அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
நேற்று (05) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவாகியுள்ளது.
இந்த அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம், ஒவ்வொரு ஆண்டும் மிகக் குறைவான எண்ணிக்கையில் மட்டுமே பதிவாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பெர்ன்டேலின் மேற்கு மற்றும் தென்மேற்கு பகுதியின் 100 கி.மீ., தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ., ஆழத்தில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் குலுங்கின. பொதுமக்கள் வீடுகளை விட்டு வீதிகளில் தஞ்சம் அடைந்தனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதால், பொதுமக்கள் பீதி அடைந்தனர்.
பெரிய அளவில் கடல் கொந்தளிப்பு இல்லாத நிலையில், சிறிது நேரத்துக்கு முன்னர் சுனாமி முன்னெச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளது.