கடந்த பாராளுமன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கும், தனக்கும் கனிசமானளவு வாக்குகளை வழங்கி வெற்றிக்கு வழிவகுத்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக இறக்காமம் பிரதேசத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அஷ்ரப் தாஹிர் நேற்று (23) விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது கட்சியின் இறக்காமம் பிராதான காரியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் கட்சிக்கும் தனக்கும் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறியதுடன், கடந்த காலங்களைவிட இம்முறை நமது கட்சிக்கு இப்பிரதேசத்திலிருந்து கனிசமானளவு வாக்குகள் கிடைத்திருப்பதாகவும் எதிர்காலத்தில் இறக்காமம் பிரதேச சபையை நமது கட்சி கைப்பற்றி ஆட்சியமைக்கவிருப்பதாகவும் எதிர்வு கூறியிருந்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் நமது நாட்டு மக்கள் மாற்றம் வேண்டி புதிய ஜனாதிபதி உட்பட புதிய அரசாங்கத்தினை கொண்டு வந்திருக்கின்றது.
இப்பொழுது இருக்கின்ற அரசாங்கம் வாக்களித்தவர்கள், வாக்களிக்காதவர்கள் என்ற பாகுபாடுகளின்றி சேவையாற்ற வேண்டிய பொறுப்பில் இருக்கின்றது.
அதே போன்று இந்த அரசாங்கத்தின் நல்ல விடயங்களை ஆதரித்தும் நம் சமூகம்சார் உரிமைகளுக்கு உயரிய சபையில் குரல் கொடுத்தும் தன் பணிகளை முன்னெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
பின்னர் இறக்காமம் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தி கடந்த பராளுமன்ற தேர்தலில் சக வேட்பாளராக போட்டியிட்டிருந்த முனாஸ் மற்றும் இறக்காமம் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் ஜெமீல் காரியப்பர் ஆகியோருடனான சினேகபூர்வ சந்திப்பிலும் பாராளுமன்ற உறுப்பினர் ஈடுபட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
-எஸ். சினீஸ் கான்