உலகம்

சிரியாவின் முக்கிய நகரங்களை கைப்பற்றிய கிளர்ச்சிப் படைகள் – ஜனாதிபதி நாட்டை விட்டு வெளியேறினாரா ?

‘மோசமான ஆட்சியாளர்’ ஜனாதிபதி பஷார் அல் அசாத் சிரியாவை விட்டு வெளியேறிவிட்டார் என கூறியுள்ள கிளர்ச்சி படைகள், நாடு ‘விடுவிக்கப்பட்டது’ எனவும் அறிவித்துள்ளன.

ஒரு இருண்ட சகாப்தத்தின் முடிவு மற்றும் புதிய சகாப்தத்தின் ஆரம்பம் என்று டெலிகிராம் செயலியில் ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் கிளர்ச்சி குழு குறிப்பிட்டுள்ளது.

ஹயத் தஹ்ரிர் அல் ஷாம், அதன் தாக்குதலை ஒன்றரை வாரத்திற்கு முன்பு தொடங்கியதில் இருந்து, அவர்கள் சிரியாவின் முக்கிய நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்துள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் டமாஸ்கஸை கைப்பற்றியுள்ளதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் முக்கிய அரசு அலுவலகங்கள் செயல்படும் தலைநகர் டமாஸ்கஸின் மையப் பகுதியில் உள்ள உமையாத் சதுக்கத்தில் கொண்டாட்டங்கள் தொடங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிரிய பாதுகாப்பு அமைச்சக அதிகாரிகள் டமாஸ்கஸில் உள்ள தங்கள் தலைமையகத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

”ஆசாத்தின் அரை நூற்றாண்டு ஆட்சியில் சிரியாவில் இருந்து இடம்பெயர்ந்த அல்லது சிறையில் அடைக்கப்பட்ட மக்கள் இப்போது தாயகத்திற்கு மீண்டும் வரலாம். இது ஒரு புதிய சிரியாவாக இருக்கும், இங்கு அனைவருக்கும் அமைதி மற்றும் நீதியும் கிடைக்கப்பெறும்” என்று கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1970களின் தொடக்கத்தில் இருந்து கடந்த 54 ஆண்டுகளாக அசாத் குடும்பம் சிரியாவில் ஆட்சி புரிந்து வந்தது.

முன்னதாக சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸுக்குள் நுழைவதாக கிளர்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

“எங்கள் படைகள் டமாஸ்கஸுக்குள் நுழைய தொடங்கிவிட்டன”, என்று தங்களின் டெலிகிராம் செயலி கணக்கில் கிளர்ச்சியாளர்கள் குறிப்பிட்டனர்.

“ஒவ்வொரு பகுதியாக டமாஸ்கஸ் நகரை கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றிக்கொண்டு வருகின்றனர்”, என்று பிபிசியின் அமெரிக்கக் கூட்டு நிறுவனமாக சிபிஎஸ்ஸிடம் அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறினார்.

ஹோம்ஸ் நகரை “முழுமையாக விடுவித்த” பிறகு டமாஸ்கஸ் நகரை நோக்கி கிளர்ச்சியாளர்கள் வந்தனர்.

இஸ்லாமியவாத கிளர்ச்சிக் குழுவான ஹயத் தஹ்ரிர் அல் ஷாம் இதனை ஒரு “வரலாற்று சிறப்பு மிக்க தருணம்” என்று விவரித்துள்ளது.

இதனையடுத்து, சிரிய ஜனாதிபதி பஷார் அல் அசாத் டமாஸ்கஸ் நகரை விட்டு விமானத்தின் மூலம் புறப்பட்டதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இரண்டு சிரிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியிட்டுள்ளது. அவர் எங்கு சென்றார் என்பது குறித்து இன்னும் தெரியவில்லை.

டமாஸ்கஸ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஒரு தனியார் விமானத்தில் ஜனாதிபதி அசாத் ஏறி சென்றிருக்கலாம் என்றும் விமானம் புறப்பட்ட பின்னர், விமான நிலையத்தில் இருந்த சிரிய அரசின் பாதுகாப்புப் படைகள் வெளியேறினர் என்றும் தி சிரியன் அப்சர்வேட்டரி ஃபார் ஹ்யூமன் ரைட்ஸ் தெரிவித்தது.

மேலும் டமாஸ்கஸ் நகரின் மையப்பகுதியில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது.

கிளர்ச்சியாளர்களின் படைகள், பார்சேவுக்கு அருகே இருப்பதாகவும், அங்கு மோதல்கள் நடைபெறுவதாகவும் அந்த பகுதியில் வசிக்கும் ஒருவர் சிஎன்என் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

“மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, இணைய சேவை மிகவும் குறைவாக உள்ளது, மக்கள் தங்கள் வீடுகளில் தங்கியுள்ளனர்”, என்று அந்த நபர் தெரிவித்துள்ளார்.

“மிகவும் சத்தமாக துப்பாக்கிச் சூடு நடந்தது அது எங்கிருந்து வருகிறது என்பது உடனடியாகத் தெரியவில்லை”, என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அப்பகுதியில் வசிக்கும் இருவரை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.

சிரியா அரசுக்கு எதிராக பல ஆண்டுகளாக இல்லாத அளவிலான மிகப்பெரிய தாக்குதலை கிளர்ச்சிக்குழுக்கள் ஒரு வாரத்திற்கு முன்பு தொடங்கின.

சிரியாவில் நடக்கும் மோதலில் நீண்ட காலமாக ஈடுபட்டு வரும், இஸ்லாமிய ஆயுதக் குழுவான ‘ஹயாத் தஹ்ரிர் அல்-ஷாம் (Hayat Tahrir al-Sham- HTS)’ தலைமையில் இந்த திடீர் தாக்குதல் நடந்துள்ளது.

ஏற்கனவே கடும் பதற்றம் நிலவி வந்த சூழலில், கடந்த வாரம் கிளர்ச்சியாளர்கள் சிரியாவின் அலெப்போ மற்றும் இட்லிப் பகுதிகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

அலெப்போ மற்றும் தலைநகர் டமாஸ்கஸுக்கும் நடுவே ஹமா நகர் அமைந்துள்ளது. இந்த பகுதியினை டிசம்பர் 5ஆம் திகதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றினர்.

இது ஜனாதிபதி அசாத்திற்கு இரண்டாவது மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்பட்டது.

மேலும் கிளர்ச்சிபடைகள் ஹோம்ஸ் நகரையும், தெற்கு சிரியாவின் டெரா பிராந்தியத்தில் உள்ள பெரும்பான்மை பகுதிகளையும் கைப்பற்றினர்.

இதனையடுத்து அவர்கள் இன்று (டிசம்பர் 8) தலைநகர் டாமஸ்கஸையும் கைப்பற்றியுள்ளனர்.

Related posts

மலேசிய முன்னாள் பிரதமர் குற்றவாளி என நிரூபணம்

உலக சுகாதார அமைப்பிற்கு வழங்கிய உதவிகளை நிறுத்தியது அமெரிக்கா

சூடானில் அவசர நிலை