(UDHAYAM, COLOMBO) – மண்சரிவு எச்சரிக்கை காரணமாக களுத்துறை – புளத்சிங்கள – திப்பொட்டாவ மலை பகுதியில் இருந்து 22 குடும்பங்கள் வெளியேற்றப்பட்டுள்ளன.
நேற்று இரவு அவர்கள் வெளியேற்றப்பட்டதாக புளத்சிங்கள பிரதேச செயலகம் குறிப்பிட்டுள்ளது.
அங்கிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் தற்போது பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ஏழு மாவட்டங்களுக்கான அனர்த்த எச்சரிக்கை மேலும் 24 மணித்தியாலங்களால் நீடிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரத்தினபுரி, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, ஹம்பந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்கின்றது.
குறித்த மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் அபாயகரமான பகுதிகளில் வசிக்கும்பட்சத்தில் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டிட ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மேல், சப்ரகமுவ, மத்திய வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் இன்று மாலை மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.