்பட்டவரை பதவி விலக்கியது இதுவே முதல்முறையாகும். (இணைப்பு இல- 14)

குற்றச்சாட்டு இலக்கம் 4.9 (ஆ)

2015இல் யாழ்கோ பாற்பண்ணை கூட்டுறவுச்சங்கத்துக்கு தலைவராக முன் அனுபவம் இல்லாதவரும் அரச அதிபரால் முன்சிபார்சு செய்யப்படாதவருமான திரு. இரத்தினசிங்கம் சர்வேஸ்வரா என்பவரை குடும்ப நண்பர் என்ற அடிப்படையில் கூட்டுறவு ஆணையாளர் மூலம் தலைவராக நியமித்தமை தொடர்பில் அதிகார துஸ்பிரயோகம் செய்தமை
நான் திரு திரு. இரத்தினசிங்கம் சர்வேஸ்வராவை அவர் யாழ்கோவின் தலைவராக நியமிக்கப்பட்ட பின்னர்தான் தெரியும் என்று சாட்சியம் அளித்து திரு. இ.சர்வேஸ்வராவுக்கும்; எனக்கும் இடையிலான முன் உறவை மறைக்க முயற்சித்ததாகவும்,திரு. இ; சர்வேஸ்வரா ளுடுயுளுஉத்தியோகத்தர் என்று உண்மைக்குப்புறம்பாக நான் சாட்சியம் அளித்ததாகவும் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

திரு. இ.சர்வேஸ்வரா எனக்கு கற்பித்த ஆசிரியர் ஒருவரின் மகனின் மகளை மணம் முடித்தவர். இவர் யாழ்கோவில்நியமிக்கப்பட்டு,பொதுநிகழ்சிகளில் இவரை சந்திக்கத்தொடங்கும்வரை இவருடன் நான் நெருங்கிப் பழகியதில்லை.தெரியும் என்ற அளவுலேயே தொடர்பு இருந்தது. யாழ்பல்கலைகழகப் பேராசிரியர் ஒருவர் இவரைப் பரிந்துரை செய்ததன் அடிப்படையிலேயே நான் பரிந்துரை செய்தவர்களின் பெயர்பட்டியலில் இவரையும் ஒருவராகக் குறிப்பிட்டிருந்தேன்.
மாடு வளர்ப்பில் அனுபவம் உடையவர் என்ற தகுதி அடிப்படையில் அன்றி, யாழ்கோவை நிர்வகிப்பதற்கு ஒரு நிர்வாகி தேவை என்பதன் அடிப்படையிலேயே இவர் நியமனம் செய்யப்பட்டார். யாழ் பல்கலைகழகத்தின் மருத்துவ பீடத்தில் உதவிப் பதிவாளராக இருக்கும் இவர் பல்கலைகழக நிறைவேற்று உத்தியோகத்தர் ஆவார்.அத்தோடு, 2013ஆம் ஆண்டு இலங்கை நிர்வாகசேவைக்கு(ளுடுயுளு)நியமனம் செய்யப்பட்டவர்.(இணைப்பு இல- 15) எனினும்,அவர் தனிப்பட்ட சில காரணங்களுக்காக அப்பதவியைப் பொறுப்பேற்றிருக்கவில்லை நான் விசாரணைக்குழுவின் முன்னால் இத் தகவலைத் தெரிவித்தேனே தவிர அவர் ளுடுயுளுஅதிகாரி என நான் பொய் உரைக்கவில்லை.

குற்றச்சாட்டு இலக்கம் 4.10

மருதங்கேணி கடற்றொழில் சமாசத் தலைவரை நியாயமான காரணங்கள் இன்றிக் கூட்டுறவு ஆணையாளர் மூலம் 2015 மார்கழி மாதம் அளவில் பதவிநீக்கம் செய்தமை மூலம் அதிகார துஸ்பிரயோகம் செய்தமை
• கடல் நீரைக்குடிநீராக்கும் திட்டத்துக்கு எதிராகச் செயற்பட்டமை காரணமாக வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சங்கத் தலைவரை தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கூட்டுறவுத்துறை அமைச்சர் பதவி நீக்கம் செய்துள்ளார் என விசாரணைக்குழு தனது அறிக்கையில் பதிவு செய்துள்ளது.

கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்துடன் இவரது பதவி நீக்கத்தைத் தெரியப்படுத்துவது உண்மைக்குப் புறம்பானது ஆகும்.
சமாசத்தலைவர் சமாசத்தின் கடிதத்தலைப்பைப் பயன்படுத்தி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்றுக்கு அழைப்பு விடுத்த காரணத்துக்காகவே பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என விசாரணைக்குழு தனது அறிக்கையில் நிறுவமுற்படுகின்றது. இவரது பதவி நீக்கத்தை முற்றுமுழுதாககடிதத்தலைப்பு விடயத்துடன் தொடர்புபடுத்துவது தவறானது.
வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் கடல் நீரைக் குடிநீரக்கும் திட்டம் தொடர்பாக 12.09.2015 அன்று கூட்டம் ஒன்றை நடாத்தியுள்ளது. இக்கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்ட முறை தொடர்பாக அச்சங்கத்தின் பொதுமுகாமையாளர் முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றை எனக்கு அனுப்பிவைத்துள்ளார். இக் கடிதத்தின் பிரதியை உரிய நடவடிக்கைக்காக என்று குறிப்பிட்டு கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளரிடம் அனுப்பியிருந்தேன்.

இக்காலப்பகுதியில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர், சமாசத்தலைவர் தொடர்பாக வேறு முறைப்பாடுகளையும் செய்திருந்தார். சமாசத்தலைவர் தனது தலைவர் என்ற பதவியைப் பயன்படுத்தி, இயக்குநர் சபைக்குத் தெரியாமல் சுண்டிக்குளத்தில் இளைப்பாற்று மண்டபம் ஒன்றை அமைப்பதற்கான ஒப்பந்தம் ஒன்றை பிரதேச செயலகத்துடன் செய்திருந்தார். அத்தோடு, இளைப்பாற்று மண்டபத்திலும் பலகுறைபாடுகளைப் பிரதேச செயலாளர் சுட்டிக்காட்டி ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பிவைத்திருந்தார். இக் குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே சமாசத் தலைவர் மீது 46-1 விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்விசாரணையில் கடிதவிவகாரம் உள்ளடங்கப்படவில்லை. இவ் விசாரணைக்கு ஏதுவாகவே இயக்குநர் சபைக்கு மூவர் நியமனம் செய்யப்பட்டார்கள். இதில் தலைவராக வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் க.கனகேஸ்வரன் நியமிக்கப்பட்டதையடுத்து சமாத்தலைவர் தனது தலைவர் பதவியை இழக்கவேண்டி வந்தது. எனினும் அவர் இயக்குநர் சபை உறுப்பினராகவே தொடர்ந்து செய்யப்பட்டு வந்துள்ளார்.

விவசாய அமைச்சின் செயலாளர் பற்றிய விசாரணைக்குழுவின் பதிவு..

