மதுபான விற்பனை அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்த கட்டணத்தை அதிகரித்து கடந்த அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை உயர் நீதிமன்றம் இன்று (6) பிறப்பித்துள்ளது.
இலங்கை மதுபான விற்பனை அனுமதிப்பத்திர உரிமையாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதியளித்து ஏ.எச்.எம்.டி.நவாஸ், குமுதுனி விக்கிரமசிங்க மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மதுபான விற்பனை உரிமையாளர்கள் சங்கத்தினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதிகளாக நிதி அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 1/2024 ஊடாக மதுபான அனுமதிப்பத்திரத்துக்கான வருடாந்தக் கட்டணத்தை ரூபா 20 மில்லியனாக உயர்த்தியதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த வருடாந்த அனுமதிப்பத்திர கட்டண உயர்வினால் தமக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளதாகவும் தமது அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் தீர்ப்பளிக்குமாறு கோரியே அவர்கள் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
மேலும், 2017ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் அனுமதிப்பத்திர கட்டணத்தை அறவிட உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.