சீரற்ற வானிலை காரணமாக ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
கடும் மழையினால் அனுராதபுரம் மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் 10 வான் கதவுகள் திறக்கப்பட்டதன் ஊடாக வினாடிக்கு 11,800 கன அடி நீர் கலா ஓயாவிற்கு திறந்து விடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அங்கமுவ நீர்த்தேக்கத்தின் வான்கதவுகளை மூடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழை காரணமாக நோர்டன்பிரிட்ஜ் விமலசுரேந்திர நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளது.
காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாக்கலை நீர்த்தேக்கங்களின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்கள் வான் பாயும் மட்டத்தை நெருங்கி வருவதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
விமலசுரேந்திர, கெனியோன், லக்ஷபான, நியூ லக்ஷபான மற்றும் பொல்பிட்டிய ஆகிய இரண்டு நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் அதிகரித்துள்ளதையடுத்து, அவற்றின் அதிகபட்ச கொள்ளளவிற்கு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதாக நீர்மின் நிலையங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.