மலையக மக்களின் வீடு, காணி மற்றும் சம்பளப் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் நிச்சயம் நிரந்தர தீர்வு வழங்கப்படும் என்று பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அம்பிகா சாமுவேல் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (04) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மலையக மக்களின் பிரதிநிதியாக தன்னை பாராளுமன்றம் அனுப்பிவைத்த மக்களுக்கும், தனக்கு வாய்ப்பளித்த தேசிய மக்கள் சக்திக்கும் அவர் நன்றிகளைத் தெரிவித்தார்.
மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டுவந்துள்ளனர் எனவும், நிரந்தர தீர்வுகளுக்கு பதிலாக அவர்களுக்கு தற்காலிக தீர்வுகளே வழங்கப்பட்டுள்ளன எனவும், நிரந்தர தீர்வுகளை காண்பதே தனது நோக்கம் எனவும் தனது 1ஆவது பாராளுமன்ற உரையில் அம்பிகா விவரித்தார்.
மலையகத் தமிழர்கள் என்ற அடையாளத்துடன் இலங்கையர் என்ற ரீதியில் எமது மக்கள் தேசிய நீரோட்டத்தில் இணைக்கப்பட்டு கல்வி, விளையாட்டு உட்பட அனைத்து துறைகளிலும் எமது சமூகமும் பிரகாசிக்க வேண்டும். இதற்குரிய வாய்ப்பை தேசிய மக்கள் சக்தி பெற்றுக்கொடுக்கும்.
அதேபோல கல்வி, சுகாதாரம் போன்ற பிரச்சனைகளுக்கும் உரிய தீர்வு வழங்கப்படும் எனவும் அம்பிகா மேலும் குறிப்பிட்டுள்ளார். ஹட்டன் பிரகடனத்தில் சில தீர்வு முன்மொழிவுகள் முன்வைக்கப்பட்டுள்ளன எனவும் அம்பிகா சுட்டிக்காட்டினார்.