மஸ்கெலியாவில் இருந்து ஹங்குராங்கெத்த பகுதியை நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்ததில் சாரதி மற்றும் உதவியாளர் படுகாயமடைந்துள்ளனர்.
மஸ்கெலியாவில் இருந்து ஹங்குராங்கெத்த நோக்கி சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று நோர்டன்பிரிட்ஜ் கினிகத்தேன பிரதான வீதியின் தப்லோ ஹுலாங் வளைவு பகுதியில் சுமார் 150 அடி பள்ளத்தில் விழ்ந்ததில் டிப்பர் வாகனத்தின் சாரதியும், உதவியாளரும் படுகாயமடைந்து நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
சாரதியின் கவனமின்மை காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும், குறித்த டிப்பர் ரக வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நோர்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி டிப்பர் விபத்துக்குள்ளான அதே இடத்தில் கடந்த வருடம் சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற பஸ் ஒன்று குறித்த பகுதியில் விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த மூன்று யாத்திரிகர்கள் உயிரிழந்ததாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
-க.கிஷாந்தன்