தென்கிழக்கு வங்காள விரிகுடா கடலில் உருவாகியுள்ள தாழுமுக்க மண்டலம் எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையுமென எதிர்பாரக்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இது எதிர்வரும் டிசம்பர் 11ஆம் திகதியளவில் இலங்கை – தமிழ்நாடு கரைக்கு அருகாமையாக தென்மேற்கு வங்காள விரிகுடா கடலை அடைய அதிக வாய்ப்புள்ளது.
இந்த தொகுதியின் தாக்கம் காரணமாக, டிசம்பர் 10 ஆம் திகதி முதல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழை நிலைமைகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதுடன், வடகீழ் பருவ மழை நிலை படிப்படியாக நாடு முழுவதும் நிலைகொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை இன்றையதினம் (08) நாட்டின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, நுவரெலியா, கண்டி மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ. வரையான ஓரளவு பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது .
மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல், வடமேல் மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும்.
இடியுடன் கூடிய மழை வேளைகளில் ஏற்படும் தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
கடற்றொழிலாளர்களுக்கு அவதானம்
வங்காள விரிகுடா கடற்பகுதியில் செயற்படும் கடல்சார் தொழில்களில் ஈடுபடுவோர் மற்றும் மீனவ சமூகத்தினர் இது பற்றி வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் முன்னெச்சரிக்கைகள் மற்றும் அறிவிப்புகள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறு கோரப்பட்டுள்ளளர்.