(UDHAYAM, COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக நாடுமுழுவதும் 14 மாவட்டங்களில் 100 பேர் உயிரிழந்ததுடன் 99 பேர் காணாமல் போயுள்ளனர்.
அத்துடன், இரண்டு லட்சத்து 7 ஆயிரத்து 90 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்தங்கள் காரணமாக இரத்தினபுரியில் 46 பேரும், களுத்துறையில் 38 பேரும், மாத்தறையில் 11 பேரும், கம்பஹாவில் 2 பேரும், கேகாலையில் 02 பேரும் மற்றும் ஹம்பாந்தோட்டையில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பு, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா, கண்டி, மாத்தளை, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மட்டக்களப்பு முதலான மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறித்த 14 மாவட்டங்களிலும், வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று உள்ளிட்ட அனர்த்தங்கள் காரணமாக 51 ஆயிரத்து 899 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், 2 ஆயிரத்து 937 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்துக்கும் அதிகமானோர் 69 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நாடுமுழுவதும் பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்குப் பணிகளில் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொண்டு வருகின்றனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்குத் தேவையான படகுகளை வழங்க கடற்றொழில் அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை, நில்வள கங்கை பெருக்கெடுத்ததன் காரணமாக மாத்தறை – பண்டத்தர உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களை அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாதுகல, பண்டத்தர, வடகெதர, மதுகல, வெல்ல, பிலதுவ மற்றும் வேரகம்பிட்டிய பகுதிகளில் உள்ள மக்களுக்கே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, காலி தெனியாய பகுதியில் ஏற்பட்ட மணிசரிவு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து தடைபட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மொரவக்கந்த பகுதியில் ஏற்பட்ட இந்த மண்சரிவு காரணமாக பலர் காணாமல்போயுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த சில நாட்களாக தொடரும் மலை காலநிலை ஓரளவு குறைவடைந்தாலும், பருவப் பெயர்ச்சி காலநிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, தெற்கு, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என்றும் எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, கடற் பிராந்தியங்களில் காற்றுடன்கூடிய மழைதொடரும் என்றும், காற்றின் வேகம் 40 முதல் 50 கிலோமீற்றராக காணப்படுபடும் என்பதால், கடற்றொழிலில் ஈடுபடுபவர்கள் அவதானமாக இருக்க வேண்டும் வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது.