(UDHAYAM, COLOMBO) – ஆசிரியர் உதவியாளர்களின் மாதாந்த கொடுப்பனவை உடனடியாக பத்தாயிரமாக அதிகரிக்காவிட்டால் ஆசிரியர்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதை தவிர்க்க முடியாது என மத்திய மாகாணசபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஏப்ரல் மாத முதல் வாரத்தில் உதவி ஆசிரியர்களின் மாதாந்த கொடுப்பனவை பத்தாயிரம் ரூபாவாக அதிகரித்து கொடுப்பதாக கல்வி அமைச்சு அறிவித்தது. அது புதுவருட சம்பளத்தை வழங்கி முடித்த அடுத்த தினம் இவ் அறிவிப்பு வெளியானது. கல்வி அமைச்சு திறந்த மனதுடன் செயற்படுவதாக இருந்தால் புதுவருட கொடுப்பனவுடன் அதிகரிக்கப்பட்ட தொகையை சேர்த்து வழங்கியிருக்கலாம். ஆனால் இக்கொடுப்பனவை மே மாத சம்பளத்துடன் அதுவும் கடந்த பெப்ரவரி மததத்திலிருந்து நிலுவையுடன் வழங்குவதாக அறிவித்து நாட்பது நாள் கால அவகாசத்தையும் எடுத்துக்கொண்டனர். இப்போது இராஜாங்க கல்வி அமைச்சர் வே. ராதாகிருஸ்னன் இந்த விடயத்தை மாகாண சபையின் தலையில் கட்டிவிட்டு தப்ப முயற்சிக்கிறார்.
மாகாண சபைகள் மத்திய அரசாங்கம் வழங்கும் நிதியை பெற்று அரச ஊழியர்களுக்கு சம்பளத்தை வழங்குகின்றது. ஆனால் உதவி ஆசிரியர்களுக்கு அதிகரிக்கப்பட்ட 4000 ம் ரூபா கொடுப்பனவுக்குரிய நிதி திறைசேரியினால் இதுவரையில் மாகாண சபைகளுக்கு அனுப்பவில்லை. இந் நிலையில் மாகாண சபைகளால் எவ்வாறு அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவை வழங்க முடியும்.
தற்போதய கல்வி ராஜாங்க அமைச்சர் இரண்டு தசாப்தங்களாக மாகாண சபை உறுப்பினராகவும் மாகாண கல்வி அமைச்சராகவும் இருந்திருக்கிறார். இவருக்கு இந்த விடயம் தெரியவில்லையா? அல்லது இயலாமைக்கு ஏதாவது காரணம் தேடுகிறாரா?
ஆசிரியர் உதவியாளர் தொழில் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானினால் கடந்த அரசாங்கத்தில் பெற்றுக் கொடுக்கப்பட்டது என்பதனால் அந்த ஆசிரியர்கள் பழிவாங்கப்படுகிறார்களா? என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது. அவர்களின் ஒவ்வொரு பிரச்சினையையும் போராடி தீர்க்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உதவி ஆசிரியர்களை ஆசிரியர் பயிற்சி கல்லுரிகளுக்கு உள்வாங்க மறுத்ததினால் அதற்காக நாம் களத்தில் இறங்கி இவர்களின் நியாயமான உரிமையை பெற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதே போல அதிகரிக்கப்பட்ட 4000ரூபா கொடுப்பனவை உடனடியாக நிலுவையுடன் வழங்காவிட்டால் உதவி ஆசிரியர்களை இணைத்துக்கொண்டு போராட வேண்டிய நிலையே உருவாகும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.