தனக்கு கலாநிதி பட்டம் இருப்பதாக கூறி மக்களையும் அரசாங்கத்தையும் ஏமாற்றிய தற்போதைய சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி இன்று (13) நடவடிக்கை எடுத்தது.
தற்போதைய சபாநாயகர் கடந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பும், 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் சந்தர்பபத்திலும், பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டு கௌரவ சபாநாயகர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்ட சந்தர்ப்பத்திலும், சபாநாயகராக பதவியேற்ற பின்னரும், அவருக்கு இல்லாத மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் இரசாயன பொறியியலில் BSc பட்டம், ஜப்பானில் உள்ள வசேடா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றிருப்பதாக குறிப்பிட்டு அவரது பெயருடன் கலாநிதி என்ற பிரயோகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாலும், இது தொடர்பில் மக்களிடம் இருந்து ஆட்சேபனை எழுந்த சந்தர்ப்பத்திலும், இது தொடர்பான தகவல் கேட்ட போது மௌனம் காத்து, உண்மையை மறைத்துள்ள காரணங்களினால் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான நடத்தைக் கோவை 3 ஆவது பகுதியில் பிரிவு 6 இன் பிரகாரமும், அந்த நடத்தைக் கோவையின் 5 ஆவது பிரிவின் நெறிமுறைகளின் பிரகாரம் உள்ள நடத்தை விதிகளின்படி மேற்படி விதிகள் மீறப்பட்டுள்ளமையால் மற்றும் பாராளுமன்றம், அரசியலயைப்பு மற்றும் அவரால் நேரடியாகத் தலைமை தாங்கப்படும் ஏனைய உயரிய நிறுவனங்களினதும் நம்பிக்கையை மீறியுள்ளபடியால் இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை முன்வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, எதிர்க்கட்சியின் பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெ.சி.அலவத்துவல, அஜித் பீ பெரேரா, சுஜித் சஞ்சய் பெரேரா, சதுர கலப்பதி, ஜகத் விதான மற்றும் ஹர்ஷன ராஜகருணா ஆகியோர் கைச்சாத்திட்டனர்.