வீசா விதிமுறைகளை மீறியதாக கூறி தப்லீக் பணியில் ஈடுபட்ட 8 இந்தோனேஷியர்களை நுவரெலியா பொலிஸார் கைது செய்த நிலையில், அவர்கள் தொடர்பில் விசாரணை நிறைவடையவில்லை என்பதால் அவர்களுக்கு பிணையளிக்க நீதிமன்றம் மறுத்தது.
அதனால் அவர்களை எதிர்வரும் 16 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட நீதிவான், அதற்குள் விசாரணைகளை நிறைவு செய்து மன்றுக்கு அறிவிக்குமாறு அறிவித்தார்.
இந்த வழக்கு இன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக விசாரணைக்கு அழைக்கப்பட்டது. இதன்போது, இந்தோனேஷியர்கள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் தலைமையில் சட்டத்தரணிகளான வஸீமுல் அக்ரம், ஷஹ்மி பரிட், சிந்தக்க மகநாராச்சி, சந்தீப கம எத்தி ஆகியோர் ஆஜராகினர்.
இதன்போது சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் சுமார் 30 நிமிடங்கள் வரை வாதங்களை முன்வைத்தார். குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 45 (1)அ பிரிவின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக தண்டனைக்குரிய குற்றம் புரிந்ததாக குற்றம் சுமத்த எந்த அடிப்படையம் இல்லை என வாதிட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், குடிவரவு குடியகல்வு 10ஆம் அத்தியாயம் பிரகாரம் எந்த குற்றமும் இங்கு நிகழவில்லை என சட்ட வியாக்கியானங்களுடன் எடுத்துக்காட்டினார்.
அத்துடன் பொலிஸார் குறித்த சட்டத்தின் 48ஆவது அத்தியாயத்தின் கீழ் தமது பொறுப்பை சரியாக செய்யவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அதனால் இந்த 8 பிரஜைகளையும் விடுவிக்க வேண்டும் எனக் கோரினார்.
அத்துடன் நீதிவான் கடந்த தவணையில் குடிவரவு குடியகல்வு சட்டத்தின் 47ஆவது அத்தியாயம் பிரகாரம் பிணை அதிகாரம் இல்லை என குறிப்பிட்ட போதும், நீதிவானுக்கு இந்த விவகாரத்தில் பிணை அதிகாரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தீர்க்கப்பட்ட வழக்கு விசாரணைகளை மையப்படுத்தி சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் வாதிட்டார்.
இந்த நிலையில் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த நிலையில், நீதிவான் வழக்கை 16ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.
-எப். அய்னா