• அமைச்சர் தனது செயற்பாடுகளுக்குத் துணையாக இலங்கை நிர்வாக சேவையில் மற்றைய செயலாளர்களுடன் ஒப்பிடும்போது இளம் உத்தியோகத்தரை அமைச்சின் செயலாளராக நியமித்து அவரது துணையுடன் மற்றைய திணைக்களத் தலைவர்களைப் பயமுறுத்தி இச்செயற்பாடுகளை அரங்கேற்றியுள்ளார் என விசாரணைக்குழு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இக்கூற்று, அமைச்சராகிய என்னையும் செயலாளரையும் இழிவுபடுத்தும் நோக்கிலானது என்பதையும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும் அழுத்திப் பதிவு செய்ய விரும்புகின்றேன். விவசாய அமைச்சின் செயலாளராக இருந்த யு.எல்.எம்.ஹால்டீன் அவர்களின் மறைவுக்குப் பின்னர் அமைச்சின் செயலாளர் பதவி ஏறத்தாழ நான்கு மாத காலம் நிரந்தர செயலாளர் இன்றி வெற்றிடமாகவே இருந்தது. மேலும் உரிய பதவியணிகளுக்குரிய ஆளணியினர் இல்லாத சந்தர்ப்பத்தில் அதற்கு அடுத்த தர நிலையில் உள்ள ஆளணியினர் அப்பதவிக்கு நியமிக்கப்படுவது நிர்வாக நடைமுறைகளில் ஒரு சாதாரண விடயமாகும். வடக்கு மாகாணசபையின் நியமனங்கள் உட்பட அரச நிறுவனங்களின் பல நியமனங்கள் இதற்குச் சான்றாக உள்ளன. மேலும் அப்போதும் வடக்கு மாகாணசபையில் நிர்வாக சேவையின் விசேட தர பதவிகளில் தரம் 1 ஐ சேர்ந்த அலுவலர்களும் கடமையாற்றிக் கொண்டிருந்தார்கள். இதனடிப்படையிலேயே, அப்போதைய கௌரவ ஆளுநராக இருந்த எச்.எம்.ஜி.என்.பலிககார அவர்களினால் திரு.ம.பற்றிக் டிறஞ்சன் எனது அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டிருந்தார்.
ஏனைய செயலாளர்களுடன் ஒப்பிடும்போது அவர் நிர்வாக சேவையில் இளையவராக இருந்தபோதும், நிர்வாக ஒழுங்கு விதிகளுக்கு அமைவாகவும், சுற்றுநிருபங்களுக்கு அமைவாகவும் பணிகளை முன்னெடுத்துச் செல்வதில் வினைத்திறன் மிக்கவராக இருந்தார். நிர்வாக நடைமுறைகளில் கண்டிப்புடன் இருந்தார். அமைச்சராகிய நான் தெரியாமலேனும் நிர்வாக விடயங்களில் தவறிழைத்துவிடக்கூடாது என்பதில் விழிப்பாக இருந்தார். இத்தகைய இயல்பு கொண்ட ஒருவரை, அவரது எதிர்கால வளர்ச்சியைப் பாதிக்கும் வகையில் அமைச்சருக்காக அதிகாரிகளை மிரட்டி முறைகேடுகளுக்குத் துணை போனார் என்று குறிப்பிட்டிருப்பதை விசாரணையாளர்களின் உள்நோக்கத்துடன்கூடிய பதிவாகவே நான் கருதுகின்றேன்.

விசாரணைக்குழுவின் நம்பகமற்ற தன்மையும் பக்கச்சார்பும்..

அறிக்கையைக் கண்ணுறும்போது விசாரணைக்குழுவின் நம்பகத் தன்மையிலும் நடுநிலைமைத் தன்மையிலும் எனக்குப் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளது. விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருந்தவர்களின் ஒழுக்கவியல் சார்ந்தும், அரசியற் பின்புலம் சார்ந்தும் என்னால் கருத்துகளை முன்வைக்கமுடியுமெனினும், அவைபற்றி இங்கு குறிப்பிடுவது தேவையற்றதும் அநாகரிகமானதும் ஆகும். எனினும், நிர்வாக நடைமுறைகள் சார்ந்த விடயங்கள் குறித்து எனது பதிவு இங்கு அவசியமாகின்றது.

விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருந்த முன்னாள் நீதிபதிகளில் ஒருவரான திரு.என்.பரமராஜா அவர்கள் வடமராட்சி கிழக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத் தலைவர் திரு.பிரேமதாஸ் கூட்டுறவுத் திணைக்களத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக திரு.பிரேமதாஸ் சார்பாக நீதிமன்றத்தில் வழக்காடி வருகின்றார். அதேசமயம், அதே பிணக்கு முன்வைக்கப்பட்டுள்ள விசாரணைக்குழுவில் விசாரிக்கும் நீதவானாகவும் இடம்பெற்றிருக்கிறார். இது முரண்நகையல்லவா? இவர் எவ்வாறு பக்கச் சார்பற்ற ஒரு தீர்ப்பை வழங்குவார் என எதிர்பார்க்க முடியும்.

உதாரணமாக, நான் விசாரணைக்குழுவின் முன்னால் தோன்றி எனது தரப்பு நியாயங்களைத் தெரிவித்தபோது, பதவி நீக்கப்பட்ட சமாசத் தலைவர் திரு.பிரேமதாஸ் அச்சந்தர்ப்பத்தில் தோன்றி விளக்கம் அளித்ததாக அறிக்கையில் (பக்கம் 50) குறிப்பிடப்பட்டுள்ளது. இது முற்றிலும் தவறான ஒரு தகவல். அவர் என் முன்னால் தோன்றியிருக்கவில்லை.

