அரசியல்உள்நாடு

இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிடத் தயாராக வேண்டும் – ரணில்

வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. எதிர்க்கட்சிகளின் ஆரோக்கியமான விமர்சனங்கள் வரவேற்கத்தக்கவை. ஆனால் அவை சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்கு அப்பாற்பட்டவையாக இருக்கக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை (19) வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

எதிர்க்கட்சிகள் பொதுவாக ஒரு அரசாங்கத்தைப் புகழ்ந்து பேசப் போவதில்லை என்றாலும், சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்குள் இருந்து விமர்சனம் செய்ய வேண்டும்.

அரசாங்கத்துக்கோ அல்லது எதிர்க்கட்சிக்கோ சர்வதேச நாணய நிதியத்தின் கட்டமைப்பிற்கு அப்பால் செயற்படுவதற்கு முடியாது.

2024 ஆம் ஆண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி இரண்டு சதவீதமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. அந்த வளர்ச்சி வீதத்தை இன்னும் அதிகரிக்க விரும்பினேன்.

எனவே, ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே திறன் பயன்பாட்டை அதிகரிக்க மக்கள் மற்றும் வணிகர்களால் நாங்கள் ஊக்குவிக்கப்பட்டோம்.

இதன் காரணமாக நமது பொருளாதார வளர்ச்சி வீதம் இன்று ஐந்து சதவீதத்தை எட்டியுள்ளது. அதற்காக உழைத்த நிதி அமைச்சு, மத்திய வங்கி மற்றும் ஜனாதிபதி அலுவலக அதிகாரிகள் ஆகிய அனைவருக்கும் நான் நன்றி கூறுகின்றேன்.

நாட்டின் திறன் பயன்பாட்டை அதிகரிக்க உழைத்த ஏனைய அனைவருக்கும் நாம் நன்றி கூற வேண்டும்.

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி அதிகரித்துள்ளதால், அதில் ஒரு பகுதியை வரி வருமானமாகப் பெற்றுள்ளோம். அதுவும் எமது வருமானம் அதிகரிப்பதற்கு வழிவகுத்தது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் ஊடாகவே இவற்றை அடைய முடிந்தது. எனவே, அந்த ஒப்பந்தத்தை முன்னெடுத்துச் சென்று பாதுகாக்க வேண்டியது அவசியம்.

அரசாங்கமோ அல்லது எதிர்க்கட்சியோ இந்த உடன்படிக்கையை விட்டு வெளியேற முடியாது. அவ்வாறு செய்தால் நாட்டில் மீண்டும் பொருளாதாரப் பிரச்சினைகள் உருவாகும்.

தற்போது இலங்கை வங்குரோத்து நிலையிலிருந்து மீண்டுள்ளது என்ற அறிவிப்பை வெளியிடத் தயாராக வேண்டும். அதன் பிறகு, வங்கிகளால் தேவையான நிவாரண நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

மக்களுக்கும் விரைவில் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். வருமான வரி செலுத்தும் வரம்பு ஒரு இலட்சத்தில் இருந்து ஒரு இலட்சத்து ஐம்பதாயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதை இரண்டு இலட்சத்துக்கும் கொண்டு செல்ல நாணய நிதியத்துடன் விவாதித்தேன். அதற்கு அவர்கள் சம்மதிக்கவில்லை. பொருளாதாரம் வலுப்பெற்றவுடன் நாம் அதற்கேற்ப செயல்பட்டு அதிக சலுகைகளை வழங்க வேண்டும்.

அரசாங்கம் இந்த திட்டத்திலேயே இருக்க வேண்டும். இதில் இருந்து வெளியேற வழி இல்லை. சுபீட்சமான காலமானாலும், கூடாத காலமானாலும் நாம் இந்த திட்டத்தையே தொடர வேண்டும்.

வீண் விமர்சனம் செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை என்பதை எதிர்க்கட்சியினரிடம் கூறுகிறேன். எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களை ஏற்றுக் கொள்கின்றேன். அது ஒரு பிரச்சனை இல்லை.

பொதுவாக, எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தைப் புகழ்ந்து பேசுவதில்லை. ஆனால் நாணய நிதிய ஒப்பந்தத்தின் கட்டமைப்பிற்குள் இந்த விமர்சனங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

-எம்.மனோசித்ரா

Related posts

இலங்கைக்கான நிதி ஆலோசனைகளை வழங்க முன்வந்துள்ள 3 சர்வதேச நிறுவனங்கள்

நாட்டில் அதிக வெப்பம் – பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இரு நாட்களில் டீசலுக்கான தட்டுப்பாடு நீங்கும்