(UDHAYAM, COLOMBO) – வெள்ளம் மற்றும் மண்சரிவினால் அழிவுற்ற வீடுகளை மீள நிர்மாணிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுக்கும் திட்டத்துக்கு அமெரிக்க அரசாங்கம் 350 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பு செய்துள்ளது.
ஜனாதிபதியின் உத்தியோபூர்வ இல்லத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேஷாப் உள்ளிட்ட பிரதிநிதிகளால் குறித்த நன்கொடை நேற்று உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.
மேலும் நாட்டிலுள்ள இளைஞர், யுவதிகளின் நிபுணத்துவ ஆற்றலை மேம்படுத்துவதற்காக 12 மில்லியன் டொலரை வழங்குவதற்கு அமெரிக்க அரசாங்கம் விருப்பம் தெரிவித்துள்ளது.
நான்கு ஆண்டுகளில் அந்த உதவியை மேற்கொள்ள இருப்பதாக அமெரிக்க தூதுவர் இதன்போது குறிப்பிட்டார்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட களுத்துறை மாவட்ட பாடசாலைகளை துப்பரவு செய்வதில் அமெரிக்க பிரதிநிதிகள் ஈடுபட்டிருப்பதாகவும் அந்த செயற்பாடு தொடர்ந்து இடம்பெறுமென்றும் அமெரிக்க தூதுவர் மேலும் தெரிவித்தார்.