முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை நீக்குவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுன கொள்கை மையத்தில் இன்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மனித வள முகாமைத்துவ பிரதிப் பொலிஸ்மா அதிபரினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவுக்கு நேற்று (10) கடிதம் மூலம் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் இருந்து 116 பாதுகாப்பு உத்தியோகத்தர்களை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் குழுவில் உயர்தர பாதுகாப்பில் அனுபவம் வாய்ந்த அதிகாரிகள் அனைவரும் நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரபாகரன் என்ற சித்தாந்தம் கொண்டவர்கள் இதுவரை இல்லாதொழிக்கப்படாத நிலையில், அந்த பயங்கரவாதத்தை இல்லாதொழிக்க வழிவகுத்த முன்னாள் ஜனாதிபதியின் பாதுகாப்பை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுப்பது மிகவும் பாரதூரமான நிலை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.