புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தேசிய மக்கள் சக்தி தொடர்ந்தும் கதைகளை கூறி படங்களை காட்டிக் கொண்டிருப்பதில் பலனில்லை.
பகிரங்கமாக மக்களுக்கு உண்மைகளைக் கூறி செயலில் இறங்க வேண்டும் என தமிழ்த் தேசிய கட்சியின் செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று (28) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ் விடயம் தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்..
எமது மக்கள் கஷ்டப்படுகிற துன்பப்படுகிற போது எல்லாம் நாம் மக்களுக்காகவே குரல் கொடுத்து வந்திருக்கிறோம்.
ஆனால் முன்னர் ஜேவிபி என்கிற கட்சியானது எமது மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருந்து பல குழப்பங்களைச் செய்து வந்திருந்தனர்.
குறிப்பாக சுனாமி அனர்த்தத்தின் பின்னரான மீட்பு நடவடிக்கை காலத்தில் இந்த ஜேவிபியினர் செய்தவை எதனையும் எமது மக்கள் மறக்கவில்லை.
ஆனால் இன்றைக்கு அதே ஜேவிபியினர் தான் தேசிய மக்கள் சக்தியாக புது அவதாரம் எடுத்து வந்திருக்கின்றனர்.
குறிப்பாக மாற்றம் என்று சொல்லி வந்த இவர்கள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றனர் எனப் பார்க்க வேண்டும்.
அதிலும் ஊழல் முறைகேடுகள் அதிகார துஸ்பிரயோகங்கள் திருட்டுக்கள் எனப் பலதைப் பற்றி பேசியும் பலரையும் தம்முடன் இணைத்துக் கொண்டு மிகப் பெரிய வெற்றியை பெற்றுக் கொண்டவர்கள் இப்போது பேசுவதையும் செயற்பட்டு வருவதையும் உரிய முறையில் அவதானிக்க வேண்டும்.
குறிப்பாக பொய்யையும் புரட்டையும் வைத்து எத்தனை நாளுக்குத் தான் தொடர்ந்தும் பயணிக்க முடியும்.
அவை அனைத்தும் வெளியே வருகிற போது என்ன செய்யப் போகின்றனர் எனத் தெரியவில்லை.
ஆக மொத்தத்தில் முன்னர் பல்வேறு குழப்பங்களைச் செய்து கொண்டிருந்த இந்த ஜேவிபியினர் இப்போது ஆட்சிக்கு வந்து என்னத்தைச் செய்து இருக்கின்றனர்.
மாற்றம் என்று சொல்லிக் கொண்டு ஆட்சிக்கு வந்தவர்கள் ஏற்படுத்திய மாற்றம் தான் என்ன? இதனை மக்கள் உணர்கின்ற போது மீண்டும் பொய்கதைகளை கூறி படங்காட்ட முடியாது என்றார்.