24.02.2017 அன்று விசாரணைக்குழுவுக்கு முன்னால் நான் தோன்றியபோது, எனக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த சாட்சியமளிக்கவுள்ள சாட்சிகளின் பட்டியலில் இடம்பெற்றிராத, கௌரவ வடமாகாணசபை உறுப்பினர் சி.தவராசா அவர்களும் அங்கு சாட்சியாக சமுகமளித்திருந்தார். இது தொடர்பாக,விசாரணைக்குழுவுக்கு நான் தெரிவித்திருந்தபோது குழுவின் தலைவர் அவ்வாறு அவர்; பங்கேற்க முடியாது எனத் தெரிவித்தார். எனினும், திரு.எஸ்.பரமராஜா அவர்கள் தன்னிடம் அனுமதி பெற்றுவிட்டே கௌரவ சி.தவராசா அவர்கள் கௌரவ ஜி.ரி.லிங்கநாதன் அவர்களுடன் சேர்ந்து சமுகமளித்திருக்கிறார் என்று குறிப்பிடார்.

கௌரவ சி.தவராசா அவர்களின் பங்கேற்பை நான் நிராகரிக்கவில்லை. எனினும், இவர் சமுகமளிப்பார் என்பது எனக்கு அனுப்பப்பட்ட அழைப்புக் கடிதத்தின் சாட்சிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தால் இவரின் தர்க்கரீதியான வாதங்களுக்கு அறிவியல் ரீதியான வாதங்களை முன்வைக்கவல்ல நீரியல் நிபுணர் ஒருவரை நானும் அழைத்துச் சென்றிருக்க முடியும். எனவே, இந்த நடவடிக்கையை நான் பக்கச்சார்பானதொன்றாகவே கருதுகின்றேன்.

விசாரணைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் இன்னுமொரு உறுப்பினரான திரு.செ.பத்மநாதன் அவர்கள் விவசாய அமைச்சின் செயலாளராகப் பதவி வகித்தவர். பின்னர், செயலாளர் பதவிக்கு திரு.யு.எல்.எம்.ஹால்டீன் நியமிக்கப்பட்டபோது, செயலாளர் பதவியில் இருந்து கீழிறங்கி அமைச்சின் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகப் பணியாற்றியவர். அமைச்சின் செயலாளராகவும் உதவித் திட்டமிடல் பணிப்பாளராகவும் பணியாற்றிய ஒருவர், அதே அமைச்சு சார்ந்த விடயங்களில் விசாரணைகளில் பங்கேற்பது இயற்கை நீதிக்கும் நிர்வாக நடைமுறைகளுக்கும் முரணானதாகும்.

நீதியான தீர்ப்பின் அவசியம்
என்மீது சுமத்தப்பட்ட இலஞ்சம், நிதிமோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என விசாரணைக்குழுவினர் தமது அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எனினும், தங்களது விதப்புரையில் சந்தேகத்துக்கு அப்பாற்பட்ட விதத்தில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டு என்னை அமைச்சுப் பொறுப்புகளில் இருந்து நீக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்னர். எவ்வித ஆதாரங்களும் இல்லாது நீதிக்குப்புறம்பாக இவர்கள் வழங்கிய பரிந்துரை ஊடகங்களில் பெருத்தூதப்பட்டு எனது கௌரவத்துக்குப் பாரிய சரிவை ஏற்படுத்தியுள்ளது. கௌரவ முதலமைச்சர் அவர்கள், ஒரு நீதியரசரும் என்றவகையில் எனக்குத் திட்டமிட்டு இழைக்கப்பட்ட இந்த மிகப்பெரும் அநீதிக்கு உரிய தீர்வைப் பெற்றுத் தருமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

பொ.ஐங்கரநேசன்
அமைச்சர்
விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,கூட்டுறவு அபிவிருத்தி,
உணவு வழங்கல், நீர் வழங்கல்,நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சு,
வடமாகாணம்.

செய்தியாளர் நிபோஜன்

Related posts

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் , ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்

தேசத்திற்கு துரோகமிழைப்பதற்காக நான் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படவில்லை – ஜனாதிபதி

කුසුම් පීරිස් මහත්මියගේ අවසන් කටයුතු අද