(UDHAYAM, COLOMBO) – இரணைத்தீவு மக்கள் தங்களின் பூர்வீக நிலத்தில் வாழவேண்டும் என்று கோரி மே மாதம் முதலாம் திகதி கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வறுமையில் இருக்க தீவில் உள்ள மக்களின் வாழ்வாதார வளங்கள் திருடப்பட்டு வருகிறது என சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாக கவனயீர்ப்பில் ஈடுப்பட்டு வரும் மக்களை சென்று சந்தித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
இரணைத்தீவு மக்களின் பிரச்சினைகளை தீர்த்துக்கொள்வதற்கு அரசியல் எல்லைகளை கடந்து அனைத்து அரசியல்வாதிகளும் முன்வரவேண்டும். ஏறக்குறைய 300 வருடங்கள் பழமை வாய்ந்த ஊர் தங்களின் இரணைத்தீவு என மக்கள் தெரிவிக்கின்றனர். ஆண்களுக்கு மட்டுமல்ல பெண்களுக்கு வாழ்வாதாரம் வழங்க கூடிய தொழில் முறைகள் மிக நீண்ட காலமாக இரணைத்தீவில் காணப்பட்டு வந்துள்ளது. அத்தோடு அங்குள்ள மக்களின் கால்நடைகள் தற்போது திருடப்பட்டு வெளியே கொண்டு செல்லப்படுகிறது, மக்களின் காணிகளில் பறிக்கப்படுகின்ற தேங்காய்கள், வீட்டு உபகரணங்கள் என்பன தீவில் இருந்து கடத்தப்படுகிறது என மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இரணைத்தீவுக்குச் சொந்தமான எங்களை அனுமதிக்க மறுக்கும் கடற்படையினர் திருட்டு கும்பல்களுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என மக்களால் குற்றம் சுமத்தப்படுகிறது. எனவே எமது மக்கள் தங்களுடைய சொந்த நிலத்தில் நிம்மதியாக வாழ்வதற்குரிய சூழல்நிலைகள் ஏற்படுத்தப்படவேண்டும். மக்களின் பூர்வீக நிலங்கள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கின்றோம், அதற்காக மக்கள் மேற்கொள்ளும் நியாயமாக போராட்டங்களில் எப்பொழுதும் நாம் பங்காளியாகவே இருப்போம் எனத் தெரிவித்த சந்திரகுமார்
தாங்கள் தங்களின் சொந்த நிலத்திலேயே நல்லடக்கம் செய்யப்படவேண்டும் என இரணைத்தீவு மக்களில் உள்ள முதியவர்கள் தெரிவிக்கின்றனர். மிக நீண்ட காலமாக இரணைத்தீவில் வாழ்ந்த மக்களில் சிலர் தங்களின் நிலத்தை கத்தோலிக்க குருமார்களிடம் கையளித்த சான்றிதழ்களை கூட தற்போதுமு; வைத்திருக்கின்றனர். எனவே இரணைத்தீவு மக்களின் நியாயமான போராட்டத்திற்கு உரிய தீர்வை அரசு விரைவாக வழங்கவேண்டும் எனவும் தெரிவித்த அவர் இரணைத்தீவு மக்கள் தாங்கள் இந்த போராட்டத்திற்கு நியாயமான போராட்டத்திற்கு தீர்வு கிடைக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்றும் தெரிவித்தனர்.
எஸ்.என்.நிபோஜன்