வகைப்படுத்தப்படாத

வட மாகாணத்தில் இன்று தொடக்கம் மழை?

(UDHAYAM, COLOMBO) – வறட்சியான காலநிலை நிலவும் வட மாகாணத்தில் இன்று தொடக்கம் மழை பொழியக்கூடும் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும், தென்மேற்கு பகுதிகளில் நிலவும் மழை வீழ்ச்சி எதிர்வரும் 10ம் திகதியின் பின்னர் குறைவடைக்கூடும் என அதன் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் அதுல கருணாரட்ன தெரிவித்திருந்தார்.

இதேவேளை, நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி காரணமாக இரண்டு லட்சத்து எண்ணாயிரத்து 660 குடும்பங்களைச் சேர்ந்த எட்டு லட்சத்து 4 ஆயிரத்து 831 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மையம் இதனை அறிவித்துள்ளது.

எட்டு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் 213 பேர் உயிரிழந்ததுடன், 149 பேர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன், 77 பேர் தொடர்ந்தும் காணாமல் போயுள்ளனர்.

இந்த நிலையில், தேசிய கட்டிட ஆய்வு  பணிமனையால் 7 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்தும் மண்சரிவு எச்சரிக்கை நிலவுகிறது.

இதேவேளை, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்கின்ற போதும், வடமாகாணத்தின் பல மாவட்டங்களில் வறட்சியான காலநிலை நிலவுகிறது.

இதனால் 33 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த ஒரு லட்சத்து 21 ஆயிரம் பேர் வரையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அதிகபடியான பாதிப்பு யாழப்பாணத்தில் ஏற்பட்டுள்ளது.

அங்கு மருதங்கேணி, காரைநகர், சண்டிலிப்பாய், சங்கத்தானை மற்றும் வேலனை போன்ற பகுதிகளில் அதிக வறட்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Related posts

எரிவாயு குழாய் வெடித்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் உயிரிழப்பு

வீடுகளில் சூரிய மின்கலத் தொகுதிகளை அமைக்க குறைந்த வட்டியில் கடன்

Australian High Commissioner calls on Raghavan